உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தின் அதிர்ச்சி வெளியேற்றம்

இந்த கிரிக்கெட் உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் துரித வெளியேற்றம் வெகுவாகக் கேலி செய்யப்பட்டும், விமரிசிக்கப்பட்டும் வருகிறது. கேலி பெரும்பாலும் ஆஸ்திரேலியாவிலிருந்து. கடுமையான விமரிசனம் இங்கிலாந்திலிருந்து.

இந்தியாவுக்கு 2007-ல் நடந்ததுதான் இங்கிலாந்துக்கு இப்போது ஏற்பட்டிருப்பது. அந்த உலகக்கோப்பையில் இந்தியாவின் கேப்டனாக இருந்த ராகுல் திராவிடைக்(Rahul Dravid) கேட்டுப் பாருங்கள் – அவமானம், தலைக்குனிவு என்றால் என்ன என்று தெரியவரும். பங்களாதேஷிடம் படுபரிதாபமாகத் தோற்று முதல்சுற்றிலேயே உலகக்கோப்பை 2007-லிருந்து வெளியேறியது இந்தியா. டெண்டுல்கர், சேவாக், தோனி, போன்ற ஜாம்பவான்களைக் கொண்டிருந்த சிறப்பான இந்திய அணி. இருந்தும் க்ரெக் சாப்பல்(Greg Chappel) என்கிற நம்மிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்குக் கைக்கூலியாக வேலை செய்பவரை பயிற்சியாளராகக் கொண்டதால் இந்தியா அனுபவித்த துயரம் அது. சரி, விடுங்கள். அது பழைய கதை. இப்போது இங்கிலாந்துக்கு வருவோம்.

முக்கியமான லீக் மேட்ச்சில் பங்களாதேஷை எதிர்த்து விளையாடியது இங்கிலாந்து. 275 எடுத்திருந்த பங்களாதேஷை 276 எடுத்து வெல்ல வேண்டும். எளிதாகத் தோன்றுகிறதல்லவா இலக்கு? ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்ரீலங்கா ஆகிய வலுவான அணிகளிடம் அடிவாங்கி இடுப்பு கழண்டிருந்த இங்கிலாந்துக்கு, பங்களாதேஷிடம் தோற்றுவிடக்கூடாதே என்கிற பயம். 276 என்பது 376 மாதிரி தோன்றியிருக்கவேண்டும். முக்கி, முனகி நகர்ந்து, 260-ல் பிராணனை விட்டுவிட்டது. அவ்வளவுதான். அதே பிரிவிலிருந்த பரம்பரை எதிரியான ஆஸ்திரேலியா கொக்கரிக்க ஆரம்பித்துவிட்டது. இங்கிலாந்தின் லட்சணம் எங்களுக்குத் தெரியாதா! அவர்கள் விளையாடுகிற அழகில், தோற்றதிலும் உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டதிலும் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று இளித்தது ஆஸ்திரேலியா!

ட்விட்டரில் கேலி, கிண்டல், வசவு ஏராளம். பங்களாதேஷிடம் தோற்றதும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் ’இருங்கள்; டேட்டாவைப் பார்க்க வேண்டும்’(I have to look at the data)என்றார் இங்கிலாந்தின் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் (Peter Moores). (விளையாட்டு வீரர்களை விடவும் டெக்னாலஜியின் மீது அதீத நம்பிக்கை!) நல்ல பயிற்சியாளர்தான் அவர். ஏதோ அப்பாவித்தனமாகச் சொல்லி மாட்டிக்கொண்டார். ”276 அடிச்சா ஜெயிக்கலாம்; அடிக்கலை உங்க டீம்; இதப் புரிஞ்சுக்கறதுக்கு எதுக்குய்யா லேப்டாப்பு, டேட்டா எல்லாம்!” என்று சீறினார்கள் சிலர். இங்கிலாந்தின் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், பீட்டர் மூர்ஸின் ஏற்கனவே நரைத்திருந்த தலை மேலும் வெள்ளையானதாக ஒரு பிரகஸ்பதியின் விமரிசனம். ஒரு முகநூல் பதிவில் மூன்று படங்கள். ஒன்றின் கீழ் எழுதியிருப்பது: தென்னாப்பிரிக்காவை வழிநடத்திச் செல்பவர். மேலே அந்த அணியின் கேப்டன் டி’வில்லியர்ஸ் (AB de Villiers) படம். அடுத்ததாக நியூஸிலாந்தை வழிநடத்துபவர். மேலே நியூஸிலாந்து அணியின் கேப்டன் ப்ரெண்டன் மெக்கல்லம்(Brendon McCullum) படம். மூன்றாவதாக ’இங்கிலாந்திற்கு வழிகாட்டிச்செல்வது’ என்கிற வாசகத்தின் மேலே காணப்படும் படம்: பறக்கும் British Airways விமானம்! இப்படிப்போகிறது நக்கல்.

இந்த விமரிசனத்துக்கெல்லாம் உச்சமாக “ இங்கிலாந்துக்கு ஒருநாள் கிரிக்கெட் விளையாடத் தெரியாது என்பது பழைய செய்தி. அதற்கு எந்த வகையான கிரிக்கெட்டும் விளையாடத் தெரியாது என்பதுதான் இப்போது முன் நிற்கும் பிரச்னை!” என்கிறார் கிரிக்கெட் பத்தி எழுத்தாளர் சைமன் பார்ன்ஸ் (Simon Barnes). “கெவின் பீட்டர்ஸனின் சாபம்!” என்கிற தலைப்பில் அவர் பத்தி ஒன்று எழுதியிருந்தார் அதில்தான் இங்கிலாந்து கிரிக்கெட்டின் தற்போதைய நிலைபற்றி இப்படிக் குறிப்பிட்டார். மிகவும் சிறப்பாக இங்கிலாந்துக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் விளையாடியவர் (ஐபிஎல் புகழ்) கெவின் பீட்டர்ஸன்(Kevin Peterson). நன்றாக விளையாடிக்கொண்டிருந்த அவரை அச்சுபிச்சு காரணங்களுக்காக சிலர் பேச்சைக்கேட்டுக்கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அணியிலிருந்து விலக்கியது. அலெஸ்டர் குக்கைக்(Alastair Cook) கேப்டனாக்கியது. பீட்டர்சனை நீக்கியதும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒற்றுமையாக, சிறப்பாக இயங்குவதாகவும் கூறிக்கொண்டது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. ஆனால் உண்மையில் என்ன நடந்தது? டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்துக்குப் படுதோல்வி. அலெஸ்டர் குக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். உலகக்கோப்பை துவங்கவிருந்த சில வாரங்களுக்கு முன் ஒன்–டே ஸ்பெஷலிஸ்ட் ஆய்ன் மார்கன் (Eoin Morgan) கேப்டனாக நியமிக்கப்பட்டார். உலகக்கோப்பையில், கிரிக்கெட்டுக்குப் பதிலாக கிட்டிப்புல் விளையாடியது இங்கிலாந்து. விளைவு? விதியும் சேர்ந்து ஆடியதில் முதல் ரவுண்டிலேயே அவமான வெளியேற்றம். இங்கிலாந்து நாளை (13-3-2015) ஆஃப்கானிஸ்தானை எதிர்த்துத் தன் கடைசி மேட்ச் விளையாடுகிறது. முடிவு எதுவாயினும் நாட்டுக்குப்போக ஃப்ளைட் பிடிக்கவேண்டியதுதான்.

கிரிக்கெட் போன்ற ஹை-ப்ரொஃபைல் விளையாட்டில் (high-profile sport), அமைக்கப்படும் யுக்திகளோடு, இலவசமாக வரும் விரக்திகளும் அதிகம். எந்த ஒரு வலுவான டீமுக்கும் தளர்வும், தோல்வியும் அவ்வப்போது நிகழக்கூடும். ப்ரொஃபஷனல் அணி (professional team) என்றால் வெற்றி, தோல்வி என்கிற இரு எதிரெதிர் துருவத்தைக் கடந்து நிற்கும் மனநிலை, ஆடும் நிலை கேப்டனுக்கும், அணியின் ஒவ்வொரு வீரனுக்கும் இருக்கவேண்டும். விளையாட்டில் பாராட்டுதல்கள் மெதுவாக, நிதானமாக வரும். தோற்றுவிட்டாலோ அதிவேகமாக, கேலியும் கிண்டலும், வசவுகளும் வண்டி வண்டியாய் வந்திறங்கும். விளையாட்டுத்திறன், உடற்தகுதி மட்டுமன்றி, விளையாட்டு உளவியலிலும்(Sport psychology) தேர்ந்திருத்தல், சமநிலையோடு இருத்தல் கேப்டனுக்கும் வீரர்களுக்கும், அவசியமாகிறது. அப்போதுதான் தன் அணிக்காக, நாட்டிற்காக, நீடித்து விளையாட முடியும். வெற்றியும் புகழும் பெற முடியும். இது ஒவ்வொரு நாட்டு வீரனுக்கும், அணித்தலைவனுக்கும் பொருந்தும்.

**

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s