ஞாயிற்றுக்கிழமை (24-05-2015). கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானம். இந்தியாவின் கோடைகாலத் திருவிழாவான ஐபிஎல்-ன் இறுதிப்போட்டியைக் கண்டுகளிக்கக் கழுத்தை நெறிக்கும் கூட்டம். எங்குபார்த்தாலும் நீலமும் (மும்பை அணி), மஞ்சளும் (சென்னை அணி) பளபளத்தன. ஸ்டேடியத்தில் ரசிகர்களோடு சேர்ந்து கூத்தடிக்க, அனில் கபூர் போன்ற பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், அம்பானிகள் போன்ற விஐபிக்கள் வேறு.
எதிர்பார்ப்பு எகிறும் சூழலில் மும்பை அணி முதலில் பேட் செய்ய இறங்கியது. முதல் ஓவரிலேயே பொறி பறந்தது. ஆஷிஷ் நேஹ்ராவின் 5 ஆவது பந்தில் சிங்கிள் எடுக்க முயன்ற பார்த்தீவ் பட்டேல், டூ ப்ளஸ்ஸீயின் சூப்பர் ஃபீல்டிங்கில் அவுட்டானார். அடுத்து வந்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. கல்கட்டா அவருக்குப் பிடித்த மைதானம். கேட்கவேண்டுமா? இரண்டாவது ஓவரிலேயே முதல் ஷாட்டை சிக்ஸராக அடித்துத் தொடர்ந்து அதிரடி பௌண்டரிகள். மைதானம் அதிர்ந்தது. 4-ஆவது ஓவரிலேயே ஸ்பின்னர் அஷ்வினை இறக்கினார் தோனி. சிம்மன்ஸ்(Lendl Simmons) மசியவில்லை. பௌண்டரி, சிக்ஸர் என்று அடுத்தடுத்து அவரும் விளாசினார். ஆறாவது ஓவரைப்போட்ட ஜடேஜாவுக்கும் அதே கதி! பௌலர்களை வேகவேகமாக மாற்றிய தோனி, பவன் நேகியை இறக்கினார். கவலைப்படாத சிம்மன்ஸ்-ரோஹித் ஜோடி கலக்க ஆரம்பித்தது. தீவைத்த சரவெடியானார் சிம்மன்ஸ்! 11-ஆவது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 110 என்றது மும்பையின் ஸ்கோர். நீலச்சட்டை ரசிகர்களிடமிருந்து விசில் பறந்தது. ஸ்டேடியத்தின் விஐபி இருக்கையில், அட்டனக்கால் போட்டு ஆட்டத்தை ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர்.
25-பந்துகளில் 50 ரன்னெடுத்த மும்பைக் கேப்டன் ரோஹித் ஷர்மா அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடி அய்யனாரான கரன் போலார்ட் அடுத்து வந்தார். ஆச்சரியமாக, இதுவரை பௌலிங் போடாத டுவேன் ஸ்மித்தை பந்துபோடவிட்டார் சென்னை கேப்டன் தோனி. கைமேல் பலன்! முதல் பந்திலேயே அதுவரை விளாசிக்கொண்டிருந்த சிம்மன்ஸை(68) வீட்டுக்கு அனுப்பினார் ஸ்மித். கரன் போலார்டும், அம்பத்தி ராயுடுவும் அவ்வப்போது சிக்ஸர் அடித்து ஸ்கோரை மேலும் உயர்த்தினர். இறுதியாக 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 202 ரன்கள் என ஸ்கோரை முடித்துக்கொண்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இலக்கு 203 ரன். கல்கத்தா மைதானத்தில் இது துரத்தப்படவேண்டிய இலக்குதான். மும்பையின் மலிங்கா, மக்லெனகனின் வேகப்பந்துவீச்சு துல்லியமாக இருந்ததால் ரன் எடுக்க சிரமப்பட்டனர் சென்னையின் ஆட்டக்காரர்கள் டுவேன் ஸ்மித்தும் அனுபவ வீரரான மைக் ஹஸ்ஸியும். ஜெகதீஷ் சுசித்தின் (Jagdeesha Suchith)பிரமாதமான கேட்ச்சில் வீழ்ந்தார் ஹஸ்ஸி. களத்தில் இறங்கினார் சுரேஷ் ரெய்னா. அவரும் ஸ்மித்தும் சேர்ந்து சென்னையின் ஸ்கோரை உயர்த்தப் பாடுபட்டனர். 58 ரன்னெடுத்திருந்த ஸ்மித் ஹர்பஜனின் சுழல்வீச்சில் விழுந்தார். கூடவே ரெய்னா (28), ப்ராவோ (9) என பெவிலியன் திரும்ப, சென்னை தடுமாறியது. 15 ஓவர்களில் 113 ரன்களே சென்னையால் எடுக்க முடிந்தது. மும்பையின் ஹர்பஜன் சிங், மலிங்கா, மெக்லனகன் சிறப்பாக பந்துவீசி சென்னை அணியை நிலை குலையவைத்தார்கள். எட்ட வேண்டிய இலக்கு கண்ணில் தென்படவில்லை. 5 ஓவர்களில் 90 ரன் எடுக்கவேண்டிய இக்கட்டான நிலை. தோனிப் போராடிப் பார்த்தார். ஆனால் யோகம் சென்னையின் பக்கம் இல்லை. மலிங்காவின் யார்க்கர் காலில்பட்டு ஸ்டம்ப்பை இடிக்க, தோனி அவுட்டானார். சென்னையின் ஐபிஎல் கனவும் தோனியோடு சேர்ந்து வெளியேறியது. அடுத்தடுத்து டூ ப்ளஸ்ஸீ, பவன் நேகி, அஷ்வின் என சென்னை ஆட்டக்காரர்கள் ஓட்டக்காரர்கள் ஆனார்கள். கடைசியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியைத் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ் அணி. ஐபிஎல் 2015 சேம்பியன் ஆனது.
குதூகலத்தில் மும்பை அணியினர் துள்ளிக்குதிக்க, அணியின் சொந்தக்காரரான நீத்தா அம்பானி மைதானத்துக்குள் சிரித்துக்கொண்டே வந்து வீரர்களை பாராட்டி வாழ்த்தினார். மும்பை அணிக்கு பயிற்சியாளர்களாக ஒரு அணியே பணியாற்றியது: சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங்(Rickey Ponting), ஜாண்ட்டி ரோட்ஸ்(Jonty Rodes), ஷேன் பாண்ட்(Shane Bond), அனில் கும்ப்ளே, ராபின் சிங் ஆகியோர். இவர்களின் கடும் முயற்சியும், அணி வீரர்களின் உழைப்பு, கேப்டன் ரோஹித் ஷர்மாவின் தலைமைப்பண்பு, ஆட்டத்திறன் ஆகியவை ஒன்றுசேர்ந்து மும்பைஅணியை வெற்றிமேடையில் ஏற்றியது எனலாம். மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாகத் தேர்வானார். கோப்பையை வென்ற மும்பை இண்டியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடியும், இரண்டாம் இடத்துக்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.10 கோடியும் பரிசுத்தொகையாகக் கிடைக்கிறது.
ஐபிஎல் 2015-ன் சிறந்த சாதனையாளர்கள்: 562 அதிகபட்ச ரன் எடுத்து ஆரஞ்சு வண்ணத் தொப்பியை வென்ற டேவிட் வார்னர் (David Warner) (சன்ரைசர்ஸ், ஹைதராபாத்), 26 விக்கெட்டுகள் சாய்த்து பர்ப்பிள் கலர்த்தொப்பியை வென்ற டுவேன் ப்ராவோ(சென்னை சூப்பர் கிங்ஸ்), அதிகபட்ச சிக்ஸர்களாக 38-ஐ விளாசிய க்றிஸ் கேல்(Chris Gayle) (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு). முளைவிடும் இளம்வீரருக்கான பரிசை(Emerging Player Award) டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஷ்ரேயஸ் ஐயர் தட்டிச்சென்றார். மிகவும் முறையான, தரமான விளையாட்டிற்கான பரிசை (Fairplay Award) சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது.
இந்த வருட ஐபிஎல் தொடரின் மூலம் திறமைமொட்டுக்களாய்க் கீழ்க்கண்ட இளம் வீரர்கள் குறிப்பிடத்தக்க வகையில் பரிமளித்தனர்: சர்பராஸ் கான் (வயது17 -இடது கை ஆட்டக்காரர், பெங்களூரு அணி), ஹர்தீக் பாண்ட்யா(வயது 21-ஆல்ரவுண்டர், மும்பை இண்டியன்ஸ்), பவன் நேகி(வயது 20-ஆல்ரவுண்டர், சென்னை சூப்பர் கிங்ஸ்), ஷ்ரேயஸ் ஐயர் (வயது 20-துவக்க ஆட்டக்காரர், டெல்லி டேர்டெவில்ஸ்)தீபக் ஹூடா (Deepak Hooda) (வயது 20-ஆல்ரவுண்டர், ராஜஸ்தான் ராயல்ஸ்), சஞ்சு சாம்ஸன் (Sanju Samson)(வயது 21-விக்கெட் கீப்பர், ராஜஸ்தான் ராயல்ஸ்). மேலும் சிறப்பாக விளையாடிவந்தால், இவர்களில் ஒன்றிரண்டு பேராவது வரும் வருடங்களில் இந்திய அணியில் இணையும் வாய்ப்பைப் பெறக்கூடும்.
**