அப்பாவி இந்தியனே!
ஆயிரம் பிரச்சினைகளுக்கு நடுவில்
அயர்ந்து போய் நீ கிடப்பது தெரியும்
இருந்தும் மறந்து விடாமல்
இடப்பட்ட கடமையைச் செய்
பத்தாம்பசலி அரசியல்வாதிகளின்
பகட்டு வார்த்தைகளில் கிளுகிளுத்து
பலனை எதிர்பார்த்துப்
பலமுறை ஏமாந்திருக்கிறாய்
படுத்த பாயைச் சுருட்டுவதுபோல்
பாரில் உன்னை அடையாளம் காட்டும்
பாசமிகு நாட்டையே
சுருட்டி எடுத்து ஓட முயற்சிக்கும்
மதம் பிடித்த மனிதரை இனம் கண்டதால்
பதறுகிறாய் படபடக்கிறாய்
பல்லைக் கடிக்கிறாய்
புரிகிறது உன் மனதின் உயர்வான நியாயங்கள்
நியாயமான பயங்களையும் தாண்டி
நிகழவிருப்பவை காத்திருக்கின்றன
நமக்கெல்லாம் ஒரு விதி இருப்பதைப் போலவே
நாட்டிற்கும் நிச்சயம் உண்டல்லவா
எதையும் பெரிதாக எதிர்பார்க்காது
ஐந்தாண்டுக் கடமையை
அழகாக முடித்துவிடு
உன்னிடமும் குறையிருந்ததாக
ஊர் உலகம் சொல்ல வேண்டாம்
செய்ய வேண்டியதை சிறப்பாகச் செய்
விளைவுகளை வருங்காலம்
விரைவாகக் கணக்கில் வைக்கும்
**