காலங்காலமாய்…

தான் இருக்கும் நிலையில், கிடைத்த வாழ்வில், அடைந்த சுகங்களில் சந்தோஷமடைவதில்லை மனிதமனம். திருப்தி என்பது ஏனோ மனித மனதை நெருங்கவே வெட்கப்படுகிறது; பெரும் தயக்கம் காட்டுகிறது.

மேன்மேலும் உயரவேண்டும், நாலுபேர் அண்ணாந்து பார்க்கும்படி எதையாவது சாதிக்க வேண்டும், பெரிதாக முயன்று ஒன்றை அடையவேண்டும் என்று பரபரக்கும் மனத்தின் துணைகொண்டுதான் இவ்வுலகில் வாழ நேர்ந்திருக்கிறது மனிதனுக்கு. பூலோக வாழ்க்கைப் பல கவர்ச்சிப்பாதைகளைக் காட்டி அவனை மயக்குகிறது. தொட்டுவிடக்கூடிய சிகரங்களைப் படம் போட்டுக் காட்டுகிறது. இவ்வாறாய் தொன்றுதொட்டு மனிதமனம் தனது குறிக்கோள், லட்சியம் என எதெதையோ நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறது. தன் தளராத உழைப்பிற்கு, உத்வேகத்திற்கு உறுதுணையாக உலகச் சாதனையாளர்களை, மேதைகளை ஏற்று, அவர்களின் சிக்கலான, கரடுமுரடான வாழ்க்கைப்பாதைகளை உற்றுநோக்குகிறது. நிகரற்ற முன்னுதாரணமாய் அவர்களை வரித்துக்கொண்டு இலக்கு நோக்கிய பயணத்தில் தீவிரம் காட்டுகிறது. தன் முயற்சிகளில் எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றுமிருக்கிறது.

இருந்தும், யாரையும் எதையும் நினைத்த நேரத்தில் புரட்டி எடுத்துவிடும், கவிழ்த்துப்போட்டுவிடும் காலமெனும் அசுரனைக்கண்டு அது நடுங்கவேண்டியிருக்கிறது. நம் முயற்சிக்கு, உழைப்பிற்குக் காலத்தின் கனிவான பார்வை கிட்டினால் வெற்றி, ஆனந்தம். சந்தேகமில்லை. இல்லையேல், நாம் சந்திப்பது தாங்கவொண்ணா தோல்வி, தடுமாற்றம், தொடரும் துயரம்.

“ காலம் நினைத்தால் கைகூடும் – அது
கனவாய்ப்போனால் மனம் வாடும்..”

– வாழ்க்கையின் சோகத்தில் கரைகிறார் கண்ணதாசன்.

எங்கும் எப்போதும் நிகழும் மாற்றமே இயற்கையின் ரகசியத் தோற்றம். அதன் ஏற்றம். நாம் வாழும் இந்தப்பூமி மட்டுமா, பிரபஞ்சமே நொடிக்கு நொடி எண்ணற்ற மாற்றங்களுக்குள்ளாகிக்கொண்டிருக்கிறது. மனித மூளைக்கு எட்டாத, சிந்தனைத்தளத்துக்கு அப்பாற்பட்ட பல்வேறு பிரபஞ்ச நிகழ்வுகள். நம் வாழ்வை நேரடியாக பாதிக்கும் சூரிய குடும்பத்துக் (Milkyway Galaxy) கோள்கள் மட்டுமன்றி, பேரண்டத்தின் எண்ணற்ற இதர கிரஹங்களும், நட்சத்திரங்களும் தங்களுக்குள்ளும், தங்களிடையேயும் நிகழ்த்தும் விவரிக்கமுடியா செயல்கள், மாறுதல்கள் மூலம் இந்த பூமியைப் பாடாய்ப்படுத்துகின்றன. இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு உயிரும் இம்மாற்றத்தின் விளைவிற்குட்பட்டு இயங்கவேண்டியிருக்கிறது. மனிதன்மட்டும் விதிவிலக்கா என்ன? அவனுடைய பரிணாம வளர்ச்சியும், சிந்தனைகளும், செயல்பாடுகளும் அவனை அறியாமலே மாறும் காலத்திற்கேற்ப நுண்ணிய மாற்றங்கள் பல கொள்கின்றன. அவை புதிய, புதிய எண்ண அலைகளை, ஆசைகளைத் தோற்றுவித்து, புதிய லட்சியங்களை, இலக்குகளை நோக்கி இடையறாது அவனைப் பயணிக்கவைக்கின்றன. காலங்காலமாய்த் தொடரும் மனிதனின் நெடும் பயணத்தின் ஊடே கிடைக்கவும் செய்கின்றன சில அபூர்வமான, சில முற்றிலும் எதிர்பாராத வெற்றிகள். பல அயரவைக்கும் தோல்விகள், துயரக்கதைகள்.

நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ – நெஞ்சில்
நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ…
கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ – கொண்ட
குறியும் தவறிப்போனவர்தான் எத்தனையோ…

தத்துவார்த்தமான கவிதை வரிகளில், இப்புவியில் மனித வாழ்வையே ரத்தினச்சுருக்கமாக எழுதிச்செல்கிறார் மாயவநாதன்.

**

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s