(தொடர்ச்சி)
குமுதத்தில் வெளியான ஜெயகாந்தனின் இன்னொரு கட்டுரையின் தலைப்பு: ‘அது அவர்களுக்குத் தெரியாது!’ இதில், தான் மிகவும் மதித்த, இருந்தும் ஒருவகையில் நெருக்கம் அதிகம் இல்லாத தன் தந்தையைப்பற்றி, அவரது மரணம் பற்றி எழுதுகிறார். உடம்பு சரியில்லாத தன் அப்பா ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். பார்க்கப்போன சிறுவன் ஜெயகாந்தனுக்கு டாக்டர் அந்த அதிர்ச்சிச் செய்தியை சொல்லி, வீட்டிலுள்ள பெரியவர்களிடம் போய்ச் சொல்லச் சொல்கிறார். கேட்ட வார்த்தைகளின் அர்த்தம், அதன் கடுமை சிறுவனுக்கு அவ்வளவாகப் புரியவில்லை. வீடு திரும்புகிறான் பையன். வீட்டில் இருந்து அருமையான சாம்பாரின் மணம். பசியோ கொல்கிறது. சரி, முதலில் சாப்பிடுவோம் அப்புறம் சொல்வோம் விஷயத்தை என்று உட்கார்ந்து சாப்பிடுகிறான். பிரமாதமான சாப்பாடு. வீட்டிலிருந்த பாட்டி என்று ஞாபகம்- கேட்கிறாள் சிறுவனைப் பார்த்து. ஒங்கப்பன் முடியாம ஆஸ்பத்திரியிலே கெடக்கானே..போயி பாத்தியா, இல்ல எங்கயாவது சுத்திட்டு வர்றியாடா!’ சிறுவன் ஜெயகாந்தனுக்கு டாக்டர் சொன்னது ஞாபகம் வருகிறது. தயங்கிச் சொல்கிறான்: பாத்துட்டுத்தான் வந்தேன். அப்பா போயிட்டாரு! அதிர்ந்துபோன பாட்டி ‘எலே! பாவிப்பயலே! என்னடா சொல்றே! எனக் கத்த, சிறுவன் குரல் தாழ்த்தி, டாக்டரு அப்டித்தான் சொன்னாரு என்கிறான் குழப்பமாக. வீட்டிலுள்ளவர்கள் அலரிப்புடைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப்போய் அப்பாவின் உடலை கொண்டுவந்து போடுகிறார்கள். வரும் நாட்களில் அப்பாவின் காரியங்கள் நடந்தேறுகின்றன. அவன் நிச்சலனமாக எல்லாவற்றையும் பார்த்து நிற்கிறான். ஏனோ அழுகை வரவில்லை. விஷயத்தின் கனம் அவன் மனதைக் கவ்வவில்லை. வந்திருக்கும் உறவினர்கள் மறைந்தவரின் மகன், சிறுவன் ஜெயகாந்தனைப் பார்க்கிறார்கள். என்னமாதிரி மனுஷனுக்கு என்னமாதிரி பிள்ளை! கிஞ்சித்தும் பாசம் இல்லையே..கொஞ்சமாவது அழுகிறானா பார்த்தியா அவன்! என்பதுபோல் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். பரிகசிக்கிறார்கள்.
காரியங்கள் எல்லாம் முடிந்து வீடு அமைதியாகிவிட்டது. சிறுவன் ஜெயகாந்தன் ஒருநாள் இரவு படுக்கையில் புரள்கிறான். தூக்கம் வரவில்லை. அப்பாவின் நினைவு ஆறாய்ப் பெருகி மனதைத் தாக்குகிறது. சுயமரியாதை இயக்கம், அது இது என்று தன்னை வெகுவாக ஈடுபடுத்திக்கொண்ட, மிகவும் நேர்மையானவராய்ப் பேசப்பட்ட அப்பா. எப்போதாவதுதான் வீடு திரும்பும் அப்பா. அப்படி அபூர்வமாகச் சந்திக்க நேர்கையில், அவர் தன் தலையைப் பாசமாகத் தடவி தன்னுடன் அன்பாகப் பேசியது, படிப்பைப்பற்றி விஜாரித்தது, தனக்கு அவர் சொன்ன நல்ல விஷயங்கள். அவரை மற்றவர்கள் பார்க்க வரும்போது அவர் நடந்துகொள்ளும் விதம், பேச்சு, நடத்தையில் ஒரு கம்பீரம். அப்பாவைப்பற்றிய நினைவுகள் ஒவ்வொன்றாக மனதின் ஆழ் அடுக்குகளிலிருந்து மேலெழும்பி மிதக்கிறது. அவன் உடம்பில் சூடேறிக் கண்கள் கலங்குகின்றன. ‘அப்பா!’ மெதுவாக, ஹீனமாக அவனிடமிருந்து குரல் அந்த இரவில் எழும்புகிறது. நம் அப்பாவை நாம் இனிமேல் பார்க்க முடியாதா? அவருடன் பேசமுடியாதா? போய்விட்டார் என்பதற்கு அர்த்தம் இதுதானா? துக்கம் கவ்வுகிறது சிறுவன் ஜெயகாந்தனை. தேம்பித்தேம்பி அப்பாவை நினைத்து இரவு முழுதும் அழுகிறான். அது அவர்களுக்குத் தெரியாது.. அவனுக்கு அப்பாவின் மீது பாசமில்லை என்று பழித்தார்களே அவர்களுக்குத் தெரியாது அது .. என்று முடிகிறது அந்தக் கட்டுரை.
அவரது சிறுவயது காலகட்டத்தில், படிப்பை நிறுத்திவிட்ட நிலையில் கம்யூனிச இயக்கத்திலிருந்த தன் தாய்மாமனுடன் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கமர்ந்து நாளிதழ்கள், இலக்கிய ஏடுகளைப் படிப்பது அவர் வழக்கம். அவருக்கு மொழிமேல் இருந்த ஆர்வம் கண்டு, அவர்மீது ஒரு தந்தையைப்போல் அன்புகாட்டிய மார்க்ஸிஸ்ட் சித்தாந்தவாதியான ஜீவா, சிறுவன் ஜெயகாந்தனுக்கு முறையாகத் தமிழ் மொழி கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். தமிழ்ப் படைப்புகளோடு, நிறைய ரஷ்ய இலக்கியம் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது சிறுவன் ஜெயகாந்தனுக்கு. அவரது 16 வயதிலிருந்தே ஜெயகாந்தனின் எழுத்துக்கள் தாமரை, சரஸ்வதி, சாந்தி, மனிதன், சக்தி போன்ற சிறு இலக்கியப்பத்திரிக்கைகளில் வெளிவர ஆரம்பித்தன.
நவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகன் ஜெயகாந்தன். இப்போது எழுதிவரும் சில சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக, முன்னோடியாக விளங்கிய எழுத்து மேதை. நிறைய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிக் குவித்த ஜெயகாந்தன் தன் வாழ்நாளின் கடைசி 20 வருட காலகட்டத்தில் ஒன்றும் எழுதவில்லை. நண்பர்கள் இதுபற்றிக் கேட்டதற்கு, ‘எழுத்தாளன் என்பவன் எழுதிக்கொண்டே இருக்கவேண்டுமா? முதலில் நான் எழுதியவற்றை இவர்கள் படிக்கட்டும்!’ என்றாராம்.
படைப்புச்செருக்கு நிறைந்தவராக, அடாவடி ஆளாக அவரை சிலர் விமரிசித்தாலும், அவரது மென்மையான குணநலன்கள் அவ்வப்போது வெளிப்பட்டிருக்கின்றன என்பதை நெருங்கிய நண்பர்கள் அறிவார்கள். ஒருமுறை தன் வாசகர், அபிமானியான இளைஞர் ஒருவரின் கல்யாணத்தை தானே முன்னின்று நடத்தியதோடு, தம்பதிகளைக் குஷிப்படுத்தும் நோக்கோடு அவர்களை சைக்கிள் ரிக்ஷாவில் உட்காரவைத்துத் தானே அதை ஓட்டிச் சென்றவர் ஜெயகாந்தன் !
சமூகத்தின் ஏழை பாழைகளின் அன்றாட நெருக்கடி வாழ்க்கை, அத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் அவரிடையே ஒளிவிடும் நேர்மை, உண்மை, தர்மம் போன்ற சீரிய குணங்கள் ஆகியவற்றையும், மத்தியத்தர வர்க்கத்தின் நம்பிக்கைகள், கோட்பாடுகளின் முரண்கள், வாழ்வுச்சிக்கல்கள், அன்றாடப் போராட்டங்களையும் தன் படைப்புகளில் சிறப்பாக வடித்திருக்கிறார் ஜெயகாந்தன். மனிதநேயம் வாழ்வின் அடிநாதமாக இழைந்தோடுவதை அவரது படைப்புகள் அழகாக, ஆழமாகச் சித்தரிக்கின்றன. ’ஒரு மனிதன், ஒருவீடு, ஒரு உலகம்’, ஜெய ஜெய சங்கர, யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல, பிரளயம், உன்னைப்போல் ஒருவன், கோகிலா என்ன செய்துவிட்டாள்?, உண்மை சுடும், பிரும்மோபதேசம், ரிஷிமூலம், கங்கை எங்கே போகிறாள்? போன்ற நாவல்களும், யுகசந்தி, சுயதரிசனம், ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும், தேவன் வருவாரா?, குருபீடம், ஒருபிடி சோறு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், அவர்கள் உள்ளே இருக்கிறார்கள், சுதந்திரச் சிந்தனைகள், யோசிக்கும் வேளையில், ஒரு பிரஜையின் குரல், ஒரு சொல் கேளீர், நினைத்துப் பார்க்கிறேன், ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் அவரது முக்கியப் படைப்புகளில் அடங்கும். ஆரம்ப காலத்தில் சில கவிதைகளையும் அவர் எழுதியுள்ளார். அவருடைய ‘நீ யார்’ என்று தலைப்பிட்ட கவிதை எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவினால் நடத்தப்பட்ட ‘எழுத்து’ இதழில் அறுபதுகளில் வெளியாகியுள்ளது. ’ஜெயகாந்தன் கவிதைகள்’ தற்போது தனிப் புத்தகமாகவும் கிடைக்கிறது. அவருடைய கவிதை ஒன்றில் இப்படிக் கேட்கிறார் ஜெயகாந்தன்:
கண்டதைச் சொல்லுகிறேன் – உங்கள்
கதையைச் சொல்லுகிறேன் – இதைக்
காணவும் கண்டு நாணவும் உமக்குக்
காரணம் உண்டென்றால் – அவ
மானம் எனக்குண்டோ?
சுயசரிதைப் படைப்புகள் என்கிற ரீதியில் அவரது ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ (துக்ளக் இதழில் தொடராக வெளிவந்து பெரும் வாசகர் கவனம் பெற்றது), ’ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’, ’ஒரு இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆங்கில எழுத்தாளர் ஜே.பி.ப்ரீஸ்ட்லி (J.B.Priestley)யைப்போல, ’ஜெயகாந்தனின் முன்னுரைகள்’ தனிப் புத்தகமாக வெளிவந்துள்ளது. அவருடைய படைப்புகளுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் அந்தந்தக் காலகட்டத்தின் தமிழ்ச்சமுதாயம், அதன் போக்கு பற்றி, அதன் மீது அவருக்கிருந்த கவலை, விமரிசனம்பற்றி ஆழமாகப் பேசுகின்றன. தமிழ் இலக்கிய தீவிர வாசகர்கள், ஆர்வலர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது.
அவருடைய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலுக்காக 1972-ல் அவருக்கு விருதளித்துக் கௌரவித்தது இந்திய சாகித்ய அகாடமி. 1996-ல் ஜெயகாந்தனை ‘A Fellow of Sahitya Academy’ –ஆகவும் நியமித்து அது தனக்குப் பெருமை சேர்த்துக்கொண்டது. இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ’ஞானபீட விருது’ 2002-ல் அவரது சீரிய இலக்கியப்பணிக்காக வழங்கப்பட்டது. அந்த விருது அறிவிக்கப்பட்டதை நண்பர்கள் அவருக்குத் தெரிவித்தபோது, ‘ஞானத்திற்கு பீடம் எதற்கு !’ என்றாராம் ஜெயகாந்தன். இந்திய அரசின் ’பத்மபூஷன்’ விருது 2009-ல் அவரை அலங்கரித்தது.
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், மேடைப்பேச்சாளர், திரைப்பட இயக்குனர் எனப் பன்முகத் திறமை வாய்க்கப்பெற்றவர் ஜெயகாந்தன். ஊருக்கு நூறு பேர், சில நேரங்களில் சில மனிதர்கள், உன்னைப்போல் ஒருவன் ஆகிய அவரது படைப்புகள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. அவர் இயக்கிய ’உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படத்துக்கு 1965-ல் சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. சிட்டிபாபு இசையமைத்த இந்தப் படத்தில் பின்னணி இசை மட்டும்தான். திரைப்பாடல்கள் ஏதும் இல்லை!
Game of Cards and Other Stories –Jayakanthan என்கிற தலைப்பில் ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அவரது அக்னிப்பிரவேசம், பிரும்மோபதேசம், ட்ரெடில் (Tredil) போன்ற புகழ்பெற்ற படைப்புகள் ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதுவன்றியும், நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா (National Book Trust of India), ‘கதா’ (Katha) போன்ற மத்திய இலக்கிய அமைப்புகள் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள சிறந்த இந்திய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதிகளிலும் ஜெயகாந்தனின் புகழ்பெற்ற சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் புஷ்கின் (Alexander Pushkin) மிகச் சிறந்த ரஷ்ய கவிஞராகவும், நவீன ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடியாகவும் கருதப்படுபவர். புஷ்கினின் படைப்புகளைத் தமிழில் ஜெயகாந்தன் மொழிபெயர்த்துள்ளார். இதற்காகவும், ஜெயகாந்தனின் படைப்புகள் ரஷ்ய மொழியில் வெளிவந்து புகழ்பெற்றிருப்பதையும் பாராட்டும் வகையில் ஜெயகாந்தனுக்கு ‘The Order of Friendship’ என்கிற உயரிய ரஷிய விருதை 2011-ல் வழங்கி, ரஷ்யா அவரைக் கௌரவித்தது.
**
நல்ல பகிர்வு
LikeLike