கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா வெற்றி

கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியா இன்று(14-3-2015) முதல் ரவுண்டில் தன்னுடைய கடைசி மேட்ச்சை இளம் ஆஃப்பிரிக்க தேசமான ஜிம்பாப்வேயை எதிர்த்து ஆடியது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 13 ரன்களில் தன் 2 துவக்க ஆட்டக்காரர்களையும் இழந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமியும், யாதவும் ஆளுக்கொன்று எனத் தூக்கிவிட்டார்கள். அதற்கப்புறம் மைதானத்தில் வந்திறங்கிய கேப்டன் ப்ரெண்டன் டெய்லரும்(Brendon Taylor), ஷான் வில்லியம்ஸும் (Sean Williams) கவனமாக ஆடி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். இந்திய பௌலர்கள் அதிகம் எகிறமுடியாமல் அவர்களின் நல்ல பந்துகளை சாதுர்யமாகச் சமாளித்தனர். மோசமான பந்துகளை பௌண்டரிக்கு விரட்டி ரன் சேர்த்தனர். மெதுவாக ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவானது.

ஜிம்பாப்வேயின் ரன் ஏறுவதைக் குறைக்கவும், பார்ட்னர்ஷிப்பை உடைக்கவும், ஸ்பின்னர்களை இறக்கிவிட்டார் தோனி. இந்த வியூகத்தை எதிர்பார்த்திருந்த ஜிம்பாப்வேயின் பேட்ஸ்மன் இருவரும், ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினின் பந்துகளை எடுத்த எடுப்பிலேயே தாக்க ஆரம்பித்தனர். அஷ்வினின் 4 ஓவர்களில் 38 ரன்கள் என அதிரடி காண்பித்தனர் டெய்லரும் வில்லியம்ஸும். அஷ்வினின் கேரம் பால் (Carrom Ball) போன்ற சாதுர்யப் பந்துகளையும் வில்லியம்ஸ் விடாது முன்வந்து தாக்கினார். அவரது 4-ஆவது ஓவரில் 2 சிக்ஸர், பௌண்டரி என 16 ரன்கள். இந்த உலகக்கோப்பையில் அஷ்வினுக்கு இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை. பாகிஸ்தானிகளும் தென்னாப்பிரிக்கர்களும்கூட அஷ்வினை மரியாதை கொடுத்துத்தான், ஆடியிருக்கிறார்கள். ஆனால் ஜிம்பாப்வே? எதற்கும் கவலைப்படவில்லை. இந்த அட்டகாச பேட்டிங் இந்தியக் கேப்டன் தோனியையும், துணைக்கேப்டன் கோஹ்லியையும் சிந்திக்க வைத்தது. ஃபீல்டிங்கில் மாறுதல் செய்யப்பட்டது. யாதவ் போட்ட அடுத்த ஓவரில் ரன் அதிகம் வரவில்லை. அதற்கடுத்த ஓவர் அஷ்வினுக்குத் தரப்படவில்லை. 2 ஓவர் இடைவெளி கொடுத்து அஷ்வினிடம் மீண்டும் பந்தை வீசினார் தோனி. அஷ்வினின் மூளை துரித கதியில் இயங்கியது. எதிரே அவரை 2 சிக்ஸர் தூக்கிய ஷான் வில்லியம்ஸ். முதல் பந்தை மந்தகதியில் மிடில் ஸ்டம்ப்புக்கு நேராகக் கொஞ்சம் தாழ்வாக வீசி வில்லியம்ஸை வெளியே இழுத்தார் அஷ்வின். பந்தை பௌலரின் தலைக்குமேல் தூக்கி அடிக்க எத்தனித்த வில்லியம்ஸ் முன்னேவந்து அடிக்க, பந்து பேட்டின் நுனியில்பட்டுத் தாழ்வாக ஆனால் வேகமாக பௌலரின் முன் இறங்கியது. போட்ட வேகத்தில் தன்னை நோக்கித் திரும்பிய பந்தை, அது தரையைத்தொடுமுன், மின்னல் வேகத்தில் இரண்டுகைகளாலும் கிண்டித் தூக்கிவிட்டார் அஷ்வின். அருமையான கேட்ச். காட் அண்ட் போல்டு! வில்லியம்ஸால் நம்பமுடியவில்லை, இவ்வளவு எளிதாக அஷ்வின் தன் கதையை முடித்துவிடுவார் என்று.

ஜிம்பாப்வேயின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரை எடுத்தாயிற்று, இன்னொருவர் இன்னும் களத்தில் இருக்கிறாரே? விடுவாரா! வில்லியம்ஸ் போனது பற்றி கவலைகொள்ளாத டெய்லர் மேலும் ஆக்ரோஷத்துடன் ஆட ஆரம்பித்தார். ஜடேஜாவின் ஓவர் ஒன்றில் டெய்லரின் அதிரடியினால் 25 ரன் சேர்த்தது ஜிம்பாப்வே. பிரமாதமாக ஜிம்பாப்வே அணிக்காகத் தன் கடைசி ஆட்டத்தை ஆடிய கேப்டன் ப்ரெண்டன் டெய்லர் 42-ஆவது ஓவரில் மோஹித் ஷர்மாவின் பந்துவீச்சில் வீழ்ந்தார். எக்ஸ்பிரெஸ் வேகத்தில் 138 ரன் எடுத்த அவர், 15 பௌண்டரி, 5 சிக்ஸர் என ஆக்ரோஷமாக ஆடி, ஜிம்பாப்வே ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார். அவர் அவுட்டாகி மைதானத்தைவிட்டு வெளியேறுமுன் சற்றே எமோஷனல் ஆகி, க்ரீஸில்(Crease) நின்றார். இந்தியாவின் விராட் கோஹ்லி உடனே அவரை நெருங்கி வாழ்த்தி, அவரது தோள்களில் தட்டிக்கொடுத்தார். தலையைக்குனிந்து வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட டெய்லர், உணர்ச்சிப்பெருக்கைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தன் ரசிகர்களை நாலாபுறமும் திரும்பிப் பார்த்து பேட்டை மெல்ல அசைத்துக் கொண்டே வெளியேறினார். Brendon Taylor is undoubtedly the toughest soldier of Zimbabwe Cricket. 29-வயதான டெய்லர், ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் சோதனைக் காலங்களில், மோசமான தருணங்களில் சுயநலம் பார்க்காது, தோள்கொடுத்து நாட்டிற்காகச் சிறப்பாக ஆடியவர். ஜிம்பாப்வே கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் அவரை ஜிம்பாப்வே ரசிகர்கள் மட்டுமன்றி, கிரிக்கெட்டின் ரசிகர்கள் அனைவரும் வெகுகாலம் நினைவில் வைத்திருப்பார்கள்.

42-ஆவது ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு 235 என்றது ஜிம்பாப்வேயின் ஸ்கோர். டெய்லருக்குப்பின் வந்த ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ரஸா ஜிம்பாப்வே ஸ்கோரை 300 நோக்கி நகர்த்தும் முயற்சியில் அதிரடி ஆட்டம் காட்டமுயன்றார். ஆனால் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஷமி, யாதவ்,மோஹித் ஷர்மா என வேகப்பந்துவீச்சினால் இறுதி ஓவர்களில் தோனி மிரட்ட, ஜிம்பாப்வேயின் எதிர்ப்பு சிதறியது. கடைசி 52 ரன்களில் மிச்சமிருந்த 6 விக்கெட்டுகளை இழந்து 287-ல் ஆட்டமிழந்தது ஜிம்பாப்வே. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், ஷமி, யாதவ், மோஹித் ஷர்மா ஆளுக்கு 3 விக்கெட் வீழ்த்தினர்.

288 என்பது இலக்கு இந்தியாவுக்கு. எளிதான இலக்கென்றும் கூறிவிடமுடியாது. நடப்பது உலகக்கோப்பை மேட்ச். ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா வழக்கம்போல் இந்திய ஆட்டத்தைத் துவக்கி வைத்தார்கள். தவன் நிதானிக்க, ரோஹித் வேகம் காட்டுவது போல் ஆரம்ப ஓவர்களில் தெரிந்தது. ஜிம்பாப்வேயின் வேகப்பந்துவீச்சாளர் பன்யங்கரா (Panyangara) , தவன், ரோஹித் இருவரையும் ஒரே ஓவரில் வீட்டுக்கு அனுப்பினார். அஜின்க்யா ரஹானேயும், விராட் கோஹ்லியும் அடுத்தடுத்து இறங்கி, சேதத்தைச் சமாளிக்க உழைத்தனர். கஷ்டப்பட்டு 50 ரன் பார்ட்னர்ஷிப். ஆனால் அவர்கள் கதை நீடிக்கவில்லை. ஒரு சமயத்தில், இல்லாத சிங்கிள் ரன்னுக்காக ஓட முயற்சித்த ரஹானேயைத் திருப்பி அனுப்பினார் கோஹ்லி. ஆனால் ரஹானே கரை சேரவில்லை. ரன் அவுட். அடுத்து சுரேஷ் ரெய்னா மைதானத்தில் இறங்கினார். ஸ்கோர் வேகத்தைக் கட்டுப்படுத்த, ஜிம்பாப்வே சுழல்பந்து வீச்சைக் கையில் எடுத்தது. அதுவரை சரியாக ஆடிவந்த விராட் கோஹ்லி ஆஃப் ஸ்பின்னர் சிக்கந்தர் ரஸாவிடம் (Off-Spinner Sikandar Raza) சிக்கினார். எடுத்த ரன்கள் 38. போதுமா இது, என்று கவலைப்பட்டனர் கூட்டமாகக் குவிந்திருந்த ரசிகர்கள். பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் கொடி அசைக்க, இந்தியக் கேப்டன் மஹேந்திர சிங் தோனி சிந்தனையோடு விளையாட வந்தார். 4 wickets down. Not much on scoreboard. 288 என்கிற இலக்கு வெகுதூரத்தில் மங்கலாகத் தெரிந்தது. Pressure situation !

ரெய்னாவும், தோனியும் அடிக்கடி ஆலோசித்தார்கள். 5, 6 ஓவர்களில் பந்துவீச்சின் போக்கைக் கணித்தார்கள். மெதுவாக, இடது, வலதாகத் தட்டி விட்டு சிங்கிள், டபுள் என ஓடினார்கள். ஜிம்பாப்வே ஃபீல்டர்களின் பொறுமையைச் சோதித்தார்கள். பிறகு ரெய்னா தன் வேகத்தைக் காட்ட ஆரம்பித்தார். பந்து மைதானத்துக்கு வெளியே வேகமாகப் பாய்ந்தது. வில்லியம்ஸின் சுழல்பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் அடித்து ரசிகர்கள் கேலரியில் பட்டாசு கொளுத்தினார் ரெய்னா. ஓவர்கள் குறைந்துகொண்டே வர, தோனியும் அவசரமாக கியரை மாற்றினார். பௌண்டரிகள் சீறின. ரன் ஏறியது. சிக்கந்தர் ரஸாவின் பந்துவீச்சில் ஸ்கொயர்-லெக்கில் வேகமாகத் தூக்கினார் ரெய்னா. ஆனால் பந்து பேட்டின் மேல்விளிம்பில் பட்டு மேலே எகிறியது. ஒரு குட்டி யானைபோல அங்கே அசைந்துகொண்டிருந்த ஜிம்பாப்வேயின் ஃபீல்டர் ஹேமில்டன் மஸகாட்ஸா(Hamilton Masakadza) பந்து சிக்கி விட்டதாக, அலட்சியமாகக் கையேந்தினார். ”அட, போடா பொக்கி ! உன்னிடமெல்லாம் சிக்குவேனா!” என்பதுபோல் பந்து அவர் கையில் இறங்கியும் தவ்விக் குதித்து நாட்டியம் ஆடியது! ஏந்திய கையோடு அல்லாடிய அவருக்குத் தண்ணிகாட்டித் தள்ளிப்போய் விழுந்தது. அந்த முக்கியமான கேட்ச்சை கோட்டைவிட்ட மஸகாட்ஸாவைப் பார்த்து ஜிம்பாப்வே ரசிகர் கூட்டம் நறநறவெனப் பல்லைக் கடித்தது. பௌலர் ரஸாவின் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை. 47 ரன்னில் முடிந்திருக்கவேண்டும் ரெய்னாவின் கதை. என்னவோ, ஒரு அதிர்ஷ்டம்.

தொடர்ந்தது இந்தியாவின் அதிரடித் தாக்குதல். ஆட்டத்தின் விறுவிறுப்பில் மேலும் வேகம் காட்டிய தோனி, இந்த உலகக்கோப்பையில் முதன்முதலாக அரைசதம் கடந்தார். ஆக்லந்து மைதானத்தில் ஆணும் பெண்ணுமாகக் கூடியிருந்த இந்திய ரசிகர்கூட்டம் உற்சாகத்தில் துள்ளியது. ரெய்னா 94 பந்துகளில் 100 எடுத்து மேலும் போதை ஏற்றினார். உலகக் கோப்பையில் அவரது முதல் சதம். 49-ஆவது ஓவரில் பன்யங்கரா வீசிய பௌன்சரை ஃபைன்லெக் திசையில் ஹூக் செய்து வெற்றி சிக்சர் விளாசினார் கேப்டன் தோனி. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. தோனியும் ரெய்னாவும் சேர்ந்து 196 ரன் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். இறுதியில் இருவரும் அவுட் ஆகாதிருந்தனர். தோனி 85; ரெய்னா 110 ரன்கள்.இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றிமுகம். உன்னதம்.

வென்றுவிட்டபோதிலும் இந்தியா இந்த போட்டியில் கவனிக்கவேண்டிய விஷயங்கள்:

தென்னாப்பிரிக்கா, பாக்கிஸ்தான் போன்ற வலுவான எதிரிகளுக்கெதிராகவும் சிறப்பாக பந்துவீசி, ரன்களைக் கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளையும் சாய்த்தனர் சுழல்பந்துவீச்சாளர்களான அஷ்வினும் ஜடேஜாவும். ஆனால் அவர்களை ஜிம்பாப்வே எளிதில் சமாளித்தது ஆச்சரியம் தந்தது. அஷ்வினுக்கு ஒரு விக்கெட், ஜடேஜாவுக்கு விக்கெட் ஏதுமில்லை என்பது கவனிக்கத்தக்கது. இருவரும் சேர்ந்து வழங்கியதோ 140-க்கும் மேற்பட்ட ரன்கள். இந்த மேட்ச்சின் வீடியோவை, அடுத்து இந்தியாவை காலிறுதியில் சந்திக்கவிருக்கும் பங்களாதேஷ் அவசியம் போட்டுப்பார்க்கும். தோனி கவனிக்கவேண்டிய விஷயம் இது.

ரவீந்திர ஜடேஜா இதுவரை நடந்த 6 போட்டிகளில், பேட்டிங் என்று உருப்படியாக ஏதும் செய்யவில்லை. இனிவரும் முக்கியமான மேட்ச்சுகளில், இன்று விழுந்ததுபோல் முன்னணி வீரர்கள் வேகமாக அவுட் ஆகும்பட்சத்தில், ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் கைகொடுக்க வேண்டி வரும். இவர்களுக்குக் கடும் பேட்டிங் பயிற்சி முக்கியம்.

நியூஸிலாந்தின் ஆக்லண்ட் மைதானத்தில் Swamy Army போன்ற இந்திய ரசிகர் அமைப்பு முழு அளவில் கலந்து கொண்டது, கலகலப்பாக இருந்தது. ஸ்வாமி ஆர்மியின் மூவர்ண முண்டாசுகளும், மேள தாளங்களும், வண்ண வண்ண டர்பன்களோடு இந்திய சீக்கிய ரசிகர்களும், ரசிகைகளும் மைதானத்துக்கு அழகு சேர்த்தனர். இந்திய அணியும் அவர்களைக் குஷிப்படுத்தத் தவறவில்லை.

**

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s