வானம் வருகையில்

கருமேகமே நீ
கலைந்துவிடாதே
உருமாறி
உடன் விலகிவிடாதே
படர்ந்து நீ இருள் காட்ட
பரவசம் நிகழ்கிறது பூமியில்
குளிர்ந்த காற்று
குதூகலமாய்த் தொடர்கிறது
மழை வரும்போல் ஒரு
மயக்கம் தருகிறது
கருமேகமே நீ
கலைந்துவிடாதே
உருமாறி
உடன் விலகிவிடாதே

**

மேலெழும் நீர்க்குமிழிகள்

ஒரு சிறு எரிதலில்
எல்லாம் ஒடுங்கிவிடும்
தடயமின்றி அழிந்துவிடும்
அழகு முகம்
அலங்கார உடம்பு
பெயர் பதவி
போதையேற்றிய புகழ்
குணங்கள்
குற்றங்கள்
அரும்பிய ஆசைகள்
அழியாத ஏக்கங்கள்
வெற்றி தோல்வி வியாக்கியானங்கள்
அனைத்தும் அக்னிக்கு ஸ்வாஹா
என்ன ஒரு வாழ்க்கை ஆஹா..!

**

எதற்கு ?

எந்த அர்த்தமும் புரிபடாத வாழ்வில்
எதுவும் நிலையானதல்ல
என்பதொன்றே
என்றும் நிலையானது
என்றிருக்கையில்
எண்ணற்ற இலக்குகள் எதற்கு
எகத்தாளம்தான் எதற்கு
ஏக்கங்கள் எதற்கு
எப்போதும் இந்தப் பெருமூச்சுதான் எதற்கு

**

தன்னியற்கை

நிற்க ஆரம்பித்தபின்
தன் முதல் அடியை
அனாயாசமாக
எடுத்துவைக்கிறது குழந்தை
அப்போது தொடங்குகிறது
வாழ்வின் ஆரவார நடை
இந்தக் காலினால் தான்
நடக்கப்போகிறோம்
எனப் புரிந்து கொண்டு
தன் காலை அது
பார்க்க ஆரம்பிக்குமானால்
அது நடக்காது
உட்கார்ந்துவிடும் !
**