ஐபிஎல் (IPL) T-20 கிரிக்கெட் கோலாகலம்!

இந்தியாவின் ஏப்ரல் மாதம்! அனல்பறக்கும் ஐ.பி.எல். Indian Premier League கிரிக்கெட் போட்டிகள் குதூகலமாகத் துவங்க இன்னுமொரு நாள்தான் பாக்கி. இன்று (07 ஏப்ரல், 2015) கல்கத்தாவில் (அல்லது கொல்கத்தாவில்) ஐபிஎல்-8-வது எடிஷன் துவக்கவிழா. பாலிவுட் நட்சத்திரங்கள் -அனுஷ்கா ஷர்மா (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டனின் தோழி- அவருடைய கைங்கர்யத்தினால் மீடியா சர்ச்சைக்குள் அடிக்கடி சிக்கும் 7-UP சிங்காரி !), ஹ்ரித்திக் ரோஷன், ஷாஹித் கபூர் ஆகியோர் கலந்து கொண்டு ஜிலுஜிலுப்பூட்டும் மாலை விழா இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பம். கூடவே கூட்டத்தைப் பார்த்து, ஸெல்லுலாய்ட் புன்னகையுடன் ஈடன் கார்டன்ஸ் (Eden Gardens, Calcutta) ஸ்டேடியத்தில் ஷாருக் கான் கையை அசைத்து நின்றிருப்பார் என்பது நாமெல்லாம் அறிந்ததே! அடுத்த நாள் முதல் மேட்ச் ஆடுகிறார்கள் தற்போதைய ஐபிஎல் சேம்பியனான, கௌதம் கம்பீர் (Gautam Gambhir) தலைமையிலான கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையேற்கும் மும்பை இண்டியன்ஸ் அணியும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்(Royal Challengers, Bangalore) , சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings), சன் ரைசர்ஸ் ஹைதராபாத்(SunRisers Hyderabad), கிங்ஸ் லெவென் பஞ்சாப்(King’s XI, Punjab), ராஜஸ்தான் ராயல்ஸ்(Rajasthan Royals), கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்(Kolkatta Knight Raiders), மும்பை இண்டியன்ஸ் (Mumbai Indians), டெல்லி டேர்டெவில்ஸ் (Delhi Daredevils) என 8 அணிகள் இந்தப் போட்டிகளில் மோதுகின்றன. இந்தியாவின் தேசிய கிரிக்கெட் வீரர்கள், அனுபவ வீரர்களோடு, புதியதலைமுறை வீரர்களும், புகழ்பெற்ற வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கும் உலகின் உன்னதமான T-20 திருவிழா இது. இன்னும் ஐந்தாறு வாரங்களுக்கு பேசுவதற்கும் தர்க்கம் செய்வதற்கும் சூடான சங்கதி கிடைத்துவிட்டது!

2008-ல், இந்தியாவில் டி-20 கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்த, இந்திய கிரிக்கெட் போர்டினால் {Board of Control for Cricket in India(BCCI)} துவங்கப்பட்ட இந்த ப்ரிமியர் டோர்னமெண்ட், ஆரம்பத்தில் வெகுவாக விமரிசிக்கப்பட்டது. இதன் சாத்தியம் சந்தேகிக்கப்பட்டது. இருந்தும் விரைவிலேயே உலகப்புகழ் பெற்றுவிட்டது. இந்த இந்திய லீக்கின் அபார வெற்றியை ஜீரணிக்க இயலாது தவிக்கிற இங்கிலீஷ்காரர்கள் அனேகம்! என்கிறார் முன்னாள் இங்கிலாந்து வீரரும், ஐபிஎல் ஸ்டாருமான கெவின் பீட்டர்சன்(Kevin Peterson). ஐபிஎல்-லின் ப்ரமாத தாக்கத்தினால் ஆர்வத்தோடு தொடங்கப்பட்டவைதான் ஆஸ்ட்ரேலியாவில் இப்போது நடத்தப்படும் Big Bash T-20 tournament, வெஸ்ட் இண்டீஸில் சி.பி.எல் என அழைக்கப்படும் Carribean Premier League ஆகியவை. அவைகளும் அந்தந்தப் பகுதிகளில் நவீன கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கின்றன என்பதில் எந்த இரண்டாவது கருத்தும் இருக்கமுடியாது.

ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இதுவரை வெளிச்சத்துக்கு வராத, சில அபார திறமையாளர்களை இந்தியக் கிரிக்கெட்டிற்கு அது தந்திருக்கிறது. நமக்கு கிரிக்கெட் கேரியரே கிடையாது, நாட்டிற்காக ஆடவேண்டும் என்பதெல்லாம் பகற்கனவுதான் என்று விரக்தியில் வாழ்ந்த சில விளிம்புநிலை வீரர்களுக்கு வாழ்வளித்திருக்கிறது. எங்கோ கிடந்தவர்களை, ஏக்கத்தில் இருந்தவர்களை மைதானத்துக்குள் கொண்டுவந்து ஆஹா! ஓஹோ! என புகழும், பணமும் பெறவைத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், இக்பால் அப்துல்லா(Iqbal Abdullah), அபு நெசிம்(Abu Nechim), சந்தீப் ஷர்மா (Sandeep Sharma), ப்ரவீண் தாம்பே(Pravin Tambe) போன்றவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள்தான். ஐபிஎல்-லினால் வாய்ப்புப் பெற்று விளையாடி, தங்களை நிரூபித்து இந்திய தேசிய அணியில் இடம் பிடித்தவர்கள் என இவர்களைச் சொல்லலாம்: அஜின்க்யா ரஹானே (ராஜஸ்தான் ராயல்ஸ்), ரவீந்திர ஜடேஜா (முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ்-தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ்), சுரேஷ் ரெய்னா(சென்னை சூப்பர் கிங்ஸ்), அம்பத்தி ராயுடு(மும்பை இண்டியன்ஸ்), ஸ்டூவர்ட் பின்னி(Stuart Binny) (ராஜஸ்தான் ராயல்ஸ்), முரளி விஜய் (முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ்-தற்போது கிங்ஸ் லெவென் பஞ்சாப்), உமேஷ் யாதவ் (கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்).

இந்த வருட ஐபிஎல்-லுக்கான கிரிக்கெட் ஏலத்தின் போது, உயர்ந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.16 கோடியில் ஏலமெடுக்கப்பட்டிருக்கிறார் பஞ்சாப் வீரரும், முன்னாள் இந்திய வீரருமான யுவராஜ் சிங்! இவ்வளவு அதிகத் தொகைக்கு அவரை ஏலமெடுத்த புத்திசாலி அணி டெல்லி டேர்டெவில்ஸ்! என்ன செய்யப்போகிறார் சிங் – பொறுத்திருந்து பார்ப்போம். சில அதிரடி வெளிநாட்டு வீரர்கள் மிகவும் சொற்ப விலையில் ஐபிஎல் அணிகளால் வாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அதிசயிக்கத்தக்க விஷயம். சில வெளிநாட்டு வீரர்கள் அவர்களது அடிமட்ட விலையிலும்கூட(Base Price) விலைபோகவில்லை!

போனவருட ஐபிஎல் ஏலத்தின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ரவீண் தாம்பே என்கிற 43 வயது, சீனியர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், பயிற்சியாளராக ஆகியிருந்த மும்பை வீரரை சொற்பவிலையில் வாங்கி மற்றவர்களை ஆச்சரியத்தில் தள்ளியது. அதிர்ஷ்டவசமாக தாம்பே சிறப்பாக லெக் ஸ்பின் போட்டு, ரன்களை நசுக்கி, எதிரிகளைச் சாய்த்து, ராஜஸ்தான் அணியின் வெற்றிகளுக்கு வித்திட்டார். இந்த மாதிரி ஒரு யுக்தியை கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி இந்த வருடம் செய்துள்ளது. கே.சி.கரியப்பா (KC. Cariappa) என்பவர் அனுபவம் இல்லாத கத்துக்குட்டி ஸ்பின் பௌலர். Under-19 team- ற்காக கர்னாடகாவிற்காக ஆடியிருந்தாலும், கர்னாடக ரஞ்சி டீமில்-சீனியர் லீக்கில்- இன்னும் இவர் இடம் பிடிக்கவில்லை. லெக் ப்ரேக், ஆஃப் ப்ரேக் என்று குழப்பிக் கூத்தடிக்கும் இவரது வித்தியாசத்திறமையை கொல்கத்தா அணியினர்- குறிப்பாக பௌலிங் கோச் வசீம் அக்ரம்(Wasim Akram)- போனவருடம் பயிற்சியின்போது கவனித்தனர். இந்த வருடம் 2.4 கோடி ரூபாய் செலவில் இவரை கொல்கத்தா அணி வாங்கிவிட்டது. என்ன செய்யப்போகிறார் இந்த mystery spinner என்று ஆவலோடு இருக்கிறார்கள் கிரிக்கெட் விமரிசகர்களும், ரசிகர்களும். இவரைப்போலவே ஒவ்வொரு அணியிலும் புரியாத புதிராக, ஒரு பௌலரோ, அறியப்படாத திறமையாக ஒரு பேட்ஸ்மனோ இருக்கக்கூடும். இன்னும் ஐந்தாறு வாரங்களில் ஐபிஎல் வானில் புதிய நட்சத்திரங்கள் மின்னக்கூடும். மங்கியிருந்த பழைய நட்சத்திரங்கள் மீண்டும் எதிர்பாரா ஒளி வீசக்கூடும். ஏவுகணைப்பந்துகள், அதிரடிப்பட்டாசுகள் வானைப் பிளக்கலாம். ரசிப்போம். கிரிக்கெட் தரும் இனிய போதையில் உலா வருவோம்!

**

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s