சி. கொண்டய ராஜு – மனங்கவர்ந்த ஓவியன் – 2 (தொடர்ச்சி)

ஸ்ரீலஸ்ரீ சங்கரதாச ஸ்வாமிகளின் நாடகக் கம்பெனி அப்போது மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. புகழ்பெற்ற காவிய நாடகங்களை ஊர் ஊராகச் சென்று நடத்தி வந்தது. நாடகத்திற்கான காட்சிகளை ஓவியமாக வரையும் வாய்ப்பு கொண்டய ராஜுவுக்குக் கிடைத்தது. நாடகக் கம்பெனியில் சேர்ந்த கொண்டய ராஜு, கேரளா, சிலோன் போன்ற இடங்களுக்கும் நாடகக் கம்பெனியுடன் சென்றார். நாடகம் நடந்தேறிய இடங்களில் எல்லாம், நாடகக் காட்சிகளை வெளிப்படுத்தும் அவரது அழகிய திரைச்சீலை ஓவியங்களை மக்கள் மிகவும் ரசித்துப் பாராட்டினர்.

அப்போது கேரளா மாவேலிக்கரையில் ஞானசௌந்தரி நாடகம் நடத்தப்பட்டது. காட்சிகளை தத்ரூபமாக திரைச்சீலையில் வரைந்திருந்தார் கொண்டய ராஜு. அதனைப் பார்வையிட்ட இந்தியாவின் தலைசிறந்த ஓவியரான ராஜா ரவிவர்மாவின் பேரன், கொண்டய ராஜுவை மிகவும் பாராட்டி, அவருக்கு 3 பவுன் தங்கச்சங்கிலி ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட ஸ்ரீகிருஷ்ணலீலா நாடகத்திற்கான காவியக் காட்சிகளை சிறப்பாக வரைந்த கொண்டய ராஜு, திவான் ஸ்ரீ சி.பி. ராமசாமி அய்யரால் மேடைக்கு அழைக்கப்பட்டு சபையின் முன்னே கௌரவிக்கப்பட்டார்.

கொண்டய ராஜுவின் புகழ் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. ஒரு சமயம் சிருங்கேரி சங்கராச்சாரியாரையும் அது எட்டியது. இவரது ஓவியத்திறமை குறித்துக் கேள்விப்பட்ட சங்கராச்சாரியார், கொண்டய ராஜுவை அழைத்து, ஆதிசங்கரர், ஸ்ரீசாரதாதேவியின் படங்களை சங்கரமடத்திற்காக வரைந்து தரும்படிப் பணித்தார்.

கொண்டய ராஜுவுக்கு, டி.சுப்பையா, ராமலிங்கம் போன்று 10-12 சிஷ்யர்கள் இருந்தனர். அவர்களுக்குப் பயிற்சி தருவதற்காக கோவில்பட்டியில் 1942-ல் ஸ்ரீதேவி ஆர்ட் ஸ்டூடியோவை நிறுவினார் கொண்டய ராஜு.

1956-ல் சிவகாசியில் ப்ரிண்டிங் பிரஸ்கள் தொடங்கப்பட்டன. காலண்டர் உற்பத்தி ஆரம்பமாகியது. கொண்டய ராஜு போன்ற கைதேர்ந்த ஓவியர்களால் காலண்டர் ஆர்ட் மக்களிடையே பிரபலமாக ஆரம்பித்தது. அப்போது பிரபலமாய் இருந்த அம்பாள் காஃபி கம்பெனியின் மீனாக்ஷி கல்யாணம் படக்காலண்டர்தான் கொண்டய ராஜுவுக்குக் கிடைத்த முதல் காலண்டர்பட ஆர்டர். அதற்குப்பின் காலண்டர் ஆர்ட்டில் அவர் ராஜ்யம்தான்! காலண்டர் ஆர்ட்டிற்குப் பெருமையையும், அந்தஸ்தையும் ஒருங்கே கொண்டுவந்து சேர்த்தன அவரது அபூர்வப் படைப்புகள்.

1964-ல் கோவில்பட்டி வந்திருந்த நடிகர் சிவாஜி கணேசன் ஒரு விழாவில் கொண்டய ராஜுவுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். ’கலைமாசெல்வன்’, ’ஓவியமணி’ ஆகிய பட்டங்களைத் தன் வாழ்நாளில் பெற்றார் இந்த ஓவியர். கனடாவின் பல்கலைக்கழகமொன்றில், ’காலண்டர் ஆர்ட்டில் இந்திய தெய்வங்கள்’ என்கிற வகையில் இவரது ஓவியங்கள் ஆவணமாகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

கொண்டய ராஜு மிகவும் மென்மையான மனிதர். தன்னிடம் யார் கற்க வந்தாலும் அவருக்கு உதவி வந்தார். அவருக்கு நாய்கள் என்றால் பிரியம். ஒருசமயத்தில் பத்துப்பன்னிரெண்டு வளர்ப்பு நாய்கள் அவரிடம் இருந்தனவாம். அந்தக்காலகட்டத்தில் புகழ்பெற்றிருந்த சொக்கலால் ராம்சேட் பீடியை விரும்பிப் புகைப்பவராக இருந்தார் இவர்.கோவில்பட்டியை வாசஸ்தலமாகக்கொண்டு கடைசிவரை பிரும்மச்சாரியாக, தன் சிஷ்யர்களுடன் வாழ்ந்த கொண்டய ராஜு, தனது 78-ஆவது வயதில் 1976-ல் காலமானார்.

இந்த வருடம் காலண்டர்படம் வாங்கினால் அல்லது நல்ல சாமிபடக் காலண்டர் உங்கள் கையில் சிக்கினால் அந்தப்படம் சி.கொண்டய ராஜு வரைந்ததா என்று கவனியுங்கள். யாருக்குத்தெரியும் – ஒருவேளை ரீப்ரிண்ட் ஆகி கொண்டய ராஜுவின் காலண்டர் ஓவியங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கலாம். அல்லது சாமிபடக் கடைகளில் கொண்டய ராஜுவின் ஓவியங்கள் ஃப்ரேம் போட்ட படங்களாகவும் கிடைக்கக்கூடும். உங்கள் வீட்டுப் பூஜை அறையையோ, ஹாலையோ அலங்கரிக்கலாம். காலங்காலமாகக் கலைப்பொக்கிஷமாக அவை உங்கள் வீட்டில் உங்களோடு தங்கிவிடவும் கூடும்.

**

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in கட்டுரை. Bookmark the permalink.

One Response to சி. கொண்டய ராஜு – மனங்கவர்ந்த ஓவியன் – 2 (தொடர்ச்சி)

  1. கொண்டையா ராஜு அவர்கள் ஓவியங்கள் , தெய்வ பட காலண்டர்கள் சிவகாசியிலிருந்தபோது நிறைய சேகரித்தோம், இப்போது ஒன்று கூட இல்லை என்பது மனதை வருந்த செய்கிறது.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s