ஜெயகாந்தன் -1

ஏப்ரல் 9-ந்தேதி காலையில் தினமணி, டெல்லி இதழைப் பார்த்தபோது ’ஜெயகாந்தன் காலமானார்’என்கிற முதற்பக்கச் செய்தி கண்ணில்பட்டு மனதைத் தாக்கியது. அவருக்கு 80 வயதாகிறது என்பதும், அவர் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உடல்நலமின்றி அவ்வப்போது சிகிச்சையில் இருந்துவந்தார் என்பதும் அறிந்ததுதான். அபூர்வமாகத் தென்படும் நல்ல தலைவர்கள், சீரிய இலக்கியகர்த்தாக்கள், கலைஞர்கள் போன்ற சமூகப்பிரக்ஞையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் பற்றி – ’அவருக்கு வயதாகிவிட்டது’, ’உடல்நலம் குன்றியிருக்கிறார்’, ’ஆஸ்பத்திரியில் அனுமதி’ என்றெல்லாம் செய்திகள் வரும்போது மனம் சஞ்சலம் அடையும். கடவுளே, இவருக்கு உடல்குணமாகி, தீர்க்காயுசாக இருக்கவேண்டுமே எனக் கவலைப்படும். அப்படித்தான் ஜெயகாந்தன் பற்றியும் மனம் அல்லல் பட்டது கொஞ்சகாலமாகவே. ஆனால், பயந்தபடியே அது நிகழ்ந்துவிட்டது.

ஜெயகாந்தன். என்ன ஒரு கவர்ச்சிகரமான பெயர். இந்தப் பெயர்தாங்கி வந்ததெல்லாம் என்ன ஒரு வசீகரமான எழுத்து. சமூக சிந்தனையுடன், அக்கறையுடன், நேர்மை, துணிச்சல் போன்ற இப்போதெல்லாம் காண்பதற்கரிய சிறப்பியல்புகளின் துணைகொண்டு தன் எழுத்தோவியங்களை வரைந்த ஆளுமை. உன்னதமான படைப்பாளி. வணிகப் பத்திரிக்கைகளிலும் அவ்வப்போது எழுதி வந்ததால், திரளான வாசகர்களைப் பெற்ற சுஜாதாவைப்போன்ற ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். ஜெயகாந்தனைப்பற்றிப் பேசாத, எழுதாத, சர்ச்சிக்காத தமிழ் இலக்கியப் படைப்பாளிகள், தமிழ் மொழி ஆர்வலர்கள் குறைவு. அவரைப்பற்றி சிலாகிக்காமல், குறைந்தபட்சம், குறிப்பிடாமல் நவீனத் தமிழ் மொழி, இலக்கியம்பற்றிப் பேச முடியாது. ஜெயகாந்தன் மிகச் சிறந்த மேடைப்பேச்சாளரும்கூட. விமரிசனம், எதிர்ப்பு போன்றவைபற்றிக் கவலைப்படாமல், தனக்குச் சரி என்று தோன்றியவற்றை எவருக்கு முன்னாலும் அஞ்சாது பேசியவர். அவர் குரலில் தென்பட்ட கம்பீரம் சத்தம் சம்பந்தப்பட்டதல்ல; சத்தியம் சம்பந்தப்பட்டது அது.

பதின்மவயதில் நான் முதன்முதலில் படித்தது அவருடைய ’வாழ்க்கை அழைக்கிறது’ என்கிற நாவல். தீவிர இலக்கிய உலகை நோக்கி என்னை முதன் முதலாக அழைத்துச் சென்ற எழுத்து. எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்டு அச்சுபிச்சு என்று ஏதேதோ எழுதி காலரைத் தூக்கிவிட்டு அலைந்துகொண்டிருந்த ஆசாமிகளின் மத்தியில் ஜெயகாந்தனின் எழுத்து தனித்துவத்துடன், சீரிய சமூகப் பார்வையுடன் அதீத ஒளிவீசிற்று. அவருடைய எழுத்தை எங்கே கண்டாலும், அது சிறுகதையோ, நாவலோ, கட்டுரையோ படிக்காது விடக்கூடாது எனப் பெரும் ஆவலுடன் அலைந்தது அந்தச் சிறுவயசு மனது.

சராசரி தமிழ் வாசகர்கள் செய்த பாக்கியமோ என்னவோ, அப்போது பிரபல வாரப் பத்திரிக்கையான குமுதம் ஒரு காரியம் செய்தது. வணிகப் பத்திரிக்கைகளின் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வராது முரண்டுபிடித்த ஜெயகாந்தனை, குமுதம் அவருக்குப் பிடித்தமான விஷயம் குறித்து அது எதுவாயினும், சுதந்திரமாக இரண்டு பக்கம் ஒவ்வொரு வாரமும் எழுதுமாறு அழைத்தது. அவருக்கென்று பிரத்தியேகமாக ஒவ்வொரு வாரமும் நடுப்பக்கங்களை ஒதுக்கித் தந்தது. அழைப்பை ஏற்று தன் வாழ்வின் வெவ்வேறு கட்டங்கள், அனுபவங்கள் பற்றிய கட்டுரைகளை தனக்கே உரித்தான பாங்கில் சுவாரஸ்யமாகக் குமுதத்தில் எழுதினார் ஜெயகாந்தன். கட்டுரைகள் புகழ்பெற்றன. அப்போது குமுதம் வாராவாரம் புதன்கிழமையோ, வியாழக்கிழமையோ வரும். அதற்காக 55 காசுகளை எண்ணி வைத்துக்கொண்டு புதுக்கோட்டை பழைய பஸ்ஸ்டாண்டு கடைகளை மாலை நேரத்தில் குமுதத்திற்காக நோட்டம் விடுவது வழக்கம். குமுதத்தை வாங்கியவுடன், ஏதோ பத்மஸ்ரீ வாங்கிவிட்டதுபோல் அதைப் பாதுகாப்பாக எடுத்துகொண்டு போய் வீட்டில் மூலையில் உட்கார்ந்து ஜெயகாந்தன் பக்கங்களைப் படிப்பது வழக்கம். அடடா! அந்தச் சிறுவயது பரபரப்பு, சந்தோஷம், வருமா இனிமேலே!

அதில் ஓரிரு கட்டுரைகளின் கருத்து, விஷயம்- நினைவிலிருந்து எழுதுகிறேன்: ‘ஆஹா! நான் ஃபெயிலாயிட்டேன்’ என்று ஞாபகம்- இந்தத் தலைப்பில் அவருடைய ஒரு கட்டுரை குமுதத்தில் வந்தது. அது இப்படிச் செல்கிறது: பள்ளியின் பரீட்சை ரிசல்ட்டுகள் எழுதி கட்டிட முகப்பில் ஒட்டப்பட்டுள்ளன. ஐந்தாவது க்ளாஸ் தேர்வு எழுதியிருந்த சிறுவன் ஜெயகாந்தன் ரிசல்ட் பார்க்க வந்திருக்கிறான். மற்ற பசங்களும் பள்ளியின் முன் நிற்கிறார்கள். ஜெயகாந்தனுக்கு தன் ஐந்தாம் வகுப்பு கதையின் முடிவு என்ன என்று போர்டைப் பார்த்து தெரிந்துகொள்ளத் தெரியவில்லை. அருகிலிருந்த பையன் சிறுவன் ஜெயகாந்தனின் ரிசல்ட்டை பார்த்துவிட்டு ‘டேய்! நீ ஃபெயிலுடா!’ என்கிறான். விவரம் புரியாத ஜெயகாந்தன் ‘ஆஹா! நான் ஃபெயிலாயிட்டேன்!’ என்று குதிக்க, பரிதாபமாகப் பார்த்த அந்தப் பையன் ‘ஃபெயிலுனா ஒன்னை அடுத்த கிளாசுல தூக்கிப்போடமாட்டாங்க!’ என்று புரியும்படியாகச் சொல்கிறான். ‘என்ன! என்னத் தூக்கிப்போடமாட்டாங்களா!’ என்று அதிர்ச்சியுடன் கேட்ட சிறுவன் ஜெயகாந்தன் ஏமாற்றத்துடன் அங்கிருந்து அகல்கிறான். முடிவும் எடுக்கிறான்: ’நமக்கு இந்தப் பள்ளிப்படிப்பு ஒத்துவராது !’ ஜெயகாந்தன் அதற்குமேல் பள்ளிப்படிப்பைத் தொடரவில்லை! இப்படித் தன் சிறுவயது பள்ளிக்கூட படிப்பு அனுபவத்தை, உள்ளது உள்ளபடி அந்த சிறுபிள்ளைமனசு மாறாமல் வரைந்துள்ளார் ஜெயகாந்தன்.

(தொடரும்..)

One thought on “ஜெயகாந்தன் -1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s