கேக்கென்றும் கோக்கென்றும்
வாங்கி அடைக்கிறார்கள்
ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டு
என்ன போய்க்கொண்டிருக்கிறது உள்ளே
என்கிற பிரக்ஞை ஏதுமின்றி
கையிலே காகிதம்
காகிதத்தில் ஒரு சின்ன சமோசா
ஆவலோடு வாங்கிக்கொண்டு
அழகாக சமோசாவில் ஓட்டை போட்டு
அதற்குள் சாஸைப் பீற்றி அடிக்கிறாய்
வாயில் எச்சிலூற
வாகாக அதைப் பிடித்துக்கொண்டு
கொஞ்சம் கொஞ்சமாக
ரசித்துச் சாப்பிடுகிறாய்
தீர்ந்துவிடப் போகிறதே என்கிற கவலையோடு
சுவை துடிக்கும் உன் நாவில்
மெல்லக் கரைகிறது சமோசா
புரிகிறது பொடியனே
நீ உண்கிறாய்
அவர்கள் தின்னப்படுகிறார்கள்
***