உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் நுழைந்தது இந்தியா

இன்று(19-3-2015) மெல்போர்னில்(Melbourne Cricket Grounds, Australia) நடந்த காலிறுதிப்போட்டியில் இந்தியா பங்களாதேஷை 109 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கிரிக்கெட் உலகக்கோப்பை 2015-ன் அரையிறுதியில் காலெடுத்துவைத்துள்ளது.

டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் எம்.எஸ்.தோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். நீலநிற ஜெர்ஸியில் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் மைதானத்துக்குள் பிரவேசித்தனர். ஸ்டேடியம் எதிர்பார்ப்பில் பொங்கிவழிய, இந்திய, பங்களாதேஷ் கொடிகள் ஆடி அசைந்தன. பங்களாதேஷ் வேகப்பந்துவீச, ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவனும் நிதானமாக இந்திய இன்னிங்ஸை ஆரம்பித்தனர். 75-run opening partnership. ருபெல் ஹுஸெய்ன் ஆக்ரோஷமாக பந்துவீசினார்.வேகம் காட்டமுடியாமல் குழம்பிய தவன், ஸ்பின்னர் ஷகிப்-அல்-ஹஸனிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த விராட் கோஹ்லி தாக்குப் பிடிக்கவில்லை. ரஹானே நிதானமாக ஆடமுயன்றும் 19 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். A mini collapse in the middle! பங்களாதேஷ் உற்சாகமானது. சிறப்பாக, கட்டுக்கோப்பாக பந்துவீசியது.

28-ஆவது ஓவரின் முடிவில், 114-க்கு 3 விக்கெட் என்று மந்தமாகச் சென்றது இந்திய ஸ்கோர். ரஹானேக்குப் பின் களத்தில் வந்திறங்கினார் சுரேஷ் ரெய்னா. அடுத்த முனையில் வேகமெடுக்கத் தொடங்கியிருந்தார் ரோஹித். இருவரும் அதிவேகமாக ஆட ஆரம்பித்தனர். அடுத்த 16 ஓவர்களில் அசுரவேகம் காட்டி, 122 ரன் சேர்த்தனர். 40-ஆவது ஓவரில் 90 ரன்னில் இருந்த ரோஹித் ஷர்மா, ருபெல் ஹுஸெய்ன் ஃபுல்டாஸை(fulltoss) தூக்கப்போய் மிட்-விக்கெட்டில் பிடிபட்டார். ஆனால் அம்பயர்கள் அதனை உயரமாக எழும்பிய பந்தாகக் கருதி நோ-பால் (No-ball) என அறிவிக்க, ரோஹித் தப்பினார். டிவி ரீ-ப்ளேயில் அந்த பந்து இடுப்புவரைதான் எழும்பியது எனத் தெரியவந்தது. 57 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த ரெய்னா லெக்-சைடில் சில அபாரமான ஷாட்டுகளை விளையாடினார். ரெய்னாவின் வீழ்ச்சிக்குப்பின் வந்த தோனி அதிக நேரம் நிற்கவில்லை. இடையில் சில சூப்பர் ஷாட்டுகளை விளையாடிய ரோஹித் ஷர்மா 137 ரன்னில் டஸ்கின் அகமதின் யார்க்கருக்கு(yorker) பலியானார். 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் ரோஹித்தின் பேட்டிங்கில் பறந்தன. தோனிக்குப்பின் ஆட வந்த ஜடேஜா பௌண்டரிகளையும் சிங்கிள்களையும் வேகமாக அள்ளினார். அவரும் அஷ்வினும் சேர்ந்து ஸ்கோரை 302-க்குக் கொண்டுவந்து இந்திய இன்னிங்ஸை முடித்தனர். பங்களாதேஷ் தரப்பில் டஸ்கின் அகமதுவும், ருபெல் ஹூஸெய்னும் சிறப்பாக பந்துவீசினர்.

மெல்போர்ன் மைதானத்தில் 303 என்கிற இலக்கைத் துரத்துவது எந்த ஒரு அணிக்கும் எளிதானதல்ல. பங்களாதேஷ் தன் பங்குக்கு அதனைச் செய்ய முயன்றது. வேகமாக ஆரம்பித்த துவக்க வீரர் தமிம் இக்பால் 25 பந்துகளில் 25 ரன் எடுத்து யாதவின் பந்துவீச்சில், தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து ஜடேஜாவின் சூபர் த்ரோ (super throw)-வில் ரன் –அவுட்டானார் இம்ருல் கேயெஸ். பங்களாதேஷின் சிறந்த இளம்வீரரான மஹமதுல்லாவும், சௌம்யா சர்க்காரும் நிலைமையைச் சீர் செய்ய முயன்றார்கள். இருவரும் நன்றாக ஆடியும், அதிக நேரம் நீடிக்க முடியவில்லை. மஹ்மதுல்லா 21 ரன்களும், சர்க்கார் 29 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

இந்தியா தனது பிடியை மேலும் இறுக்கியது. தோனி ஸ்பின்னர்களை இறக்கிவிட்டு, பங்களாதேஷ் வேகமெடுக்கமுடியாமல் அழுத்தம் கொடுத்தார். விக்கெட் ஏதும் எடுக்கவில்லையெனினும், அஷ்வின் 10 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து ஷகிப்-அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம் போன்ற சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களைத் தடுமாறச்செய்தார். ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விக்கெட்டுகள் இடையிடையே விழுந்துகொண்டிருக்க ஷப்பிர் ரஹ்மான்(Shabbir Rahman), நாசர் ஹுசைன்(Nasir Hosdain) இருவரும் வேகமாக ரன் எடுத்து 50 ரன் பார்ட்னர்ஷிப் கொடுத்தார்கள். ஆயினும் எட்டவேண்டிய இலக்கு வெகுதூரத்தில் இருந்தது. பங்களாதேஷின் பதற்றம் உச்சத்தில் இருந்தது. 45-ஆவது ஓவரில் யாதவ் கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் தூக்கிவிட, பங்களாதேஷ் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உலக்கோப்பையிலிருந்து வெளியேறியது. உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இந்த உலகக்கோப்பையில் இது, இந்தியாவின் 7-ஆவது தொடர்வெற்றியாகும். தனிப்பட்ட முறையில், கேப்டன் தோனிக்கு இது 100-ஆவது ஒரு-நாள் விளையாட்டு வெற்றி (100th win in One-day internationals). நாளை நிகழவிருக்கும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் காலிறுதியில் வெல்லும் அணி, இந்தியாவை செமி-ஃபைனலில் சந்திக்கும்.

இன்னும் இரண்டே போட்டிகள். வென்றால் இந்தியாவின் கைகளில் உலகக்கோப்பை தகதகவென மின்னும். அதிர்ஷ்ட தேவதையே, உன் அழகுப்பார்வையை இந்தியாவின் மீதே தொடர்ந்து வைத்திரு தாயே !

**

4 thoughts on “உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் நுழைந்தது இந்தியா

  1. அடுத்து ஆஸ்திரேலியாவை நிப்பாட்டி இருக்கோம். போதுமா

    Like

    1. எந்த டீமு? நியூஸிலாந்துக்கு எதிரா 33 ஓவர் கூட தாங்கமுடியாம 151-ல சுருண்டுதே.. அதுதானே!

      Like

Leave a comment