கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் நெஞ்சுநிமிர்ந்த வீறுநடை தொடர்கிறது. ‘B’ பிரிவில் மிகவும் வலிமையான டீம் எனவும், உலகக்கோப்பையை வெல்ல மிகவும் தகுதியுள்ளது எனவும் பெரிதாகப் பேசப்படும் தென்னாப்பிரிக்காவை இந்தியா அசுரத்தனமாகத் தாக்கி வீழ்த்திவிட்டது.

ரசிகர்களாலும் கிரிக்கெட் நிபுணர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, சற்றுமுன் மெல்போர்னில் (Melbourne Cricket Grounds (MCG))முடிவடைந்த, இந்த கிரிக்கெட் மல்யுத்தத்தில்தான் இந்தியா தன் வேலையைக் காட்டியது!

சென்ற உலகக்கோப்பையின் போது இந்தியாவின் பயிற்சியாளராக இருந்து புகழ்பெற்ற கேரி கர்ஸ்டன் (Gary Kirsten) தற்போது தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளர். இந்திய அணியின் பலம் / பலவீனம் என நுட்பங்களை அறிந்தவர். போதாக்குறைக்கு ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸிற்காக(CSK) விளையாடி, அதில் கூட விளையாடிய தோனி, அஷ்வின், ரெய்னா, மோகித் ஷர்மா போன்ற வீரர்களை நன்கறிந்த ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்ஸீ (Mike Hussey) தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் கன்சல்டண்ட். இந்தியாவிற்காகவே இத்தனை ஏற்பாடுகள் செய்திருந்ததா தென்னாப்பிரிக்கா! ம்….இறுதியில் விழுந்தது தலையில் இடி!

எப்படித்தான் நிகழ்ந்தது இந்த இந்திய வெற்றி? ஷிகர் தவனிலிருந்து ஆரம்பம் நம் கதை. இவரைப்பற்றி என்ன சொல்வது? கடந்த இரண்டு மாதங்களாக ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டிகளில் அச்சுபிச்சென்று விளையாடி அவுட்டானதால் பேர் கெட்டுப்போயிருந்தது. உலகக்கோப்பை என்று வந்தவுடன் எந்த பூதம் வந்து இவருக்குள் நுழைந்துகொண்டதோ தெரியவில்லையே.. சும்மா மாறிவிட்டாரே மனுஷன் ! முதல் மேட்ச்சில் பாகிஸ்தானின் கோட்டைக்குள் புகுந்து ஒரு பரபர இன்னிங்ஸ் விளையாடி தன்னைக் குறைசொன்ன விமர்சகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்தப் போட்டியிலும் தன் சூரத்தனத்தைக் காட்டிவிட்டார் தவன். இந்தியாவின் முதல் விக்கெட் (ரோஹித் ஷர்மா) ரன் அவுட்டில் ’லொடக்’காக, தவன் கோஹ்லியுடன் சேர்ந்து பதவிசாக முதலில் ஆடினார். அரை சதம் கடந்த நிலையில் அவர் தூக்கிய பந்தைக் கேட்ச் பிடித்து பிறகு நழுவ விட்டு அன்பளிப்பு செய்தார் ஆம்லா (Amla). அதற்குப்பின் சூடான தவன், வேகப்பந்துகளை மெல்போர்ன் மைதானத்தின் நாலாபுறமும் விசிறிவிட ஆரம்பித்தார். கடுப்பான தென்னாப்பிரிக்க பௌலர் டேல் ஸ்டேன்(Dale Steyn), ஒரு பந்தை தவனின் நெஞ்சுக்கு நேராக வேகமாக எழும்பவிட்டார். தவன் பின்புறமாகச் சாய்ந்து அதனைத் தவிர்க்க முயல, அது அவரது நெஞ்சில்பட்டு எகிறியது. முறைத்த தவனைப் பார்த்துக் கண்ணடித்தார் ஸ்டேன். ’தம்பி! எங்கிட்ட வச்சுக்காத உன் வெளயாட்ட!’ என்று சொல்லப்பார்த்தாரா. தவன் இதற்கெல்லாம் மசிபவரா என்ன!. அடுத்துவந்த ஸ்டேன் பந்துகளில் அதிரடியைக் காண்பித்தார். ஸ்டேனின் ஒரு பந்தை, வேகமாக முன்னேறி லாங்-ஆன் திசையில் சிக்சர் அடித்து மைதானத்தில் மத்தாப்புக் கொளுத்தினார் தவன். மூவர்ணக்கொடி ரசிகர்களுக்கு ஒரே கிளுகிளுப்பு! (ஆஹா! என்ன பேட்டிங்டா பண்றான் இவன் !)

இந்தியாவின் ரன் விகிதம் உயர ஆரம்பித்த நிலையில் நிதானமாக அடுத்த பக்கத்தில் ஆடிவந்த கோஹ்லி, தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் தாஹிரிடம்(Tahir) விக்கெட் இழந்து 46-ரன்னில் நடையைக் கட்டினார். பின் வந்தவர் ரஹானே. இவர் அடித்தால் பந்து பௌண்டரிக்குப் பக்கத்திலாவது போகுமா எனக் கேட்கவைக்கும் அப்பாவித் தோற்றம். ஆனால் அவருக்குள் இருப்பது வேறொரு சரக்கு! பசுத்தோல் போர்த்திய புலி. டேல் ஸ்டேன், மார்னீ மார்க்கெலின் ஆவேசப் பந்துவீச்சை ரஹானேயும் தவனும் ஒரு பிடி பிடித்தார்கள். பௌலர்கள் திணற, குழம்பிபோனார் கேப்டன் டிவில்லியர்ஸ். ஃபிலாண்டரின்(Philander) பந்துவீச்சும் எடுபடாது போக(காயம் வேறு), நாலாவது வேகப் பந்துவீச்சாளரான வேன் பார்னெல்(Wayne Parnell) பக்கம் திரும்பினார். ரஹானேயும் தவனும் அவரைப் போட்டுத்தாக்கியதில் ரன்விகிதம் ஏறியது. பார்னெல் பந்து வீசுவது எப்படி என்பதையே மறந்து போனவர் போல் விழிக்க ஆரம்பித்தார்.

16 ஓவரில் 125 அதிவேகரன்களைச் சேர்த்தனர் தவன் –ரஹானே ஜோடி. பிரமாதமாக ஆடிய ஷிகர் தவன் 137 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரெய்னா, தோனி, ஜடேஜா ஆகியோர் அதிகம் தாக்குப்பிடிக்கவில்லை. அருமையான அதிரடி ஆட்டத்துக்குப்பின் (60 பந்துகளில் 79 ரன், 3சிக்ஸர்) ரஹானேயும் அவுட்டானார். ஒருசமயம் 320-ஐ இந்திய ஸ்கோர் தொடலாம் என நினைத்திருந்த வேளையில், மார்க்கெல், ஸ்டேன் இருவரும் வேகப்பந்துவீச்சை இறுக்க, இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. 7 விக்கெட்டுகள் பறிகொடுத்த நிலையில், அஷ்வினும், ஷமியும் ஸ்கோரைப் பிடித்துத் தள்ள, ஸ்கோர் 300-ஐத் தாண்டியது. 307/7 என்கிற நிலையில் இந்திய ஆட்டம் முடிந்தது.

இடைவேளையின்போது தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளர் கர்ஸ்டனும் மைக் ஹஸ்ஸியும் தென்னாப்பிரிக்க வெற்றி பற்றி ஆலோசனை செய்தனர். வியூகம் அமைத்தனர். 308 அடித்தால் வெற்றி என ஆடவந்தது தென்னாப்பிரிக்கா. துவக்க ஆட்டக்காரரான டி காக்-ஐ (Quinton de Kock) சொற்ப ரன்னிலே இழந்தபின், உஷாராக ஆரம்பித்தனர் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஆம்லாவும், டூ ப்ளஸ்ஸீயும்(du Plessis). இந்திய பௌலர்கள் திட்டமிட்டு ஒழுங்கான திசையில், கறாராக பந்துவீசினார்கள். தென்னாப்பிரிக்க ரன்கள் ஏறுவதில் திணறல் ஏற்பட்டது. ஆம்லா (Amla) இந்நிலையில் அவுட் ஆக, கேப்டன் டிவில்லியர்ஸ்(AB de Villiers), போட்டியின் போக்கையே மாற்றி அமைக்கும் வல்லமை உடைய தென்னாப்பிரிக்க வீரர், களத்தில் இறங்கினார். அவர் நினைத்தபடி, இஷ்டப்படி மட்டையைச் சுழற்ற விடவில்லை இந்திய பந்துவீச்சாளர்கள். ஒரு இறுக்கம் உருவானது தென்னாப்பிரிக்காவின் ஆட்டத்தில். இந்நிலையில், இந்தியக் கேப்டன் தோனி சுழல்பந்துவீச்சுக்குத் தாவினார். ரவீந்திர ஜடேஜா பந்துவீச, ஒரு ஓவரில் நான்கு டாட்-பந்துகள்(dot balls) எனப்படும் ரன் எடுக்கமுடியாத, துல்லியமான பந்துகள் வந்து விழுந்தன. டிவில்லியர்ஸ் அழுத்தத்துக்குள்ளானார். அவர் ஆடுகிற விதமா இது. 5-ஆவது பந்தில் எப்படியோ சந்துபொந்தில் தட்டிவிட்டு ரன் ஓடினார். ஒரு ரன்னுடன் நில்லாது, இரண்டாவது ரன்னுக்கு ஓடப்போக மைதானத்தில் ஓடிக்கொண்டிருந்த பந்து இந்திய வீரர் மோஹித் ஷர்மாவிடம் சிக்கியது. அவர் அதை ஆவேசமாக எடுத்து வீச, பந்து துல்லியமாய் விக்கெட்கீப்பர் பக்கமுள்ள ஸ்டம்ப்பை நோக்கி சீறிவந்தது. டிவில்லியர்ஸ் பாய்ந்து கோட்டைத் தொடமுயற்சிக்க, தோனி பந்தை லபக் செய்து ஸ்டம்பில் சேர்த்துவிட்டார். செண்ட்டிமீட்டர் கணக்கில் தென்னாப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் அவுட் ஆகி வெளியேறினார். அவர் எடுத்த ரன் 30 மட்டுமே. தென்னாப்பிரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. கொஞ்ச நேரத்தில் நன்றாக ஆடிவந்த டூ ப்ளஸ்ஸீ (55) அவுட்டாக, தென்னாப்பிரிக்காவுடன் குழப்பமும், தடுமாற்றமும் கூட்டணி அமைத்தன. 22 பந்துகளில் 22 ரன் எடுத்து அசத்திவந்த அதிரடி வீரர் டேவிட் மில்லர், உமேஷ் யாதவின் சாமர்த்திய ஃபீல்டிங்கில் ரன் அவுட்டானார். இடையில் அஷ்வின்-ஜடேஜா ஜோடி தங்கள் சுழல்பந்துவீச்சின் திறமையைக் காட்டப்போக தென்னாப்பிரிக்கவுக்கு விழி பிதுங்கியது. அஷ்வினிடம் மூன்று, ஜடேஜாவிடம் ஒன்று என முக்கியமான வீரர்களைப் பறிகொடுத்தது. 44 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்த தென்னாப்பிரிக்கா, மொத்தம் 177 ரன்களில் இந்தியாவிடம் ‘போதும் சாமி! போட்டுக் கொல்லாதீங்க!’என்று சரணாகதி அடைந்தது.

இந்தப்போட்டியில் ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. பொதுவாக சிறப்பாக காணப்படும் தென்னாப்பிரிக்காவின் ஃபீல்டிங், இந்த மேட்ச்சில் வழக்கமாகக் காணப்படும் இந்திய ஃபீல்டிங் போல் இருந்தது. அதாவது பந்தை எடுப்பதில் தடுமாறுதல், குறிதவறி பந்தை எறிதல், கேட்ச்சுகளைக் கோட்டைவிடுதல் போன்றவை இன்று தென்னாப்பிரிக்காவிடம் நிகழ்ந்தன. அவர்களிடம் அவ்வளவு டென்ஷன்! ஆனால், ஆச்சரியம் அளிக்கும் வகையில் வழக்கம்போல் தடுமாறாமல், இந்த போட்டியில் இந்திய ஃபீல்டிங் சிறப்பாக அமைந்தது. இது குறிப்பிடத்தக்க வரவேற்கத்தக்க மாற்றம்.

உலகக்கோப்பைப் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் வெற்றியை இந்தியா இன்று நிகழ்த்தியுள்ளது. அதுவும் எப்பேர்ப்பட்ட வெற்றி. மைதானத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கர் புன்னகை புரிந்தார். மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 90000 ரசிகர்கள் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருக்க மூவர்ணக்கொடி மேலும் மேலும் உயர்ந்தது.

இந்தியாவே, உன் அருமையென்ன, பெருமையென்ன ! ஆஸ்திரேலியாவுக்குத்தான் புரிந்ததென்ன !
**

2 thoughts on “கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா

  1. அருமையான விமர்சனம் இந்தியாவின் அதிரடி தாக்குதல் கண்டு ஆஸ்திரேலியாவிற்கு அடி வயிறு கலக்கி இருக்கும்

    Like

  2. well india played well in all aspects; dhonis good captaincy dhawans responsible batting ashwins good bowling….. let india play well in future matches and lift the cup …to our great joy…

    Like

Leave a comment