உலகக்கோப்பைக் கிரிக்கெட்: வேகமும் ஆவேசமும்

கிரிக்கெட்டின் மகா நிகழ்வு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை. தற்போது ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் நடைபெற்றுவருவது. இந்தப் போட்டியின் நாக்-அவுட் நிலையில்(knock-out stage) வீர, தீர சாகசச் செயல்கள் சில, கிரிக்கெட் வீரர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன.

முதல் இரண்டு குவார்ட்டர்-ஃபைனல்களும்- தென்னாப்பிரிக்கா-ஸ்ரீலங்கா, இந்தியா-பங்களாதேஷ் குறிப்பிடத்தக்க சாதனைகள்/நிகழ்வுகள் இன்றி நிறைவுபெற்றன.(ஸ்ரீலங்காவை 133 ரன்களுக்குள் தென்னாப்பிரிக்கா பெண்டெடுத்தது ஒருவிதமான சாதனைதான் எனினும்).

அடுத்து 20-3-2015-ல் நடந்த ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் குவார்ட்டர் ஃபைனல் பொசுக்கென்று, எளிதான ஆஸ்திரேலிய வெற்றியாக முடிவடைந்தாலும், அதன் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்களுக்கு கண்கொள்ளா விருந்தாக, மறக்கமுடியா அனுபவமாக அமைந்தது! பாகிஸ்தானின் 213 என்கிற சாதாரண ஸ்கோரை அலட்சியமாக ஆஸ்திரேலியா எதிர்கொண்டு பேட்டிங் செய்தபோதுதான் அது நடந்தது. பாகிஸ்தான் குறைந்த ரன்கள் எடுத்திருந்தபோதிலும், தோற்க நேர்ந்தாலும் ஆஸ்திரேலியாவை ஒருகை பார்த்துவிடவேண்டியதுதான் என்கிற நினைப்பில் பந்து வீசியதாகத் தோன்றியது. குறிப்பாக பாகிஸ்தானின் இடதுகை-வேகப்பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் (Wahab Riaz).

59 ரன்களுக்கு 3 விக்கெட் என்கிற தடுமாற்ற நிலையில் ஆடவந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், மிடில் ஆர்டர் ஆட்டக்காரருமான ஷேன் வாட்சன்(Shane Watson). (ஏற்கனவே அதிவேகப்பந்தினால் சீண்டி, துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னரைத்(David Warner) தூக்கியிருந்தார் வஹாப்). வாட்சனை ஒரு அதிரடி பௌன்சர் மூலம் வரவேற்றார். வாட்சன் அவசரமாகத் தலையைத் தாழ்த்தி பந்தைப் பின்புறம் போகச் செய்தார். அடுத்த பந்தை 150 கி.மீ வேகத்தில் பௌன்ஸ் (bounce) செய்தார் வஹாப் ரியாஸ். பந்து வேகமாகக் குத்துப்பட்டு, சீறி மேலெழுந்து வாட்சனின் காதைக் கிழிக்காத குறையாக வெளியேறியது. மூன்றாவதும் வீர, தீர பௌன்சர்! வாட்சன் பதறிக் குனிய, பந்து வேகமாக முகத்துக்கு நேரே எகிறியது. வஹாப் ஏளனமாக வாட்சனைப் பார்த்தார்; சிரித்தார்; கிண்டலாகக் கைதட்டினார். வாட்சனின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. ஆயினும் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆடுகளம் அதிர்வு களமானது. நடப்பது கிரிக்கெட்டா? யுத்தமா? அடுத்த பந்துகளும் வேகமாகச் சீற, வலையில் விழ மறுத்தார் வாட்சன். பதில் சொல்லவில்லை. ரன் எடுப்பதையும் தவிர்த்தார்.

வஹாப்பின் அடுத்த ஓவரில் சூடு மேலும் தலைக்கேறியது. வாட்சன் வஹாப்பின் துல்லியமான பௌன்சர் தாக்குதலில் கதிகலங்கி நிற்க, அந்தப்பக்கம் அமைதியே வடிவமாய் ஸ்டீவ் ஸ்மித். அனல் பறக்கும் வஹாப்பின் வேகப்பந்துவீச்சை, அடிக்காமல் தலைதாழ்த்தி, உடம்பை வளைத்து பந்து தன்மீதோ, பேட்டின் மீதோ படாமல் மீண்டும் தவிர்த்தார் வாட்சன். வஹாப் எரிச்சலின் உச்சத்துக்குச் சென்றார். வாட்சனின் அருகில் வந்து முகத்தில் இடிக்காத குறையாகக் கத்தினார். அவருடைய உடல்மொழி, முகபாவத்தில் என்ன சொல்லியிருப்பார் என எளிதாக யூகிக்கமுடிந்தது: ‘ஏண்டா, பம்முறே! தலையைக் குனிஞ்சுக்கறே! ஏறி அடிக்கவேண்டியதுதானே! கைல பேட்டு வச்சிருக்கீல்ல!‘ என்கிற கிண்டல்தான் அது! இது ரொம்பவே ஓவர். வாட்சன் மிகுந்த சிரமத்துடன் தன்னை அடக்கிக்கொள்வது தெரிந்தது. முகத்தைத் திருப்பிக்கொண்டார். மைதானத்து வீரர்களிடமும் ரசிகர்களிடமும் அதிஅழுத்தம் தெரிந்தது. மீண்டும் ஓடிவந்து பௌன்சர் வீசினார் வஹாப். மேலும் பொறுக்கமுடியாது வாட்சன் அதை லாங்-லெக்கில் ஹூக் செய்ய, பந்து உயரத்தில் எகிறியது. கீழே கை நீட்டியிருந்த ஃபீல்டர் ராஹத் அலி பந்தைப்பிடித்து டென்ஷனில் நழுவவிட்டார். வஹாப்பின் high class pace expedition ஃபீல்டரின் விளக்கெண்ணெய்த்தனத்தால் வீணானது. வாட்சன் பெருமூச்சுவிட, வஹாப் ரியாஸ் தலையைப் பிய்த்துக்கொள்ளாத குறை. 4 ரன்னிலேயே வீட்டுக்குப் போயிருக்க வேண்டும் வாட்சன். கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் என்று இதைத்தான் சொல்வது.

டென்ஷன் ஓவராகப் பத்திக்கொள்ள கேப்டன் மிஸ்பா-உல் ஹக் பௌலிங்கை மாற்றினார். கொஞ்சம் அமைதி. இதற்குள் ரன்னெடுக்க ஆரம்பித்து விட்டனர் வாட்சனும், ஸ்மித்தும். சிறிது இடைவெளிக்குப்பின் வஹாப் மீண்டும் வந்தார் பந்து போட. வாட்சனுக்கு மேலும் பௌன்சர் டோஸ். ஒரு பௌன்சரை ஹூக் செய்து 4 ரன் எடுத்தார் வாட்சன். வஹாப்பைப் பார்த்து ஏதோ சொல்லிச் சிரித்தார். வஹாப் திருப்பி ஏதோ கோபமாகச் சொல்ல, கேப்டன் மிஸ்பா தலையிட்டு, அம்பயரிடம் சொல்ல, பிரச்சினை கட்டுக்குள் வந்தது. ஆனால் அடுத்த பந்தை அதிவேகத்தில் பௌன்ஸ் செய்ய, அதனைக் குனிந்து பின்னே போகவிட்டார் வாட்சன். பந்துபோட்ட வேகத்தில் வாட்சனைப் பார்த்து முறைத்தார்; மிரட்டிவிட்டு சென்றார் வஹாப் ரியாஸ்.

இப்படி பௌலர்-பேட்ஸ்மனுக்கிடையேயான, ஒரு ஆக்ரோஷ யுத்தம் உலகக்கோப்பையில், முதன் முறையாக, அபூர்வமாகக் காணக் கிடைத்தது. It was a highly controlled, yet top quality intimidatory fast bowling seen in the world stage in recent times.
வஹாப்பின் பௌலிங் பிரமாதமான தாக்கும் வேகப்பந்துவீச்சு என்பதில் சந்தேகமில்லை. எனினும், அவருடைய உடல்மொழி, அளவுக்குமீறிய வார்த்தைவீச்சு ஆகியவை கிரிக்கெட்டில் பொதுவாகக் காணப்படுகிற sledging என்கிற வார்த்தையால் தாக்கி அவமானப்படுத்துதல் நிலையையும் தாண்டியதாக அமைந்தது. In a way, there was poetic justice. Wahab Riaz has given the Aussies, a strong dose of their own medicine! (முன்னதாகத் தான் பாகிஸ்தானுக்காக பேட்டிங் செய்கையில் தன்னை மோசமான வார்த்தைகளால் வாட்சன் கேலி செய்தார் என்றும், அந்த வன்மமான மனநிலையில்தான், தான் அவருக்கு அப்படிப் பந்து வீசியதாகவும் வஹாப் பின்னர் குறிப்பிட்டார்). மேட்ச் ரெஃப்ரீ (Match Referee) இருவரிடமும் விளக்கம் கேட்டு, அபராதம் விதித்து, பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தார்.

ஸ்டார் சேனலில், நேரடி வர்ணனையின்போது ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ப்ரெட் லீயும்(Brett Lee), ஷேன் வார்னும்(Shane Warne), வஹாப் ரியாஸின் அபாரமான பந்துவீச்சைப் புகழ்ந்தார்கள். ஆஸ்திரேலியக் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும், வஹாப்பின் பந்துவீச்சைப்பற்றிப் பின்னர் குறிப்பிட்டு, தான் இதுவரை இத்தகைய கடுமையான பௌலிங்கைச் சமீபகாலத்தில் சந்தித்ததில்லை என்றார்.

இது இப்படியிருக்க, 21-3-15-ல் வெஸ்ட் இண்டீஸுக்கெதிரான காலிறுதிப்போட்டியில் நியூஸிலாந்து துவக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்ட்டில் (Martin Guptil) ஆடிய ஆவேச ஆட்டம் மனதில் நின்றது. உலகக்கோப்பையின் நாக்-அவுட் ஸ்டேஜில் இரட்டை சதம் அடித்து நியூஸிலாந்து ரசிகர்கள் மட்டுமல்லாது, உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார் கப்ட்டில். 237 runs in 163 balls; 11 sixers and 24 fours. An incredible effort by any standard. ஏதோ ஒரு பூதம் அவருக்குள் இருந்துகொண்டு மட்டையை இஷ்டத்துக்கும் சுற்றுவதுபோல் தெரிந்தது! வெகுகாலத்துக்கு இந்த உலகக்கோப்பை ரெக்கார்டு மிஞ்சப்படாதிருக்கும் எனத் தோன்றுகிறது.

செமி-ஃபைனலில், ஆஸ்திரேலியாவோடு இந்தியாவும், தென்னாப்பிரிக்காவோடு நியூஸிலாந்தும் மோதவிருக்கின்றன. உலகின் டாப் நான்கு அணிகள். க்ளென் மேக்ஸ்வெல் (Glen Maxwell), டி வில்லியர்ஸ் (de Villiers), ரோஹித் ஷர்மா, கப்ட்டில் (Guptil), மெக்கல்லம் (Mc Cullum), கோரி ஆண்டர்சன் (Corey Anderson) போன்ற போட்டியின் கதியையே மாற்றும் வீரர்கள் (game changers) பங்கேற்கும் அற்புதமான போட்டிகள். இன்னும் என்னென்ன ஆத்திர, ஆக்ரோஷங்கள், வாண வேடிக்கைகள், பாக்கியிருக்கிறதோ, யாரறிவார் !

**

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s