பக்கத்து வீட்டுக்காரர் நல்ல
பதவிசான மனிதர்
வீட்டைவிட்டு வெளியே வரும்போது
உடலைவிட்டு உயிர் பிரிவதுபோல
உணர்ச்சிகரமாய் வருவார்
கதவுக்கு வலிக்குமோ இல்லைப்
பூட்டுக்குத்தான் நோகுமோ என்பதுபோல
மிருதுவாகச் சாத்திப் பூட்டுவார்
இழுத்துப்பார்த்தலையும்
இதமாகவே செய்வார்
காதில்விழா சத்தத்துடன்
கடந்து செல்வார் படிகளில்
தற்செயலாக எதிரில் பார்த்துவிட்டால்
முகபாவம் ஒன்றைக் காட்டிவைப்பார்
சிரித்தாரா சிணுங்கினாரா
தெரிந்துகொள்ள
சிலகாலம் பிடிக்கக்கூடும்
அதற்காகவாவது
சில வருடம் வாழவேண்டியிருக்கும்
பக்கத்து வீட்டுக்காரர் ஒரு
பதவிசான மனிதர்
**