கவலை ஓட்டும் வாழ்க்கை

சீறி ஓட ஆரம்பித்தது ஆட்டோ
வண்டியையும் ஆட்டோக்காரரையும்
வழக்கமான சந்தேகத்துடன் ஆராய்ந்தேன்
டெல்லியின் காலைநேரச் சடங்கான
சாலை நெரிசலைத் துளையிட்டு ஊடுருவி
குறிப்பிட்ட நேரத்தில்
கொண்டுபோய் சேர்த்துவிடுவாரா
என்கிற கவலையில் ஆழ்ந்தேன்
ஆவேசமாய்க் குறுக்கே விழுந்து திரும்பும்
அசுர வண்டிகளைக் கரித்துக்கொட்டியபடி
சிடுசிடுக்கும் ஓட்டுநரைச் சீர்செய்யவென
எந்த ஊர்க்காரர் நீங்கள்
எத்தனை வருடமாய் டெல்லியில் என
இதமாகப் பேச்சுக்கொடுத்தேன்
பிஹாரி சார் நான். இருபது வருஷமாக்
குப்பை கொட்டிக்கிட்டிருக்கேன் இந்த ஊர்ல
என்றார் பெருஞ்சலிப்புடன்
குடும்பம் எல்லாம் எப்படிப் போயிட்டிருக்குது
பொண்ணு பிள்ளைன்னு குட்டிகள் உண்டா
ஒரு பயல் ஒரு பொண்ணு சார் என்றார்
அய்யாவின் குரலில் மென்மை கசிந்தது
அடம்பிடிக்கும் சாலையில் ஆட்டோ சீரானது
பெண்குழந்தை சின்னவளா
பையன்தான் பெரியவனா
படிக்கிறானா தொடர்ந்தேன்
பொண்ணுதான் சின்னது நல்லாப்படிக்குது
பொறுப்பான பொண்ணு
அதப்பத்தி நான் கவலைப்படல்லே
பையன்தான் சார் பெரும் பிரச்சினை
படிக்கிறேன் படிக்கிறேன்னு
பய சுத்தித் திரியறான் ஊரெல்லாம்
எப்பப்பாத்தாலும் ஏதேதோ சொல்லி
எரநூறு முன்னூறு வாங்கிட்டுப்போறான்
மோட்டார்சைக்கிள் வேணுமாம்
முணுமுணுத்து அலையறான்
பயல் தேறமாட்டான் உருப்படமான் சார்
கவலை ஆட்டோக்காரரை ஓட்டிக்கொண்டிருந்தது
அப்படியெல்லாம் சொல்லாதீர்
சின்னப்பையன் தானே
வாழ்க்கையில் கொஞ்சம் அடிபட்டால்
தன்னால் சரியாகிவிடுவான் என்றேன்
வண்டி நின்று பணம் கொடுக்கையில்
உங்களின் கடைசி காலத்தில் மகன்
உறுதுணையா இருப்பான்
பகவான் இருக்கார் பயப்படாதீங்க
பிரியுமுன் தைரியம் சொல்லி
ஆறுதலாய்ப் பார்த்தேன்
ஆட்டோ டிரைவரின் இடத்தில்
அப்பா ஒருத்தர் நின்றிருந்தார்
ஆறாத சோகமாய்
கலங்கிய கண்களுடன்

**

2 thoughts on “கவலை ஓட்டும் வாழ்க்கை

  1. முடிவில் இப்படி// ஆறாத சோகமாய்
    கலங்கிய கண்களுடன்//

    நெஞ்சைத்தொட்டீர்கள்

    Like

Leave a comment