ஆஹா! What a match! கடைசியில் அந்த ஒரு நிமிஷம், அந்த ஒரு பந்து, தன் வேலையைச் செய்து காட்டிவிட்டது. நியூஸிலாந்தின் கனவை மேலே மேலே தழைக்கச் செய்தது. தென்னாப்பிரிக்காவின் கனவுலகில் இடியாய் இறங்கியது. நவீன விளையாட்டின் இரு எதிர்முகங்கள் இவைதான்: ஒன்று ஏங்கவைக்கும் எழில்முகம். இன்னொன்று கிழித்துத் தொங்கவிடும் கோரமுகம்.
24 மார்ச், 2015. நியூஸிலாந்தின் ஆக்லண்ட் (Auckland) மைதானம். நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா –இரண்டு அணிகளும் முதன்முறையாக உலகக்கோப்பை ஃபைனலில் காலடி எடுத்துவைக்க, முனைப்போடு போட்டிபோட்ட செமிஃபைனல் விளையாட்டு. ஆரம்பத்திலேயே அழுத்தம் அலை அலையாக இரு அணிகளின் மீதும் ஏறுவது தெரிந்தது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா தடுமாற, துவக்க ஆட்டக்காரர்களை ஒவ்வொருவராய் விரைவிலேயே இழந்தது. நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் (Trent Boult) இருவரையும் காலி செய்தார். டூ ப்ளஸீயும்(Faf du Plessis), ரொஸ்ஸொவும் (Rossouw) மேற்கொண்டு நஷ்டமின்றி நிதானமாக ரன் சேர்த்தனர். ரொஸ்ஸொ 39-ல் அவுட்டாக, கேப்டன் டி வில்லியர்ஸ்(AB de Villiers) களத்தில் இறங்கினார். அவரும் டூப்ளஸீயும் சோர்ந்துபோயிருந்த ரன் விகிதத்தை உசுப்பி உயர்த்திச்சென்றனர்.
பாழாய்ப்போன மழை இடையிலே வந்து தன் விளையாட்டைக் காண்பித்தது. பொன்னான நேரத்தைத் தின்றது. ஆட்டம் மீண்டும் துவங்கியபின் ஆட்டமிழந்தார் டூ ப்ளஸீ. 107 பந்துகளில் 82 ரன். அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர்(David Miller) 18 பந்துகளில் 49 என உச்சத்துக்குச் சென்றார்(3 சிக்ஸர், 6 பௌண்டரி). ஆனால் உடனே அவுட்டும் ஆனார். டி வில்லியர்ஸ் அடுத்த முனையில் அபாரமாக ஆடினார். அவர் 65 ரன் எடுத்து அவுட் ஆகாதிருந்த நிலையில், தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ் (மழையினால் நேரம் வீணானதால்), 43-ஓவர்களில் அம்பயர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள். கோரி ஆண்டர்சன் (Corey Anderson) 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டத்தின் நடுவில் மழைவந்து ரகளை செய்தால், நவீன கிரிக்கெட்டின் தலைவிதியான டக் வொர்த்/லூயிஸ் (Duckworth/Lewis) விதி உடனே தலைவிரித்து ஒரு ஆட்டம் போடும். அந்த விதிப்படி, நியூஸிலாந்து வெற்றிக்கு 298 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 298-ஐ நோக்கிய தன் கடும், நெடும் பயணத்தை வேகமாகத் தொடங்கியது நியூஸிலாந்து. கேப்டன் ப்ரெண்டன் மெக்கல்லத்தின் (Brendon McCullum) ஃபிலாசஃபி இது: முதல் 10 ஓவரிலேயே வருவது வரட்டும்; போட்டுச் சாத்து ! இந்த முக்கியமான மேட்ச்சிலும் அவரது தத்துவத்தில் தொய்வில்லை. நியூஸிலாந்து முதல் 5 ஓவர்களில் 71 ரன் என சீறிப் பாய்ந்தது. தென்னாப்பிரிக்க பௌலர் டேல் ஸ்டேனுக்கு(Dale Steyn) செம அடி! அவருடைய ரெப்யுடேஷன் தூள்..தூள். 26 பந்துகளில் 59 ரன்கள்(8 பௌண்டரி, 4 சிக்ஸர்) என உறுமிய மெக்கல்லம் அவுட்டானதும், ரன் விகிதம் சரிந்தது. தென்னாப்பிரிக்க கேப்டன், ஸ்பின், வேகம் என பௌலர்களை மாற்றி, மாற்றித் தாக்க போன மேட்ச்சில் இரட்டை சதம் அடித்த கப்ட்டில் (Guptill), வில்லியம்சன், டெய்லர் என நியூஸிலாந்து விக்கெட்டுகள் விறுவிறுவென நடையைக் கட்டின.
இந்த நிலையில் மைதானத்தில் இருந்தார் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் க்ராண்ட் எலியட்(Grant Elliott). கொஞ்ச வருடங்களாக இவரை நியூஸிலாந்து மறந்துவிட்டிருந்தது. 36 வயதான இவரை நியூஸிலாந்து செலக்டர்கள் திடீரென நினைவில் கொண்டுவந்து, தேர்ந்தெடுத்து உலகக்கோப்பைக்கு அனுப்பிவைத்தார்கள். தென்னாப்பிரிக்காவில் பிறந்து, நியூஸிலாந்தைத் தன் புகுந்தவீடாக மாற்றிக்கொண்டவர் எலியட். நியூஸிலாந்திற்கான தன் நன்றிக்கடனைக் காட்ட இந்த நாளைத்தான் அவர் தேர்ந்தெடுத்தார் போலும். விக்கெட்டுகள் பறிபோய்க்கொண்டிருந்த நிலையிலும் நிதானம் இழக்கவில்லை. அவ்வப்போது கவனமாக ஷாட்டுகளையும் விளையாடி ரன் சேர்த்தார். அதிரடிவீரரான ஆண்டர்சனுடன் சேர்ந்து 103-ரன் பார்ட்னர்ஷிப் கொடுத்து தொய்ந்துகொண்டிருந்த நியூஸிலாந்தின் இன்னிங்ஸைத் தூக்கி நிறுத்தினார் எலியட்.
ஆயினும் ஓவர்கள் குறைந்துகொண்டே வந்தன. தென்னாப்பிரிக்கா பிடியை இறுக்க முயன்றது. டென்ஷன் தீயாகப் பத்திக்கொண்டு போனது. அதிஅழுத்தத்தின் காரணமாக தென்னாப்பிரிக்க வீரர்கள் எளிதான கேட்ச்சுகளை, ரன்–அவுட் வாய்ப்புகளைக் கோட்டை விட்டார்கள். ஆண்டர்சனை ரன் -அவுட் செய்யும் அரிய வாய்ப்பை டி வில்லியர்ஸே டென்ஷனால் நழுவவிட்டார். இடையிடையே அனல் பறக்கும் அருமையான ஃபீல்டிங்குகளையும் தென்னாப்பிரிக்கர்கள் நிகழ்த்தினர். பௌண்டரிக்குப் பறக்கும் பந்துகள் பாய்ந்து நிறுத்தப்பட்டன. தென்னாப்பிரிக்க வீரர்களிடம் எப்படியும் ஜெயித்துவிடவேண்டும் என்கிற உத்வேகம் நெருப்பாய்க் கனன்றது. நியூஸிலாந்தும் விடுவதாயில்லை. ஒருவரை ஒருவர் விழுங்கப் பார்க்கும் சரிசம எதிரிகள். விடாக்கண்டன் Vs கொடாக்கண்டன்!
நியூஸிலாந்து தட்டுத்தடுமாறி இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கையில் கோரி ஆண்டர்சன் 58 ரன்களில் அவுட் ஆனார். அடுத்துவந்த ரோன்க்கியும்(Ronchi) உடனே அவுட் ஆக, டேனியல் வெட்டோரி (Daniel Vettori) க்ரீஸில் வந்து இறங்கினார். ஒரு மலையைப்போலே ஒருபக்கம் நின்று, பெரும் பொறுமை காட்டி சாதுர்யமாக ரன் சேர்த்துக்கொண்டிருந்தார் எலியட். கடைசி ஓவர் வந்தது. டேல் ஸ்டேனிடம் பந்தைக்கொடுத்தார் டி வில்லியர்ஸ். புத்திமதி சொன்னார். 6 பந்துகளில் 12 ரன்கள் எடுக்கவேண்டும் நியூஸிலாந்து. ஒரு பந்தை வெட்டோரி பின்பக்கம் தட்டிவிட பௌண்டரி. அப்புறம் சிங்கிள்கள். ஐயோ, இன்னும் இரண்டே பந்துகள். எடுக்கவேண்டிய ரன்கள் 5. மைதானமே நாற்காலியைவிட்டு எழுந்துகொண்டது. நியூஸிலாந்தால் முடியாதோ? தென்னாப்பிரிக்கா ஜெயித்து ஃபைனலில் நுழைந்துவிட்டது போலிருந்தது. ஸ்டேனிடமிருந்து விதியைத்தாங்கி வேகமாக இறங்கியது 5-ஆவது பந்து. வாழ்வா? சாவா? உயிரையே வெறுத்து அந்தப் பந்தைத் தூக்கி அடித்துவிட்டார் நியூஸிலாந்தின் எலியட். பந்து பேட்டின் மத்தியில் பட்டு புஸ்வானமாகச் சீறியது. மைதானத்தைத் தாண்டி சிக்ஸர் என்றது. ஸ்டேடியத்துக்குள் நியூஸிலாந்தின் மத்தாப்பாய் மலர்ந்தது! நியூஸிலாந்து 299. 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார, அபூர்வ வெற்றி. ஆட்டநாயகன் க்ராண்ட் எலியட் 84 ரன்னெடுத்து அவுட் ஆகாதிருந்தார். (7 பௌண்டரி, 3 சிக்ஸர்).
களிப்பு, கொண்டாட்டம், நியூஸிலாந்துக்கு. தென்னாப்பிரிக்க வீரர்களோ துவண்டுபோய் மைதானத்திலேயே சுருண்டு கிடந்தனர். கடைசி பந்தை வீசிய ஸ்டேன் தலையில் கைவைத்து தரையில் விழுந்துவிட்டார். வெற்றி ஷாட்டுக்குப்பின் கூட்டத்தை நோக்கிக் கையசைத்த எலியட், ஆறுதலாக பௌலர் ஸ்டேனின் தோளில் தட்டிக்கொடுத்தார். மோர்னீ மார்க்கெல்(Mornie Morkel) கண்கலங்கி இடிந்துபோயிருந்தார். கேப்டன் டி வில்லியர்ஸின் கண்கள் சிவந்திருந்தன. முகம் வாடிப்போயிருந்தது. பேசுவதற்கு சிரமப்பட்டார். என்ன போராடி, எப்படியெல்லாம் விளையாடி என்ன பயன்? ஃபைனலுக்குப் போக முடியவில்லையே!
கிட்டத்தட்ட ஃபைனல் என அழைக்கத்தக்க விறுவிறுப்பான ஆட்டம். Two well-matched teams at each other’s throat! Cricket drama at its explosive best. இரு அணிகளும் தீவிரமாய்ப் போராடினார்கள். தங்கள் அணிக்குத்தான் வெற்றி எனப் பெரும் முயற்சி செய்தார்கள். இருந்தும் ஒரு அணிதானே இறுதிப்போட்டிக்குச் செல்லமுடியும்? நியூஸிலாந்து, இதற்குமுன் உலகக்கோப்பையில் 6 முறை செமி-ஃபைனலுக்கு வந்தும் மேலே முன்னேற முடியாத அணி, இந்தமுறை கடும் முயற்சியில் காரியத்தை சாதித்துக்கொண்டுவிட்டது.
சோர்வோடு வீடு திரும்பினாலும், தன் நாட்டிற்காகக் கடைசிவரை உயிர்கொடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவின் கேப்டன் டி வில்லியர்ஸும் அவரது அணியினரும், சிறப்புமிக்க, சாதனை வீரர்கள்தான். சந்தேகமில்லை.
**
கனவு முடிஞ்சு போச்சுன்னு இருந்த கடைசி நொடி அது. முதல்முறையாக ஃபைனல்ஸுக்குப் போறோம்!
அந்த மழை வராமல் இருந்திருந்தால் அனாவசிய டென்ஷன் இல்லாமப் போயிருக்கும். அந்த டி எல் விதியை அடிச்சு நொறுக்கணுமுன்னு இருந்துச்சு. 16 ரன்ஸ் ……. பாரம்:(
நல்லா விவரிச்சு எழுதி இருக்கீங்க. மீண்டும் ஒருமுறை மனக்கண்ணில் பார்த்தேன்.
என்றும் அன்புடன்,
துளசி கோபால் (நியூஸி)
LikeLike