அட்சதை போடுவதா
ஆசீர்வாதம் செய்வதா
நானா
நிச்சயமாக இல்லை
இத்தனை நாள் வாழ்ந்திருந்தும்
அப்படியெல்லாம் ஒரு
‘பெரியவனாக’ ஆகிவிடவில்லை
கையை உயர்த்தி ஆசீர்வதிக்க
நான் ஒன்றும் கண்டடைந்த ஞானியோ
கற்றறிந்த ஆச்சார்யனோ யோகியோ அல்ல
முடி நரைத்துப் போனவனெல்லாம்
முனிவனுமல்ல
கையை உயர்த்துவதற்குரிய
உயரம் தரப்படவில்லை
தலையைச் சுற்றி எந்த ஒரு
ஒளிவட்டத்தையும் யாரும்
பார்த்ததாகச் சொன்னதில்லை
வாய்க்காத ஒன்றை
வசப்படுத்திவிட்டதாக
நினைத்து மயங்க
நல்லகாலம்
நான் அவ்வளவு மந்தமும் இல்லை
**
எத்தனை உயரத்தில் போனாலும் கால்கள் தரையில் இருப்பதுதான் நல்லது, இல்லையா?
எல்லோருக்கும் பொருந்தும் ஒரு கவிதை.
பாராட்டுக்கள்!
LikeLike
வாழ்த்த வயது தேவை இல்லை , பெரியவன், சின்னவன் பேதம் வேண்டாம், நல்ல மனம் போதும்.
கர்வம் கொள்ளாத தரையில் கால் பதித்து இருப்பவர் வாழ்த்தினால் அனைவருக்கும் நன்மைதானே!
வாழ்த்துக்கள் நல்ல கவிதைக்கு.
LikeLike
அன்புமிகு திருமதி ரஞ்சனி நாராயணன், திருமதி கோமதி அரசு இருவருக்கும்-
வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள் பல.
’என்னிடமும் இருக்கிறது நல்ல மனம்!’ என்று ஒவ்வொருவரும் கையை உயர்த்தினாலும் (ஆசீர்வதிக்க), பிரச்னையாகப்போய்விடுமே ! நம்மிடம் ஏதோ ஒன்றிரண்டு நற்குணங்கள் அவ்வப்போது தென்பட்டாலும், எத்தனையோ குறைகளைக், குப்பைகளைக்கொண்டுதானே நம் அகம் இன்னும் இருக்கிறது? அழுக்குகளை அகற்றுமுன், அட்சதை எதற்கு கையில் என்கிற சிந்தனைக்களத்தில் உருவானது இந்தக் கவிதை.
LikeLike