26-3-2015. சிட்னி (Sydney, Australia). உலகக்கோப்பை இரண்டாவது செமி ஃபைனல் ஆஸ்திரேலியா-இந்தியா. எப்படி ஆரம்பிப்பது, என்ன சொல்வது? இன்று இந்தியாவின் நாள் இல்லை. தோனி டாஸ் தோற்றவுடனே அது கிட்டத்தட்டத் தெரிந்துவிட்டது. டாஸ் ஜெயித்து முதல் பேட்டிங் இந்தியா செய்திருந்தால் கதை வேறாகியிருக்கலாமோ என்னவோ?
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை வேகமாக இழந்தாலும், ஆரோன் ஃபின்ச்(Aaron Finch), ஸ்டீவ் ஸ்மித்தின்(Steve Smith) திறமையான ஆட்டத்தில் நங்கூரம் பாய்ச்சியது. நமது வேகப்பந்துவீச்சாளர்களின் திறமை எங்கே போனது திடீரென்று? ஸ்மித் சதமடித்துவிட்டார். அவர் அவுட் ஆகையில் ஸ்கோர் 198-க்கு 2 என்றிருந்தது. 350-ஐத் தாண்டுமோ என்கிற அச்சம் அப்போதே இருந்தது. ஆயினும் யாதவும் அஷ்வினும் நன்றாகப் பந்துபோட்டதில் நடுவிலே விக்கெட்டுகள் விழுந்தன. இருந்தும் ஃபின்ச் 81, மற்றவர்கள் ஆங்காங்கே 20-களாகத்தட்டித்தட்டி, ஆஸ்திரேலியாவை 328 வரை கொண்டு சென்றுவிட்டனர்.
இந்தியாவுக்கு 329 என்பது சவாலான இலக்குதான். ஆனாலும் கடுமையாக முயன்றிருந்தால் நமது இளம் வீரர்களால் அடைய முடியாத ஒன்றல்ல. ஆனால் என்ன நடந்தது? 75 ரன் துவக்க பார்ட்னர்ஷிப் கிடைத்தும், தவன், ரோஹித்தின் வீழ்ச்சிக்குபின் ஆட வந்த முக்கிய ஆட்டக்காரர்களான கோஹ்லி, ரெய்னா வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 108 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்தியா. ஏகமாகக் கூடியிருந்த ரசிகர்களின் முகத்தில் சோகம் அப்ப ஆரம்பித்தது. கேப்டன் தோனியும், ரஹானேயும் அதிஜாக்ரதையாக விளையாடி, நிலைமையைச் சீர்திருத்த முயன்றார்கள். ரஹானேயை ஸ்டார்க் (Starc) 44 ரன்களில் எடுத்துவிட்டார். நன்றாக விளையாடிக்கொண்டிருந்த தோனி 65 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானது, அதிர்ஷ்டம் இந்தியாவின் பக்கம் இன்று இல்லை என்பதை அழுத்தமாகத் தெரிவித்தது. அடுத்து வந்த 5 இந்திய பேட்ஸ்மென் எப்போது க்ரீஸுக்கு வந்தார்கள்? என்னதான் செய்தார்கள்? என்ன ஆகிவிட்டது இந்த டீமுக்கு? 233-ல் இந்தியா ஆல் அவுட். உலகக்கோப்பையின் ஃபைனலில் நியூஸிலாந்தை சந்திக்கும் அரிய வாய்ப்பை இழந்துவிட்டது. (தோனி மட்டும்தான் எடுத்தார் அரைசதம். தவன், ரோஹித், ரஹானே நல்ல ஸ்கோருக்கு முயற்சி செய்தனர் எனலாம்.ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சு பிரமாதமாக இருந்தது என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை).
எவ்வளவு முக்கியமான கட்டத்தில் எப்படி ஒரு தோல்வி? எங்கே போய்ச் சொல்வது இந்த வேதனையை? இந்த உலகக்கோப்பையில் வரிசையாக 7-க்கு 7 ஜெயித்த அணிதானா இது? போயும் போயும் இந்த அகங்காரம் பிடித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவா இப்படி மோசமாக ஆடவேண்டும்? என்ன ஒரு துரதிர்ஷ்டம்?
இந்தியாவிலும், உலகெங்கிலும் இருக்கும் எண்ணற்ற இந்திய ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தங்கள் அணி செமி ஃபைனலில் தோற்றுவிட்டது என்பது எளிதில் ஜீரணிக்க முடியாத ஒன்றுதான். இருந்தும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்; பதற்றத்திலிருந்து விலகி, நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். மஹேந்திர சிங் தோனியின் மிகச் சிறந்த தலைமையில், அணிவீரர்களின் ஒட்டுமொத்த உழைப்பில், 8 மேட்ச்சுகளில் 7-ஐ வென்றிருக்கிறது இந்தியா என்கிற உண்மையை யாரேனும் அலட்சியப்படுத்த முடியுமா? எந்த வெற்றியும் எளிதில் கிடைத்ததல்லவே? உலகக்கோப்பையில் இந்தியாவின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்றல்லவா இது.
வெற்றி, தோல்விகள், விளையாட்டிலும், வாழ்விலும் சகஜமே. எக்கச்சக்கமான தருணத்தில், தோல்வியை எதிர்கொள்ள நேரிட்டதால் ஒரு அயர்வு, சோர்வு வரும்தான். இருந்தும், தளர்ந்து உட்கார்ந்துவிட வேண்டியதில்லை. இந்திய வீரர்கள் மேலும் மேலும், தங்களைக் கடின பயிற்சியினால், உழைப்பினால் மேம்படுத்திக்கொள்ளட்டும். கொஞ்சகால இடைவெளிக்குப் பின், வெற்றி தேவதை அவர்களை மீண்டும் சந்திக்கும்.
சீரிய ரசனையையுடைய கிரிக்கெட் ரசிகர்களே, 29 மார்ச் அன்று, சிறப்பான இறுதிப்போட்டியை நியூஸிலாந்தும், ஆஸ்திரேலியாவும் விருந்தளிக்கும் என எதிர்பார்ப்போம்.
**