சிறுவயதிலிருந்தே மனதில் மாறாத ஒரு துள்ளலாகத் துறுதுறுக்கும் தீவிர கிரிக்கெட் ஆர்வம், intoxicating obsession, கிரிக்கெட்டின் உன்னத நான்குவருட நிகழ்வான உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பெரிதும் லயிக்கவைத்தது. அதன் சுவாரஸ்ய விளைவாக கோப்பைத்தொடரின் முக்கியக் கட்டங்களைப்பற்றிய மதிப்பீட்டு விவரணைகள், விமரிசனங்களைத் தாங்கிய கட்டுரைகளை ஒரு மாதமாக எழுதி வந்தேன். வாசகர் வட்டம், ரசிகர் குழாம் விரிந்து பரந்ததை ஆச்சரியத்துடன் ரசித்தேன். நம்பளமாதிரி நிறையப்பேர் உலகத்தில இருக்காங்க! சந்தோஷம். ஐபிஎல்(Indian Premier League) தீ ஏப்ரல் 8-ல் பற்றிக்கொள்ளும். அதிரடி ஆச்சரியங்கள், பரபரப்புக்கள் மிக்க கிரிக்கெட்டின் கிளுகிளுப்பூட்டும் வேறொரு தளம். வேறொரு உலகம். அதன் முக்கிய கட்டங்களின் நிகழ்வுகளின்போது, கிரிக்கெட் கட்டுரைகளை இந்தத் தளத்தில் காண நேரலாம்.
இந்த வலைத்தளத்தின் கருவான கவிதைக்கு மீண்டு வருகிறேன். முன்பு போலவே, மனித வாழ்வின் விசித்திர, வினோதங்கள், சோதனைகள், வேதனைகள் என்றெல்லாம் என்னுடைய அவதானிப்புகள் பற்றிக் கட்டுரை வடிவிலும் அவ்வப்போது காட்சியளிப்பேன்.
அன்பார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.
ஏகாந்தன்
01-04-2015