அரிதாகக் கிடைக்கும் விருதுகள்

’அரிதாக’ என்று ஏன் எழுதினேன் என்றால் அப்படித்தான் இங்கு காலங்காலமாக நடந்துவருகிறது. தமிழின் சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விமரிசகர்கள், கட்டுரையாளர்கள் போன்ற மொழிக்கு வளம்சேர்க்கும் படைப்பாளிகள் பொதுவாகவே அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை. இருபது முப்பது வருஷத்துக்கும் மேலாகத் தீவிரமாக இயங்கிவரும் தமிழ்ப் படைப்பாளிகளைக்கூட தமிழ்நாட்டில் பரவலான பொதுவாசகர்களுக்குத் தெரிவதில்லை என்பது நாம் வாழும் காலத்தின் சோகம். அவர்களது படைப்பிற்கேற்ற மதிப்பு, அங்கீகாரம் வாழ்நாளில் இந்த எழுத்தாளர்களுக்குக் கிடைப்பதில்லை. மாறாக, அலட்சியம், அவமானம், எள்ளல் இவைதான் வெகுதாராளமாக அவர்கள்மீது நம்மவர்களால் வசைபோலப் பொழியப்படுகிறது. நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கேற்றதற்காக, தங்களது வாழ்நாளை அதற்கென செலவழித்ததற்காக, நாட்டின் வாழ்நாள் பரிசு அவர்களுக்கு இவைதான்.

இத்தகைய நம்பிக்கை இழக்கவைக்கும் சூழலில், ஒரு மெலிதான ஆச்சரியம் தரும் வகையில், இந்த டிசம்பர் மாதம் தமிழ் இலக்கிய உலகின் விருது மாதமாக ஆகிவிட்டது! பல வருடங்களாக தங்கள் படைப்புகள் மூலம் தமிழ் மொழிக்கு அழகு சேர்த்துவரும் தமிழின் மூன்று சிறந்த இலக்கிய ஆளுமைகளுக்கு கீழ்க்கண்ட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன :

எழுத்தாளர் பூமணி – 2014-ஆம் ஆண்டிற்கான ‘சாகித்ய அகாதெமி விருது’–’அஞ்ஞாடி’ தமிழ் நாவலுக்காக.

கவிஞர் ஞானக்கூத்தன் – ’விஷ்ணுபுரம் விருது’

எழுத்தாளர் ஜெயமோகன் – ’இயல் விருது’

மேற்கண்டவற்றில் சாகித்ய அகாதெமி விருது பாரத அரசினால் வருடாவருடம் இந்திய மொழிகளில் சிறப்பான இலக்கியப் படைப்புக்காக வழங்கப்படுவது.

ஒரு இருநூறு ஆண்டுக்காலகட்டத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியின் வாழ்க்கை மாற்றங்களை, அடித்தட்டு மக்களின் கோணத்திலிருந்து அலசுகிறது பூமணியின் ’அஞ்ஞாடி’ என்கிற நாவல். ஆசிரியரின் எழுத்தில் கரிசல் மண்ணின் மாறாத மணம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்புடைய புத்தகங்கள், ஆவணங்களை ஆழ்ந்து படித்து, ஆராய்ந்து அருமையாக இந்த நாவலை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டின் சாதிக் கலவரங்களின் கள ஆய்வு நூலாகவும் இந்த நாவல் வாசிக்கப்படுகிறது. தேசிய விருதிற்கு மிகவும் தகுதியான தமிழ் எழுத்தாளர். இவரது இதர படைப்புகளாக ‘நைவேத்தியம்’, ’பிறகு’ ஆகிய முக்கியமான நாவல்களும், ’நொறுங்கல்கள், ’ரீதி’, ’வயிறுகள்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்காக (National Film Development Corporation), ‘கருவேலம்பூக்கள்’ என்கிற குறும்படத்தையும் பூமணி இயக்கியுள்ளார்.

கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படவிருக்கும் ‘விஷ்ணுபுரம்’ விருது, விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினரால் ஒவ்வொரு வருடமும் தமிழின் சிறந்த ஆளுமைக்கு வழங்கப்படுவது. கடந்த அரைநூற்றாண்டு காலகட்டத்தின் தமிழின் மிகச்சிறந்த நவீனக் கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தன் இந்த விருதிற்கு மிகவும் ஏற்றவர். சமகால வாழ்வின் அவசரங்களை, அதீதங்களை, விசித்திரங்களை அவதானித்து, தனக்கே உரித்தான ஒரு அங்கதத் தொனியுடன் கவிதையாய் வரையும் கவிஞர். மீண்டும் அவர்கள், சூரியனுக்குப் பின்பக்கம், பென்சில் படங்கள், அன்று வேறு கிழமை போன்ற இவரது கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

’இயல் விருது’ கனடா நாட்டின் இலக்கியத்தோட்டம் அமைப்பு, கனடாவின் டொரண்ட்டோ பல்கலைக்கழகம் (தெற்காசிய மொழிப் பிரிவு) ஆகியவற்றால் உலகெங்குமுள்ள தமிழ் படைப்பாளிகளின் சீரிய படைப்பாற்றல், இலக்கியப்பணியை பாராட்டும் விதமாக வழங்கப்படுவது. சுமார் முப்பது வருடங்களாக சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமரிசனம் எனப் பல தளங்களில் இயங்கிவரும் தமிழின் சிறந்த சமகாலப் படைப்பாளிகளில் ஒருவரான ஜெயமோகனுக்கு வழங்கப்படவுள்ளது 2014-ஆம் ஆண்டிற்கான ‘இயல் விருது’. ‘பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை, காடு, ஏழாம் உலகம், ரப்பர் ஆகிய நாவல்களும், ‘அறம்’ என்கிற சிறுகதைத்தொகுப்பும் இலக்கிய விமரிசகர்களால் பாராட்டப்பெற்ற இவரது படைப்புகள். ஒரு பத்தாண்டுக்கால இலக்கியப் ப்ராஜெக்ட்டாக எடுத்துக்கொண்டு, மகாபாரதத்தை, நவீனத் தமிழ் உரைநடையில் அவருக்கே உரித்தான எழுத்துப்பாணியில் ’வெண்முரசு’ என்கிற பெயரில், பத்துப் பகுதிகளில் பெரும் செவ்வியல் நாவலாக தற்போது வடித்துக்கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.

விருது பெறவிருக்கும் ஆளுமைகளான திருவாளர்கள் பூமணி, ஜெயமோகன், ஞானக்கூத்தன் –இவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுக்கள்.

**

One thought on “அரிதாகக் கிடைக்கும் விருதுகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s