ஐபிஎல்-ஸ்பின்னர்களின் குத்தாட்டம்!

சர்வதேச அளவில் T-20 கிரிக்கெட் ஆட்டங்கள் தொடங்கப்பட்ட ஆரம்பக் கட்டத்தில், இந்த வகை கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் சொர்கம் எனவே பார்க்கப்பட்டது. இருபதே ஓவர்களில் குவிக்க வேண்டும் ரன்னை. அடித்து விளையாட ஏகப்பட்ட சுதந்திரம். யார் எந்தவகைப் பந்தை வீசினாலும் அது பௌண்டரிக்கோ அல்லது மைதானத்திற்கு வெளியேயோ தூக்கிக் கடாசப்படும். ரன் குவிப்பு சாத்தியம் மிக்க கிரிக்கெட் வகைமையாகப் பார்க்கப்பட்டது டி-20 கிரிக்கெட். பௌலிங்கில் இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கான தளம்; ஸ்பின்னர்கள் எனப்படும் மந்தவேக சுழல்பந்துவீச்சாளர்கள் அதிரடி பேட்ஸ்மன்களால் மைதானத்தை விட்டே தூக்கி எறியப்படும் சாத்தியம் அதிகம் ஆதலால், அவர்களுக்கு இங்கு வேலையில்லை என கிரிக்கெட் வல்லுநர்களே கருதினார்கள். 2007-ல் முதன்முதலில் இந்தியா T-20 உலகக் கிரிக்கெட் கோப்பையை, பாகிஸ்தானை ஃபைனலில் வீழ்த்தி வென்றது. அப்போதும் வேகப்பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்களுக்கிடையேயானப் போராகத்தான் T-20 உலகக்கோப்பை விளங்கியது.

2008-ல் இந்திய கிரிக்கெட் போர்டு T-20 கிரிக்கெட்டிற்கான பிரத்தியேகக் கிரிக்கெட் லீக்-ஐ {Indian Premier League (IPL)} ஆரம்பித்தது. வெகு சிறப்பாக ஆடப்பட்ட, நிர்வகிக்கப்பட்ட ஐபிஎல், இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே உலகளாவிய புகழ் பெற்றுவிட்டது. நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல்-இல் கேப்டன்கள் காட்டும் விளையாட்டு உக்திகளில் முக்கியத் திருப்பம் காணக் கிடைக்கிறது. கடந்த வருட ஐபிஎல்-லிலிருந்தே அதன் தடயம் தெரிய ஆரம்பித்தது. வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து அணிக் கேப்டன்களின் கவனம் மெல்ல விலகி, ஸ்பின்னர்களை நோக்கித் திரும்ப ஆரம்பித்துள்ளது. ஒவ்வொர் அணியும் 2, 3 என ஸ்பின்னர்களை தங்கள் அணியில் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. நடு ஓவர்களில் (8-15) ரன் விகிதத்தைக் குறைத்து, பேட்ஸ்மென்களின் துணிச்சல், துள்ளலைக் கட்டுப்படுத்த இந்த ஸ்பின் வியூகம் கைகொடுக்கிறது . ஸ்பின்னர் திறமையாகப் பந்துவீசி தகுந்த ஃபீல்டிங்கும் கைகொடுத்தால், எதிரணியின் முக்கியமான விக்கெட்டுகளையும் முறித்துப்போடமுடியும். எதிரி பேட்ஸ்மனுக்கு ரன் விட்டுக்கொடுக்காது நெருக்கவும் இது வசதியான ஆயுதமாக மாறியிருக்கிறது.

இப்போது நடந்துகொண்டிருக்கும் முதல் ரவுண்டு மேட்ச்சுகளில் டாப் அணிகளாக சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தற்போது விளங்குகின்றன. மாறிவரும் போட்டி நிலவரப்படி அணிகளின் தரவரிசை மாறும். மேற்கண்ட அணிகளின் வெற்றிக்கு இதுவரை, அந்தந்த அணிகளின் ஸ்பின்னர்கள் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. சென்னை அணிக்கு அஷ்வினும், ஜடேஜாவும் இக்கட்டான தருணத்தில் விக்கெட் சாய்த்துக் கைகொடுத்துள்ளனர். ராஜஸ்தான் அணிக்கு 42-வயதான ப்ரவீன் தாம்பே பந்துவீசும்போதெல்லாம் மிகக்குறைந்த ரன்களே எதிரணிக்குக் கொடுக்கிறார். அல்லது முக்கிய விக்கெட்டை எடுத்துவிடுகிறார். கொல்கத்தா அணிக்கு பியுஷ் சாவ்லா (Piyush Chawla), ஷகிப்-அல் ஹசன் ஆகியோர் முக்கிய ஸ்பின்னர்கள். சுனில் நரைனின் பந்துவீச்சு ஆக்ஷன் மீண்டும் குறை காணப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக சென்ற மேட்ச்சில் 44-வயதான ஆஸ்திரேலிய இடது கை சுழல்பந்துவீச்சாளர் ப்ராட் ஹாக் (Brad Hogg) சேர்க்கப்பட்டார். மிகச்சிறப்பாக பந்துபோட்டு சென்னையின் வீரர்களை ரன் எடுக்கவிடாது நெருக்கடி கொடுத்தார் அவர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 20 வயதான ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல் (Yazuvendra Chahal) அற்புதமாகப் பந்து வீசி வருகிறார். டெல்லி அணியைப்பற்றிக் கேட்க வேண்டாம். அவர்கள் முழுதுமாக தங்கள் ஸ்பின்னர்களை நம்பி இருப்பதுபோல் தெரிகிறது. டெல்லிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தஹிர் அபாரமாக ஸ்பின் போட்டு இதுவரை அதிக விக்கெட்டுகளுக்கான பர்ப்பிள் தொப்பியை (Purple Cap) வென்றுள்ளார். கூடவே இருக்கின்றனர் கேப்டன் டுமினி(JP Duminy), அமித் மிஷ்ரா ஆகியோர். இருவரும் இடையிலே நுழைந்து விக்கெட்டைச் சரித்து எதிரணியைக் கிடுகிடுக்க வைக்கும் சாமர்த்தியம் உள்ளவர்கள். மும்பை அணிக்கு இருக்கவே இருக்கிறார் பழைய புலி ஹர்பஜன் சிங். 20 வயதான இந்தியாவின் ஸ்பின்னர் அக்ஷர் பட்டேல் பஞ்சாப் அணிக்காக நல்ல பங்களிப்பு செய்கிறார்.

இவர்களன்றி, ரிசர்வ் வீரர்களாக இருந்துகொண்டு, எந்த நிலையிலும் மைதானத்துக்குள் வரக் காத்திருக்கின்றனர் இதுவரை சரியாகப் பயன்படுத்தப்படாத, வெளிச்சத்துக்கு இன்னும் வராத சுழல்பந்து வீச்சாளர்கள். கல்கத்தா அணியில் மிஸ்டரி ஸ்பின்னர் கரியப்பா, சென்னை அணியில் 21-வயது பவன் நேகி (Pawan Negi), சாமுவேல் பத்ரீ(Samuel Badree) (வெஸ்ட் இண்டீஸ்), டெல்லி அணியில் ஷாபாஸ் நதீம், பெங்களூர் அணியில் இக்பால் அப்துல்லா போன்றோர்.

இந்தியாவில் ஸ்பின் பௌலர்களுக்குப் பஞ்சமா என்ன? அவர்களுக்கு சர்வதேசத்தரப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் தான் குறைவு. ஆனால் இப்போது ஐபிஎல் வந்தபின் அனேக வாய்ப்புகள் அவர்களின் வீட்டுக் கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளன. தேர்வான அவர்களும் சுடச்சுடப் பந்து போட்டு சரியான தருணத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்கள்; காட்டுகிறார்கள் தங்கள் திறமையை. ஸ்பின் மாயாஜாலம் மேலும் தொடரும்போலிருக்கிறது. வரவிருக்கும் முக்கிய ஐபிஎல் போட்டிகள் இதனை உறுதிப்படுத்தும். ரசிகர்களுக்கு எப்போதும் ஐபிஎல் ஒரு விருந்துதான் – ஸ்பின்னர்கள் இதில் சேர்த்துக்கொண்டிருப்பது, விருந்தில் இன்னொரு ருசி.

**

2 thoughts on “ஐபிஎல்-ஸ்பின்னர்களின் குத்தாட்டம்!

  1. ஐபிஎல் விளையாட்டுக்களில் என்ன பிரச்னை என்றால் எந்த அணியை நமது மனம்கவர்ந்த அணியாகக் கொள்வது என்பதுதான். எல்லா அணிகளிலும் நமக்கு பிடித்தவர்கள் / தெரியாதவர்கள் கலந்து கட்டி இருக்கிறார்கள். சென்னையில் பிறந்தாலும் இருப்பது பெங்களூரு, யாரை ஆதரிப்பது?
    என்ன ஒரு பிரச்னை பாருங்கள்!!! ஹா….. ஹா……ஹா…..!
    புதுப்புதுத் திறமைகள் வெளிவரவேண்டும். அதுதானே ஒரு விளையாட்டிற்கு நல்லது?

    Like

  2. உண்மைதான். ஐபிஎல்-ன் சிறப்பு அம்சம் இது! எந்த டீமுக்கு நமது பக்தியைக் காண்பிப்பது? எல்லா டீம்களிலும் நமக்குப் பிடித்தமானவர்கள் இருக்கிறார்கள். அதனால், நமது டீம், எதிரி டீம் என்கிற புராதன வட்டத்தை விட்டு வெளியில் வந்து ரசிப்போம் கிரிக்கெட் என்னும் உன்னத விளையாட்டை. புதுப்புதுத் திறமைகள் தென்படுகின்றன. அதைப்பற்றி கொஞ்சம் இடைவெளிவிட்டு, இன்னும் கொஞ்சம் ஆட்டத்தை அனுபவித்துவிட்டு எழுதலாம் என நினைக்கிறேன்

    Like

Leave a reply to aekaanthan Cancel reply