எனக்கொரு நண்பனுண்டு
எதற்கெடுத்தாலும் வம்புசெய்வதுண்டு
எடக்குமிடக்காகப் பேசுவதில் இணை
இவ்வுலகில் அவனுக்கு யார்தான் உண்டு
இப்படித்தான் ஒருநாள் பூங்காவில் உட்கார்ந்து
ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம
பேச்சுவாக்கில் சிந்தனையின் வீச்சுவாக்கில்
ஏழைகளின் எல்லையில்லா பிரச்சினைகள்
என்னாளும் தீர்வதில்லை என்றேன்
ஏழைகளே ஒரு பிரச்சினைதான் என்றே அவன்
எதிர்த்திசையிலிருந்து புறப்பட்டான்
சுதந்திரம் அடைந்து காலமோடியும் ஒரு
சுகமுண்டா ஜனங்களுக்கு நாட்டினிலே
சுருதி சேர்த்தேன் வார்த்தையிலே
சுதந்திர வாழ்விற்கே இந்த சோமாறிகள்
சுத்தமாக லாயக்கில்லை என வெட்டிவிட்டான்
எத்தகைய தலைவன் வந்தால்தானென்ன
எந்த மாற்றமும் நிகழக் காணோமே என்றேன்
தறிகெட்ட ஒரு தரங்கெட்ட மக்களுக்கு
தலைவன் ஒரு கேடா என முறைத்துப் பார்த்தான்
சரி எழுந்திரு வீட்டுக்காவது திரும்புவோம் நேரத்தில்
பரிவோடு பார்த்தே மெல்லக் கிளப்பினேன் அவனை
வீட்டுக்குப்போனாலும்
வீதியிலே திரிந்தாலும
பாதியிலே நின்ற கதைபோல
பரிதாப வாழ்க்கைதான் மிச்சம்
பொரிந்துதள்ளியே எழுந்து நடந்தான்
**
ஏழைகளின் நிலை உயரவில்லையே! என்ற ஆதங்கம்.
LikeLike
திருமதி கோமதி அரசு, திருவாளர்கள் தனிமரம், மோகன்ராஜ்- வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்
LikeLike
ரொம்பவும் எடக்குமடக்குப் பேர்வழியாக இருப்பார் போல இருக்கே! ஆனால் அவர் கேட்கும் கேள்விகளிலும் அர்த்தம் இருப்பது போலத்தான் தெரிகிறது!
LikeLike