வடக்கே போகும் ரயில் – 3

(தொடர்ச்சி – இறுதிப் பகுதி)

… மக்கள் நலப்பணிகளை நிறைவேற்றுகையில் சாலை ஓரத்தில், ப்ராஜக்ட் இடத்தின் நடுவில் வளர்ந்திருக்கும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். நன்கு வளர்ந்து நிற்கும் மரங்களை வேரோடு பெயர்த்து வேறு இடத்தில் மீண்டும் நடும் `டெக்னிக்` பற்றிய பேச்சு வந்தது. 1995-லேயே தமிழ்நாட்டில் இதனை செய்திருக்கிறார்கள் என்றார். ஒரு ப்ராஜக்ட்டுக்காக பெரிய மரங்களை ஒரு இடத்திலிருந்து அப்புறப்படுத்தி மீண்டும் வேறு இடத்தில் நட்டிருந்தார்கள். இரண்டு மூன்று வருடங்களில் அந்தப் புதிய இடத்தில், இடமாற்றம் செய்யப்பட்ட மரங்கள் வளர்ந்து தழைத்திருந்ததைப் பார்க்க எங்களைத் தமிழ்நாட்டு அதிகாரிகள் அழைத்திருந்தார்கள். போய்ப்பார்த்தோம். மரங்கள் மீண்டும் மண்பிடித்து வளர்ந்திருந்தவிதம் அந்த professional job-ஐ மிக நன்றாகச் செய்திருந்தார்கள் என்று காண்பித்தது என்றார். ஜப்பானில் மரங்களை அகற்றி மீள்-நடுதல் (re-planting of trees), techniques in growing trees போன்ற விஷயங்களை நானறிந்தவகையில், லேசாக அவரிடம் பகிர்ந்துகொண்டேன். இந்தியாவின் பல இடங்களில் 20-30 வருடம் வளர்ந்த ஜாதி மரங்களையும் நாங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றி re-planting செய்துள்ளோம். என்றார். அப்போது நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு குறித்து நினைவு கூர்ந்தார்.

”ஒருமுறை ஒரு on-going project-க்காக அந்த இடம் சுத்தம் செய்யபட்டு சமநிலைக்கு கொண்டுவரப்படவேண்டியிருந்தது. புதர்கள், சிறு செடிகளோடு அங்கு வளர்ந்திருந்த அந்த மூன்று இளம் மரங்களையும், வெட்டி அகற்ற முடிவு செய்திருந்தோம். வேறு வழியில்லை. எங்களின் முடிவு தெரிந்தவுடன், பக்கத்துக் கிராம மக்கள் உடனே எதிர்ப்புத் தெரிவிக்க ஓடிவந்தார்கள். அந்த மரங்களை `வெட்டவிட மாட்டோம்` என்று கூச்சலிட்டார்கள். அதற்கு வலுவான காரணமும் அவர்களிடம் இருந்தது. அந்த மரங்கள் ஒரு விசேஷக் கலவையாக ஒன்றோடு ஒன்று பின்னி வளர்ந்திருந்தன. அவை ஒரு அரச மரம், ஒரு வேப்பமரம், ஒரு வில்வமரம்! என்ன ஒரு rare combination! அந்த ஊர்க்காரர்கள் `இதுல மட்டும் ஒங்க கைய வச்சீங்க, நீங்க தொலைஞ்சீங்க! நாங்க கும்பிட்ர சாமி இது, ஜாக்ரதை!` என்று மிரட்டினார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மாவின் காட்சிப் படிமமாக அந்த மரங்களை அவர்கள் கருதினார்கள். நாங்கள் அவர்களை ஒருவழியாக அமைதிப்படுத்தி `நாளை முடிவு சொல்கிறோம்` என்று அனுப்பிவைத்தோம். வனத்துறை அதிகாரிகள் மீட்டிங் நடந்தது. இன்னொரு பாதுகாப்பான இடத்தை சற்றுத்தள்ளிக் கண்டறிந்தோம். தலைமையகத்திடம் பேசி அனுமதி வாங்கினோம். இந்த மூன்று மரங்களையும் சற்றுத் தொலைவில் கிராம மக்களின் ஊர் எல்லைக்குள், பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச்சென்று மீள்-நடுவது (safe re-planting of the trees) என்பது முடிவானது. அடுத்த நாள் வந்த கிராமத்தாரிடம் எங்களின் புது முடிவைச் சொன்னோம். அவர்களது மத உணர்வுக்கு எதிராக நாங்கள் செல்லமாட்டோம். மரங்களை வெட்ட மாட்டோம். உயிரோடு அகற்றி திருப்பி நடுவோம் என்றோம். அவர்கள் நம்பவில்லை. “இப்படி வளர்ந்த மரத்தைப் பிடுங்கி திருப்பி நடுவதாவது? அது பிழைக்குமா? கதை விடுகிறீர்களா?“ என்றார்கள். முன்பு நாங்கள் செய்த பணியின் படங்களைக் காண்பித்தோம். கிராமப்பெரியவர்களைத் தேற்றி, ஒருவழியாக நம்பும்படி செய்தோம்.”

”மூன்று மரங்களைச் சுற்றியும் அளவெடுத்து வட்டம்போட்டு, மெதுவாகத் தோண்ட ஆரம்பித்தோம். ஆணிவேர், கிளைவேர்கள் வெட்டுப்படாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. மெல்ல, அடியிலிருந்து மண்ணை அகற்றி தனியாக எடுத்துவைத்துக்கொண்டோம். ஒரு குறிப்பிட்ட ஆழம் தோண்டப்பட்டவுடன் நிபுணர்கள் பார்வையிட்டார்கள். ஆலோசனை சொன்னார்கள். சல்லிவேர், கிளைவேர்களின் நுனியில் மரங்கள் விழுந்துவிடும் நிலையில் ஆடின. அவைகள் சாய்ந்துவிடாமல் பக்கத்தில் இழுத்துக் கட்டினோம். இரண்டு நாட்களுக்கு அவைகளை அந்த நிலையிலேயே விட்டுவைத்தோம். திடீரென்று அவசர அவசரமாகப் பிடுங்கிப் புது இடத்தில் கொண்டுபோய் நட்டால், அதிர்ச்சியில் அந்த மரங்கள் உயிரிழக்கக்கூடும். ஆதலால், தாங்கள் `இந்த இடத்திலிருந்து அகற்றப்படப்போகிறோம்.. ஏதோ நடக்கிறது` என்று அவை புரிந்துகொள்ளும் உணர்வுநிலைக்கு அவைகளைத் தயார் செய்யத்தான் இந்த இரண்டு நாள் அவகாசம். இந்த நிலையில், புதிய இடத்தில் இதே அளவுக்குக் குழிவெட்டப்பட்டு, இங்கிருந்த அகற்றப்பட்ட `மரங்களின் பிறந்தமண்` புதுக்குழியில் இடப்பட்டுத் தயாராய்க் கலந்துவைக்கப்பட்டது. மூன்றாவது நாள் இந்த மரங்களின் மிச்சமிருக்கும் வேர் இணைப்புகளை மெதுவாகத் துண்டித்து மேலே தூக்கி, அதற்கான வண்டியில் மூன்று மரங்களையும் சாய்த்துவைத்து இழுத்துச்சென்றபோது, கூடவே கிராமத்தாரின் ஊர்வலமும் வந்தது. பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டு, கோஷமிட்டுக்கொண்டு கிராம மக்கள், புதிய இடத்தில் மூன்றுமரங்களும் அதிஜாக்ரதையாக ஊன்றப்பட்டு, தண்ணீர் ஊற்றப்படுவதைப் பார்வையிட்டார்கள். இரண்டு மாதங்கள் வனத்துறை நிபுணர்கள் மேலிட உத்தரவின்படி, கவனமாக அவற்றின் வளர்ச்சியைக் கண்காணித்தார்கள். மரங்களுக்குப் புதிய மண், புதிய சூழல் பழகிப்போனது. புதிய வேர்கள் உண்டாயின. மரங்களை மண் நன்றாகப் பிடித்துக்கொண்ட பாதுகாப்பு உணர்வில், பளபளக்கும் இலைக்கொழுந்துகள், மூன்று மரங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக முகிழ்க்க ஆரம்பித்தன. கிராமத்து மக்களுக்கும் போன மூச்சு திரும்பி வந்தது! இப்போது அந்த இடத்தில் அந்த மூன்று மரங்களும் நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கின்றன” என்றார்.

மதியம் குறிப்பிட்ட நேரத்தில் ராஜதானி எக்ஸ்பிரஸ், நாக்பூர் ஸ்டேஷனில் வந்து நின்றது. நமது வனத்துறை நண்பர் சூட்கேஸ், பைகளுடன் இறங்கினார். கையில் சிறுபையில் ஒரு சிறு வாழைக்கன்று போல் ஒன்று சணல் கயிறினால் கட்டப்பட்டிருந்தது. ”இது என்ன? ஏதேனும் விசேஷமானதா” என்று கேட்டேன். அதற்கு அவர், “பெங்களூரில் கிடைத்தது. சின்னஞ்சிறு பழமாய் இந்த வகை வாழைமரத்தில் வரும். மிகவும் இனிப்பான வகை. மத்தியப்பிரதேசத்தில் கிடைப்பதில்லை. அதனால் கன்று வாங்கி எடுத்துச்செல்கிறேன். என்வீட்டுப் பின்புறத்தோட்டத்தில் நடுவதற்கு” என்றார் ஆர்வமாக.

“வாழ்த்துக்களும் நன்றியும் மிஸ்டர் காஜி(Qazi)! உங்களோடு செலவிட்ட பயணநேரம் மிகவும் அருமையானது” என்று கைகுலுக்கினேன். நானும், கூட வந்த இந்தியராணுவ நண்பரும் அவருடன் வாசல்வரை சென்று வழியனுப்பினோம்.

அவர் இறங்கிப்போய்விட்டாலென்ன? இன்னும் ஏகப்பட்ட கதைகளை தன்னகத்தே அடக்கிக்கொண்டு வடக்கு நோக்கி விரைந்துகொண்டிருந்தது ராஜதானி எக்ஸ்பிரஸ்.
**

2 thoughts on “வடக்கே போகும் ரயில் – 3

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s