இண்டியன் காஃபி ஹவுசில் ஒரு மாலைப்பொழுது

நவீனமயமாக்கலில் நாடே அதிர்கையில், தலைநகர் மட்டும் தப்பித்துவிடுமா என்ன! டெல்லி காலஓட்டத்தில், குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளில் தன் வண்ணங்களை, வடிவங்களை, ரசனைகளை வெகுவாக மாற்றிக் கொண்டுவிட்டது. இருந்தும் சில சங்கதிகள் அதிகமாக மாறுதல் காணாது கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கின்றன. தலைநகரின் மையப்புள்ளி போன்ற, புகழ்பெற்ற கனாட் ப்ளேசில், ரிவோலி சினிமாவைக் கடந்து கொஞ்சம் நடந்தால் வரும் மோகன்சிங் ப்ளேஸ். பழைய, பெரிய இரண்டு மாடிக்கட்டிடம். அதற்குள் கடைகள், ரெஸ்டாரண்ட்டுகள். பேஸ்மெண்ட் தளத்திலும் கடைகள். இன்னும் கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறது. அங்கு டெல்லி இளைஞர்கள், யுவதிகளுக்கேற்ப, அழகாக ஜீன்ஸ், சட்டைகள் தைத்துத் தந்த தையல்கடைகள் புகழ் மங்காது இன்னும் இருக்கின்றன. பிஸினெஸ் படு ஜோராக நடக்கிறது.

மோகன்சிங் ப்ளேசின் இரண்டாவது ஃப்ளோரில் இயங்கிவந்த இண்டியன் காஃபி ஹவுஸ் இப்பவும் கிட்டத்தட்ட அதே போல் இருக்கிறது என்பது ஆச்சரியம். எத்தனையோ மாற்றங்களை டெல்லியில் நிகழ்த்திக் காட்டிய காலம் இதைப் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. காலம் கிடக்கட்டும்; காஃபி ஹவுஸ்காரர்களும் ஒன்றும் மாற்ற விரும்பவில்லை போலும். இந்தக் காஃபி ஹவுஸ் உள்ளே உட்கார ஒரு பெரிய ஹாலும், குடும்ப சகிதம் வருவோருக்கென இன்னொரு அறையும் கொண்டது. இதில் ஒரு விசேஷம் ஒரு செம அட்ராக்ஷன் உண்டு. ரூமுக்கு வெளியே வெட்ட வெளி. அதாவது மொட்டை மாடி. அங்கேயும் போடப்பட்டிருக்கும் மேஜை-நாற்காலிகள்.

குளிர்காலத்தில், அந்த மொட்டைமாடி செக்‌ஷனில் அமர்ந்து இட்லி, தோசை விழுங்க, காஃபி அருந்த என ஆசையோடு வரும் ஒரு கூட்டம். மாலை நேரம் என்பது பலவிஷயங்களுக்கும் பீக் ஹவர்! மேலே ஆகாயம். கீழே சூடு பறக்கும் ஃபில்டர் காஃபி, இத்தியாதிகள். சுற்றிலும் சலசலக்கும், மாறா இளம் மனதுகொண்ட மனிதர்கள். இந்த காஃபி ஹவுஸையே சுற்றிச் சுற்றி எப்போதும் வர என ஒரு விசுவாசக் கூட்டம் முன்பும் இருந்தது; இந்தியத் தலை நகரின் அறிவுஅஜீவிகள், சூடோ-இண்டெலெக்ச்சுவல்கள், ஷேர் மார்க்கெட் நிபுணர்கள், எதைஎதையோப் பேசிச் சிரிக்கும் இளவட்டங்கள், இந்திய அரசியலை உண்டு இல்லை என்று பேசிப்பேசியே ஒரு வழி செய்துவிடும் பெரிசுகள், வெட்டிப்பேச்சு வெங்காயங்கள் என்று ஒரு துறுதுறுப்பான கும்பல். தொடர்ச்சியான ஃபில்டர் காஃபி, ஃபில்டர் சிகரெட் என நேரத்தைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத, முனைப்பான கூட்டம் அது. யுனிஃபார்முடன் வெள்ளைத் தொப்பி அணிந்த சர்வர்கள் ஏதோ ஒப்புக்கு கேட்பதுபோல் ஒவ்வொரு டேபிளிலும் ஆர்டர் எடுப்பார்கள். நிதானமாக நேரம் எடுத்துக்கொண்டு, ஒருவழியாகத் தட்டில் ஏதோ ஏந்தி வந்து டேபிளில் வைத்துவிட்டுப் போவார்கள். ஆர்டர் கொடுத்துவிட்டுத் தங்கள் விவாதங்களில், விவகாரங்களில் ஆழ்ந்திருப்போருக்கு, தான் என்ன ஆர்டர் கொடுத்தோம் என்பதே மறந்துவிட்டிருக்கும். பேச்சு சுவாரஸ்யத்தில் அவர்களும் கொடுத்ததைக் கொறித்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம் சட்டினி, சாம்பார், ப்ளாக் காஃபி, ஸ்பெஷல் காஃபி என்று ஏதாவது மேற்கொண்டு சொல்லி சர்வர்களை விரட்டிவிடுவார்கள். காஃபி ஆறினாலும், தங்கள் விவாதங்களின் சூடு தணியாமல் பார்த்துக்கொள்வார்கள் இந்த கனவான்கள். இதற்குத்தானே அங்கு வருவதே !

வெகுநாட்கள் ஆகிவிட்டது இதற்கு ஒரு விசிட் அடித்து. இந்த காஃபி ஹவுஸ் இப்போது எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்று பார்க்கவேண்டாமா! நானும் பிப்ரவரியின் மாலை ஒன்றில் காஃபி ஹவுஸின் எக்ஸ்க்ளுசிவ் மொட்டைமாடி ஏரியாவுக்குப் போனேன்! கஷ்டப்பட்டபின் ஒரு கார்னர் சீட் கிடைத்தது. காஃபிக்கு ஆர்டர் தந்தேன். காஃபி, சிகரெட், வடை, கட்லெட், தோசை, சாம்பார், அருகிருப்போரின் அதிரடி பெர்ஃப்யூம் என ஒரு மாயக் கதம்பத்தில் வாசனை ஆளைத்தூக்க, நம்ப மக்களை மெதுவாகக் கவனிக்க ஆரம்பித்தேன்.

பக்கத்தில், வளர்ந்திருக்கும் அரச மரத்தின் கிளைகள் உயர்ந்து, மாடியின் கட்டைச்சுவர்கள் மீதேறி கொஞ்சம் உள்ளும் தலைகாட்டின. ஒரு கெஸ்ட் ஆக்டர்போல் எப்போதாவதுதான் தலைகாட்டும் டெல்லியின் குளிர்கால சூரியன். அவ்வப்போது அது தெரிந்ததில், மஞ்சள் ஒளி பிரகாசமாகி மாலையின் மோகனத்தைக் கூட்டியது. எத்தனை விதமான மனிதர்கள். அன்று மத்திம வயதினர் குறைவாகவே காணப்பட்டனர். இந்த காஃபி ஹவுஸ் எப்படி இளசுகளின், டீன்ஏஜர்களின் விருப்ப லிஸ்டில் வந்து சேர்ந்தது? சுடச்சுட கிடைக்கும் இட்லி, வடை, மசால் தோசை காரணமா? அவைதான் வேறு இடங்களிலும் கிடைக்கிறதே. டெல்லி இளைஞர்களுக்கு ஃபில்டர் காஃபி மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டதா! இல்லை. ஏதோ இடிக்கிறது. காஃபி போர்டின் கோவாப்பரேட்டிவ் சொசைட்டியினால் நடத்தப்படும் இந்தக் காஃபி ஹவுசின் நியாய விலைதான் முக்கியக் காரணமாக இருக்கும். அத்தோடு இந்தக் கவர்ச்சியான சர்ப்ரைஸ்! மொட்டை மாடி போனஸ்! ஆஹா! டெல்லிபோன்ற நகரின் குளிர்காலத்தில் சூரிய ஒளி நம் மீது விழுவது ஒரு அபூர்வ சுகானுபவம். கூடவே, மனதுக்குப் பிடித்தமானவள்/ன் அருகிருக்கையில் ! நிதர்சனத்தை உள்வாங்கி, நிதானமாக, சமயம் எடுத்துக்கொண்டு காஃபி, டிஃபன் கொண்டுவரும் மந்தமான சர்வர்கள். புரிகிறது தம்பிகளா. என்ஜாயுங்கப்பா, என்ஜாயுங்க.. இது ஒங்க காலந்தான் !

நேரம் ஆக, ஆக, குளிர் ஆனந்த நர்த்தனமாடியது. மாலைக்காற்றில் விஷமம் இருந்தது. காஃபிக்காகக் காத்திருந்தேன். காத்திருந்து கிடைக்கிற விஷயத்தின் ருசியே அலாதி அல்லவா! இப்போது காஃபி ஹவுஸின் உள்ளிருந்து அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கி வருவது போல் வடை, தோசை, காஃபிக்களைக் ட்ரேயிலேந்தி சர்வர் அடிமேலடி எடுத்து வருவது தெரிகிறது. வெள்ளை யுனிஃபார்ம். வெள்ளைத் தொப்பி. அர்விந்த் கேஜ்ரிவாலாக இல்லாதிருந்தால் சரி !

அப்போதுதான் அது நடந்தது. கையிலேந்தி வந்தவற்றை அருகிலிருந்த காலி டேபிளின் மேல் சரேலென வைத்துவிட்டு, மாடிக்கட்டைச் சுவரின் மேலிருந்த நீண்ட கம்பைக் கையிலெடுத்தார் சர்வர். கம்பை வேகமாக, படுலாவகமாக சுழற்றிக்கொண்டே அவர் முன்னேற, எனக்கு பகீரென்றது. காஃபி குடிக்க வந்திருப்பவர்களில் சர்வரை வம்புக்கிழுத்தது யார்? அப்படியே லேசாகச் சண்டை போட்டிருந்தாலும் அதுக்காக இப்படியா இந்த ஆள் கம்பைத் தூக்குவது? கடவுளே! உலகத்தில் இப்படியெல்லாமா வன்முறை பெருகவேண்டும்? காஃபி போர்டின் ரெக்ரூட்மெண்ட் ரூல்ஸ் வெகுவாக மாறிவிட்டதா? சர்வர் வேலைக்கு வருபவர்களுக்கு சிலம்புச் சண்டை தெரிந்திருப்பது அத்யாவசியம் என்று எப்போது ஆனது? என் கற்பனை வேகமெடுக்கையில், சர்வரின் சுழலும் கம்பு முன் ஏதோ பாய்ந்து சிதறுவதைக்கண்டேன். குரங்கு ! இளவட்டங்களின் டேபிள்கள் சட்டென்று பரபரத்தன; கிறீச்சிட்டு இடம் மாறின. சாப்பாட்டு வாசனையில் கீழேயிறங்கி அத்துமீறியிருந்த குரங்கு, கம்பைக் கண்டவுடன் வேகமாக காம்பவுண்டு சுவரேறியது. அருகில் தழைத்திருந்த கிளையில் தாவி உட்கார்ந்தது, ஆபத்திலிருந்து மீண்டதில் ஆனந்தமாகி, சர்வரை விஷமமாகப் பார்த்தது. முகம் ப்ரகாசமாகி இளித்தது! என் மனம் லேசானது. அப்பாடா! காஃபி குடிக்கவரும் கஸ்டமர் யார் மீதும் வெள்ளைத்தொப்பி சர்வருக்கு துவேஷமில்லை. இனி நிம்மதியாக காஃபி அருந்தலாம். மொட்டை மாடி காஃபி ஹவுஸ், சின்னஞ்சிறுசுகளை மட்டுமா கவர்ந்திருக்கிறது, குரங்குகளையும் அல்லவா மரத்திலிருந்து கீழிறக்க ஆரம்பித்திருக்கிறது. சர்வர்களை சகலகலா வல்லவர்களாக மாற்றியிருக்கிறது. நல்ல முன்னேற்றம் தெரிகிறது டெல்லி மாநகரில். நல்ல ஆட்சிதான் நடக்கிறது நாட்டில் – நமது ஜனங்களோடு குரங்குகளும் சந்தோஷமாக இருப்பது நன்றாகவே தெரிகிறது !

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s