டெல்லி ! (பயணக் குறிப்பு அல்ல)

சில வருஷ இடைவெளிக்குப் பின் வருகிறேன் டெல்லிக்கு- குறிப்பாக தலைநகரின் அப்மார்க்கெட் லொகாலிட்டியும், நகர மையமுமான, பிரிட்டிஷ் காலத்திலிருந்தே புகழ்வாய்ந்த கனாட்ப்ளேசிற்கு. முன்பெல்லாம் மாலை நேரங்களில், ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு ரவுண்டு வருவது வழக்கம். அப்போது அது புத்துணர்வு தரும் ஒரு அனுபவமாக இருக்கும். தலைநகரில், மேம்பாலம், சப்வே, அது, இது என்று பல மாற்றங்கள் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ளன. நல்ல காலம், கனாட்ப்ளேசின் அடிப்படை வடிவத்தில் கை வைக்கவில்லை நம் ஆட்சியாளர்களும் சிட்டி பிளானர்களும். அதன் இன்னர், அவுட்டர் சர்க்கிள்களின் பிரம்மாண்ட, பிரிட்டிஷ் காலத் தூண்கள், புதிதாக வெள்ளைப் பெயிண்ட் அடிக்கப்பட்டு பளபளக்கின்றன. நவீன ரெஸ்டாரண்ட்டுகள், அயல்நாட்டு பிராண்டுகளின் ஷோரூம்கள், உலகமயமான வியாபரச் சின்னங்களாக மின்னுகின்றன. இருந்தும், அங்கங்கே சாலையில் குழிதோண்டும் திருப்பணி இன்னும் நின்றபாடில்லை. டெல்லி முனிசிபாலிட்டியை, அரசுத்துறைகளை எப்போதும் பீடித்திருக்கும் தீராத வியாதி இந்தக் குழிதோண்டல். நடைபாதைகள், முக்கியமான சாலை சந்திப்புகளை அடிக்கடி குடைந்து கொண்டிருப்பார்கள்- தங்கம் பூமிக்கடியில் இருப்பதாக யாராவது ஒரு பாபா இவர்கள் கனவில் வந்து அடிக்கடி சொல்லிவிடுவதால். அடுத்தவனுக்கு ஆழக் குழிதோண்டும் அற்புதமான டெல்லி அரசியலில் இருந்து உத்வேகம் பெற்று, தோண்டு தோண்டு என்று காலங்காலமாக பிரதான சாலைகளைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள் டெல்லி அரசு அமைப்பினர். இவன்கள எவனாலயும் மாத்தமுடியாது! தோண்டுங்கப்பா..தோண்டுங்க. உங்களோட கைவண்ணத்தாலதான் தலைநகரம் அழகா ஜொலிக்குதுன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க !

முன்பெல்லாம் – அதாவது ஒரு 25-30 வருடங்கள் முன்பு- கனாட்ப்ளேஸ் என்றால், ஒரு அமைதியான, எழிலான இடத்தின் தோற்றம் மனக்கண் முன் விரியும். அதற்கென்றே ஒரு நளினமான, நாசூக்கான செலக்ட் க்ரௌட் இருக்கும். எதிர்வரும் ஆள் நம்மீது மோத நேராது நடந்து செல்லலாம். கார்களும், இருசக்கர வாகனங்களும் மிகக்குறைவாகவே தென்படும். அங்குள்ள பாலிகா பஜாருக்கு (அண்டர்கிரௌண்ட் ஷாப்பிங் செண்டர்) மேல் அமைந்திருக்கும் செண்ட்ரல் பார்க்கில் கொஞ்சம் தனியாக உட்கார்ந்து பொழுதுபோக்க முடியும். அக்கம்பக்கத்தை, நேரம் போவது தெரியாமல் நிதானமாக நோட்டம் விடலாம். இப்போது பார்க் பெஞ்சில் போய் உட்கார்ந்தால் போதும் – வந்துவிடுவார்கள் செருப்புக்குப் பாலிஷ் போடுபவர்கள், கடலை விற்பவர்கள் என்று வரிசையாக. உங்கள் நிம்மதியை, தனிமையைக் கிழித்துத் தொங்கவிட்டுத்தான் மறுவேலை. ஏதோ அதற்காகவே ஜன்மம் எடுத்தது மாதிரி அலைகிறார்கள். கனாட்ப்ளேசின் ப்ளாசா, சூப்பர் பஜார், மதராஸ் ஹோட்டல் பஸ் ஸ்டாப்பெல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன.

மதராஸ் ஹோட்டல்! நினைவில் நன்றாகவே நடனமாடுகிறது! எண்பதுகளில், சூடாக இட்லி, வடை, தோசை இத்தியாதிகளை விழுங்குவதற்காகவே மாலை நேரத்தில் வட இந்தியர்கள் கூட்டம் அந்த ஹோட்டலின்மீது படையெடுத்துத் திக்குமுக்காட வைக்கும். அவர்கள் அங்கு வருவதே இட்லி, தோசை தின்னும் சாக்கில், அப்போதெல்லாம் ஃப்ரீயாக, அந்த ஹோட்டலில் கிடைத்த எக்ஸ்ட்ரா சாம்பாரை ஒரு வெட்டு வெட்டத்தான். சாம்பாரை இட்லி, வடை என்று வேறொரு சங்கதியோடு சேர்த்துச் சாப்பிட்டுத்தான் நமக்குப் பழக்கம். அதனைத் தனியாக வாங்கி, நொட்டைவிட்டுக் குடிக்கும் ஜீவராசிகளை இங்கே, டெல்லியில்தான் முதன் முதலில் பார்த்தேன்! மதராஸ் ஹோட்டலின் சாம்பாரும், ஃபில்டர் காஃபியும் டெல்லிவாழ் ஜனங்களிடம் பிரசித்தம். அந்த நாட்களில், மதராஸ் ஹோட்டலுக்கு எதிரே சிறிய, மதராசிப் பொட்டிக்கடை ஒன்றும் இருந்தது. தலைநகரின் அந்தப் பகுதியில் வெற்றிலை, வாசனைப்பாக்கு, சீவல் கிடைக்குமிடம். கூடவே டெல்லித் தமிழர்களுக்குத் தேவையான ஃபில்டர் காஃபித்தூளும், அம்பிகா அப்பளமும் கிடைக்கும். அது அல்ல நான் குறிப்பிட வந்தது. அந்தக் கடையில்தான் கணையாழி என்கிற மாத இலக்கியப் பத்திரிக்கை வாங்குவதற்குக் கிடைக்கும். விலை ரூ.10. குமுதம், விகடன் எல்லாம் ஒரு ரூபாய், ஒண்ணேகால் ரூபாய் என்று விற்ற காலம் அது. அப்போது அந்த இலக்கியப்பத்திரிக்கையைத் தேடித் தேடி வாங்கிப் படித்ததற்குக் காரணம் இருந்தது. அதில்தான் சுஜாதா, ஜனரஞ்சகப் பத்திரிக்கையில் எழுத முடியாத வித்தியாசமான, கனமான விஷயங்களை கடைசிப்பக்கத்தில் எழுதிவந்தார். கூடவே, கணையாழி நல்ல அருமையான சிறுகதைகள், கவிதைகளுக்குப் பேர்போனது. நா.விச்வநாதனின் கவிதைகளை, முதன்முதலில் கணையாழியில்தான் நான் கண்டெடுத்தேன். இப்போது அந்த மதராஸ் ஹோட்டலும் இல்லை. தமிழ்க்கடையையும் காணவில்லை. கணையாழியும் நின்றுவிட்டது. கனாட்ப்ளேசில் தமிழ் இலக்கியப் பத்திரிக்கைகள்/ சிற்றிதழ்கள் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை.

எப்படித்தான் மாறிவிட்டிருக்கிறது தலைநகரின் இந்தப் புகழ்பெற்ற ஜனரஞ்சகமான இடம்? கனாட்ப்ளேஸ் இப்போது, கிட்டத்தட்ட ஏனைய மத்தியதர மார்க்கெட்/ஷாப்பிங் இடம்போலாகி விட்டது. புதிது புதிதாக முளைத்திருக்கின்றன நடைபாதைக் கடைகள். மூலைக்கு மூலை, எப்போதும் எதையாவது சத்தமாக விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பலாப்பழத்து ஈயாக வாங்குகிறவர்களும் சாமான்களின் மீது கவிகிறார்கள். ஜனவரி-ஃபெப்ருவரி இங்கு உச்ச குளிர்காலமாதலால் ஸ்வெட்டர், விண்டர்-ஜாக்கெட்களின் சேல் தூள் பறக்கிறது. எங்கும் திருவிழாக்கூட்டம் போல் சாரிசாரியாக மனித நடமாட்டம். இளம் வயதினர்தான் அதிகம் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஜோடி ஜோடியாக எதையாவது வாங்க, எங்காவது இடம் பார்த்து உட்கார்ந்து எதையாவது திங்க என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஜனங்களும் டெல்லிக்காரங்கதானா! கிட்டத்தட்ட சென்னை ரங்கநாதன் தெரு போல ஆகிவிட்டது டெல்லியின் கனாட்ப்ளேஸ். அத்தகைய கூட்ட நெருக்கடி, குறிப்பாக மாலையில். ஞாயிற்றுக் கிழமைகளிலும் இதே நிலைதான். பழைய அந்த அமைதியான,கம்பீரமான அழகு எங்கே? அது இனி திரும்பப் போவதில்லை. காலம் தலைநகருக்குச் செய்த கோலம். தவிர்க்கமுடியாத மாற்றங்கள் வாழ்வில் செய்யும் ஜாலம்!

* * *

எட்டு முட்டி விழுந்த ஒன்று !

என்னத்தச் சொல்ல! இப்ப்டித்தான் இருக்கு நம்ப கிரிக்கெட் டீமின் கத!

தென்னாப்பிரிக்காவிடம் பட்ட அடியிலிருந்து இன்னும் விடுபட்டபாடில்லை நமது டீம். ஒரு சைக்கலாஜிக்கல் மைண்ட்செட்டில் தடவிக்கொண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவையாவது மிகவும் வலுவான அணி எனச் சொல்லலாம். ஒருநாள் தரவரிசையில் முதலாவது இடத்தில் இருந்த இந்திய அணி, எட்டாவது இடத்திலிருக்கும் நியூஸிலாந்திடம் முட்டுப்பட்டுக் கீழே விழுந்து இப்படித்தான் கால், கையை உடைத்துக்கொள்ள வேண்டுமா என்ன? இதில் கரண்ட் உலக சாம்பியன் என்கிற பதக்கம் வேறு நமது கழுத்தில் இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறது. எகிறும் வேகப்பந்துகளை எதிர் கொள்ள முடியவில்லை நமது பேட்ஸ்மன்களால். குறிப்பாக நமது இளம் துவக்க ஆட்டக்காரர்களால். துவக்க ஆட்டக்காரர்களே அடிக்கடி துவண்டு விழுந்தால், மிட்டில் ஆர்டர் என்ன செய்யும்? விராட் கோஹ்லி, மகேந்திர சிங் தோனி இவர்களைத் தவிர மற்ற பேட்ஸ்மன்கள் நியூஸிலாந்துக்கு டூரிஸ்ட் விசாவில் சென்றிருப்பதாகத் தெரிகிறது. ஐந்திலுமா இப்படி வழிய வேண்டும்?

நமது வேகப்பந்துவீச்சு பற்றிப் பேசுவதற்கு ஏதுமில்லை. அப்படி ஒரு பந்துவீச்சு நம்மிடம் இருக்கிறதா என்பதே ஒரு கேள்விக்குறிதான். வீசும் காற்று, வேகமாக எகிறும் பந்து என ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் தோதாக அமைந்திருந்தும், நமது பந்துவீச்சாளர்களால், லைன், லென்த் சரியாகப் பிடித்துப் பந்து போடமுடியவில்லை. யார்க்கர் போடத் துப்பில்லாமல், ஃபுல் டாஸையும், ஹாஃப் வாலிகளையும் வாரி வழங்கி நியூஸிலாந்து ஒவ்வொரு மேட்சிலும் 300-தாண்டக் கடுமையாக ஒத்துழைத்தார்கள் நமது வேகப்பந்து வீச்சாளர்கள். ஓரளவுக்கு புவனேஷ்வர் குமாரும், கடைசி மேட்சில் வருண் ஆரோனும் பரவாயில்லை.

அடுத்த ஆண்டு வரவிருக்கும் உலகக் கோப்பை நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா மைதானங்களில்தான் நிகழவிருக்கிறது. இந்தமாதிரி சொதப்பல் பேட்ஸ்மன்கள், திசை தெரியா பந்துவீச்சாளர்கள் துணையுடன் நமது டீம் உலகக் கோப்பையில் இறங்கினால் என்ன ஆகும்? பரிதாபமான காட்சி ஒன்று கண்முன் தோன்றி மறைகிறது. தவிர்க்க முடியாத அவமானம்தான் நமக்காகக் காத்திருக்கிறதா?

* * *

மனம் கொள்ளாக் காட்சி

உலகம் எதை நோக்கி
பரபரப்பாய் ஓடுகிறதோ
அதிலிருந்து விலகி நிற்பவன்
கூட்டத்திலிருந்து விலகியும்
கூட்டத்தையே அவதானிப்பவன்
வெளியிலிருந்து உள்நோக்க
உள்ளும் வெளியுமானவன்
நானொரு விசித்திரன்
நானொரு வெளியாள்

***

தொடரும் துயரம்

குளிர்கால மாலை
குதிக்கிறது டெல்லி
மதிமயங்கும் இளசுகள்
கூத்துகள், கும்மாளம், கூடாத நேசம்
கூடவரும் நிழலாய் ஆபத்துகள்
எதுவும் அறியா
எகத்தாள இளைஞருக்கு
எப்படிப் புரியவைப்பேன்
என் செய்வேன் நான் ?

***