அவனும் இவனும் – 2

இவர்கள் இருவரும் வெளியே கடை கண்ணி என்று எங்காவது சுற்றிக்கொண்டுவரும்போது இப்படி ஏதாவது சிலசமயங்களில் நடக்கிறது.

ஒரே ஜனத்திரளான டெல்லியின் ஞாயிற்றுக்கிழமை கடைத்தெருவில் நடந்துகொண்டிருந்தார்கள். எதிரே கசங்கிய ஆடையும் கலைந்த தலையுமாய் சோர்வாக ஒருத்தன் நடந்து வந்துகொண்டிருந்தான். சரியாக இவனுக்கு நேரே வந்ததும் கைநீட்டினான். வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. இவனும் அதை வெகுவாக எதிர்பார்த்ததுபோல் கணநேரமும் தயங்காமல் யோசிக்காமல் ஒரு பத்து ரூபாய் நோட்டைக் கந்தலாடையின் கையில் வைத்தனுப்பினான்; நடையைத் தொடர்ந்தான்.

நடந்ததைக் கவனித்துக்கொண்டே அருகில் வந்துகொண்டிருந்த அவனுக்கு-இவனுடைய நண்பனுக்கு எரிச்சல். அவன் கண்முன் இது இன்றைக்கு இரண்டாவது தடவை.

‘இத்தனைபேர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தும் அவ்வளவுபேரையும் விட்டுவிட்டு அவன் எப்படிடா நேரா உன்னிடம் வந்து கைநீட்டினான்!’ என்றான்

‘ஒரு தற்செயல் நிகழ்வு!’ –இவன்.

‘மண்ணாங்கட்டி! உன்னைப் பார்த்ததும் இவ்வளவுபேரில் இளிச்சவாய இமயம் இவன்தான் எனக் கண்டுகொண்டான் அந்த பிச்சைக்காரன்..மெச்சணுண்டா அவன் மூளையை !’ வள்ளென்று விழுந்தான் அவன்.

‘மெச்சிவிட்டுப்போயேன்! இப்ப என்ன அதுக்கு?’-அலட்சியமாக இவன்.

‘புரியாமத்தான் கேக்கறேன். பத்தையோ இருபதையோ கை நீட்டுறவனுக்கெல்லாம் தூக்கிக் கொடுக்கும்போது உன் மனசுல அப்படி என்னதாண்டா நெனச்சுக்கறே! பெரிய தர்மகர்த்தா என்றா?’-கோபமாகக் கேட்கிறான் அவன்.

’அப்படியெல்லாம் இல்லை.. அவன் வெறுங்கையை நீட்டுகிறான் நான் கொஞ்சம் வைத்து நீட்டுகிறேன். இருவரிலும் பெரிய வித்தியாசமில்லை என்றுதான் நினைக்கிறேன்!”

இப்பொது இவனைக் கொஞ்சம் உற்றுப்பார்த்தான் அவன். ”டேய்! சந்தேகமில்லை.. ஒங்கம்மா சொன்னது சரிதாண்டா!”- மெல்லச் சொன்னான்.

’என் அம்மாவா? அவங்க என்ன சொன்னாங்க!’ –இவன் சற்றே ஆச்சரியமாகக் கேட்கிறான்.

’என் மகன் பொழக்கத் தெரியாதவன். ஒரு பித்துக்குளி! -அப்படீன்னாங்க ஒரு சமயம்!’ –இவனுடைய தோளில் கையைப் போட்டுக்கொண்டே சோகமாகச் சொல்கிறான் அவன்.

**