உயிர் மிளிர உயர்ந்து நிற்கும் உங்களை அழித்துவிட்டு
உயிரில்லா உணர்வில்லாக் கட்டிடங்களை எழுப்பி
உயரத்திலிருந்து பார்த்துச் சிலிர்க்கவேண்டும் இவர்களுக்கு!
தங்களின் சந்தோஷம் சுகபோகத்திற்காக எதனையும்
ஈவு இரக்கமின்றி அழித்துப் பிழைக்கும் அற்பங்களோடு
சேர்ந்தே இப்புவியில் வாழ்ந்திருக்குமாறு
காலங்காலமாய் இவர்களின் கொடுங்கைகளினாலேயே
சிதைக்கப்பட்டுச் சீரழியுமாறு சபிக்கப்பட்டிருக்கிறீர்கள்
இருந்தும் வாய் திறக்க வாய்ப்பில்லை
ஏனெனில் வாயே தரப்படவில்லையே உங்களுக்கு
தரப்பட்டிருந்தாலும் திறந்திருப்பீர்களா
எதிர்த்து ஏதேனும் சொல்லியிருப்பீர்களா
உங்கள் குணம் தெரியாதா
குட்டக் குட்டக் குனிவதும்
வெட்ட வெட்ட முளைப்பதுமாய்த்தானே
வாழ்ந்து வருகிறீர்கள் இம்மண்ணில் எப்போதும்?
என்றும் மாறா உங்களின் இணையற்ற சாத்வீகம்தான்
எத்திப்பிழைக்கும் இந்த ஜீவன்களிடம்
எதையாவது மாற்றியிருக்கிறதா இதுவரை?
**
மிக அருமையான பதிவு.பழைய வானம், பழைய பூமி இப்போது இல்லை.
LikeLike