கிரிக்கெட்: கம் ஆன், இந்தியா !

கிரிக்கெட் உலகக்கோப்பையின் காலிறுதிக் கட்டம் (CWC-Quarterfinals) வந்துவிட்டது. 14 அணிகளாக இருந்த நிலை மாறி, 8 பெரும் அணிகளாகச் சுருங்கிவிட்டது. இனிதான் இருக்கு வேடிக்கை. இதுவரை ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால் 2 பாயிண்ட்டுகளோடு போயிற்று ; அடுத்த மேட்ச்சில் பார்த்துக்கொள்ளலாம் என ஒரு அணி இருந்திருக்கமுடியும். இனிமேல் அது நடக்காது. எந்த மேட்ச்சில் இனி தோற்றாலும், தோற்ற அணி அடுத்த ஃப்ளைட் பிடித்து வீடு திரும்பவேண்டியதுதான். கனவு கலைந்துவிடும்.

முதல் காலிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவும் ஸ்ரீலங்காவும் மோதுகின்றன. 19-3-2015-ல் நடக்கவிருக்கும் இரண்டாவது காலிறுதியில் இந்தியா பங்களாதேஷைச் சந்திக்கிறது. அடுத்தடுத்த நாட்களில், ஆஸ்திரேலேயா-பாகிஸ்தான், நியூஸிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் மோதவிருக்கின்றன. நேரடியாகப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள், டிவிக்குமுன் தவமிருப்பவர்கள், பார்களில்(Bars), டீக்கடைகளில், தெருமுனைகளில் உட்கார்ந்து கிரிக்கெட் விவாதம்செய்பவர்கள், அரட்டை அடிப்பவர்கள் என விதவிதமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம்..ம வேட்டை!

சரி, நம்ம கதக்கு வருவோம். இந்தியா சந்திக்கும் பங்களாதேஷ் இப்போது மிகவும் முன்னேறிய டீமாவாக விளங்குகிறது. பயிற்சியாளர் ஹதுருசிங்க (Chandika Hathurusingha) இதற்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது. எதிரி டீமின் பலத்தைக் கண்டு அயர்ந்துவிடாமல், தைரியமாக, சுதந்திரமாக விளையாட பங்களாதேஷ் வீரர்களை அவர் உற்சாகப்படுத்தி வருகிறார். அவரது உந்துதலில், இளம் பங்களாதேஷ் வீரர்களான மகமுதுல்லா (Mahmadullah), சௌம்யா சர்க்கார்(Sowmya Sarkar), தஸ்கின் அகமது(Taskin Ahmed), ருபெல் ஹொசைன்(Rubel Hossain) போன்றோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களோடு பழைய புலிகளான ஷகிப்-அல்- ஹஸன் (Shakib-al Hasan), தமிம் இக்பால்(Tamim Iqbal), முஷ்ஃபிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) ஆகியோரும் தங்களது பேட்டிங் திறமையால், அணிக்கு வலு சேர்க்கின்றனர். கேப்டன் மஷ்ரஃபே மொர்தாஸா (Mashrafe Mortaza)(ஆல்-ரவுண்டர்) ஒரு திறமையான அணித்தலைவராகத் தன்னை வெளிப்படுத்திவருகிறார். இதன் ஒட்டுமொத்த விளைவாக, அனுபவ அணியான இங்கிலாந்தை வெளியே தள்ளிவிட்டு, பங்களாதேஷ் உலகக்கோப்பைக் காலிறுதியில் முதன்முறையாக பிரவேசித்துள்ளது.

தற்போதைய உலக சேம்பியனான இந்தியா சந்திக்கவிருப்பது இந்த அணியைத்தான். மஹேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி ஒரு Professional team –ஆக இந்த உலகக்கோப்பையில் நன்கு இயங்கிவருகிறது. ஆதலால் தன் பலம், பலவீனம் என்ன என்பதை நன்கு அறிந்த தலைமையின் கீழ் விளையாடி வருகிறது இந்தியா. இந்த உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பாக அமைந்துள்ளது முகமது ஷமி, உமேஷ் யாதவ், மோஹித் ஷர்மா ஆகிய இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு. ஷிகர் தவன், விராட் கோஹ்லி, அஜின்க்யா ரஹானே, சுரேஷ் ரெய்னாவோடு, கேப்டன் தோனியும் இந்திய அணியை அவ்வபோது தன் திறமையான பேட்டிங்கினால் கைதூக்கிவிடுகிறார். (தோனியின் தலைமைப்பண்புகளை, குறிப்பாக இந்த உலகக்கோப்பையில் அவர் தன் அணியை திறனாக முன்னடத்திச் செல்வதை, முன்னாள் ஆஸ்திரேலியக் கேப்டனும், கிரிக்கெட் நிபுணருமான இயான் சேப்பல் (Ian Chappel) சமீபத்தில் புகழ்ந்திருக்கிறார்). Strong plus points; So far, so good.

கொஞ்சம் கவலைப்படும்படி சில விஷயங்கள் இருக்கின்றன. முதலில் நமது துவக்கவீரர்களின் பங்களிப்பு. இந்த லெவலில் இது போதாது. ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவனும் உருப்படியாக இதுவரை பார்ட்னர்ஷிப் கொடுக்கமுடியவில்லை (அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு பார்ட்னர்ஷிப் தவிர). துவக்கவீரர்கள் துவண்டால் எப்படி இந்திய அணி தடுமாறும் என்பது வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டங்களில் நன்றாகத் தெரிந்தது. தோனி, ரெய்னா, கொஞ்சம் அஷ்வின் எனக் கைகொடுத்திராவிட்டால் இந்தியாவை சிக்கலுக்குள் தள்ளியிருக்கவேண்டிய மேட்ச்சுகள் இவை. இதேபோல், பேட்டிங்கின் கீழ்நிலை வரிசையில் (lower middle order) ரவீந்திர ஜடேஜா, அஷ்வினுக்கு அதிக வாய்ப்புகள் வரவில்லை. வந்த வாய்ப்புகளில் அவர்கள் சரியாக விளையாடவில்லை. துவக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, ஆல்ரவுண்டர்கள் அஷ்வின், ஜடேஜாவிடமிருந்து பெரும் பங்களிப்பு, வரும் குவார்ட்டர் ஃபைனலிலும் அடுத்த மேட்ச்சுகளிலிலும் இந்தியாவுக்கு தேவைப்படும்.

மற்றொரு விஷயம். இந்தியாவின் Reserve Bench. அதாவது, இதுவரை பெஞ்சில் உட்கார்ந்து இந்தியா விளையாடுவதை வேடிக்கை பார்க்குமாறு செய்யப்பட்டிருக்கும் ரிசர்வ் வீரர்களான அம்பத்தி ராயுடு (Ambati Rayudu), அக்ஸர் பட்டேல் (Axar Patel), ஸ்டூவர்ட் பின்னி(Stuart Binny) மற்றும் புவனேஷ்வர் குமார். முதல் ரவுண்டு மேட்ச்சுகளில் இவர்கள் ஆங்காங்கே ஓரிரு போட்டிகளிலாவது சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் உலகக்கோப்பையில், பெரிய மைதானங்களில் விளையாடிய அனுபவம் கொஞ்சமாவது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். இதைத்தான் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா போன்ற அணிகள் முதல் ரவுண்டில் செய்தன. ஆனால் இந்தியா முதல் 6 போட்டிகளில், ஏனோ, ஒரு ரிசர்வ் ப்ளேயருக்குக்கூட வாய்ப்பு தரவில்லை. திடீரென முக்கிய வீரர்களில் யாருக்காவது காயம், கீயம் ஏற்பட்டு விளையாட முடியாதுபோனால், இந்த பெஞ்ச்வீரர்களில் ஒருவர் மைதானத்தில் இறங்கவேண்டியிருக்கும். அவர்களது அனுபவமின்மை அப்போது தெரியவரும். போதிய பங்களிப்பு-பேட்டிங்கிலோ, பௌலிங்கிலோ அவர்களால் செய்யமுடியாது போகலாம் என்பது கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம். கடுமையான நெட் ப்ராக்டீஸ்(net practice) செய்து தங்களைத் தயார்நிலையில் வைத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை இவர்களுக்கு இப்போது.

காலிறுதிக்காகக் காத்திருப்போம். மெல்போர்னில்(Melbourne) களத்திலிறங்கி கவனமாக விளையாடட்டும் இந்தியா. மேலும் ஒரு வெற்றியோடு மேலே செல்லட்டும்!

**

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s