படபடக்கும் பச்சை இலைகள்
கிளைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றன
எத்தனைக் குலுக்கியும் விடுவதாயில்லை
பாழும் பேய்க்காற்று சீறிச் சீறித்தான் வீசுகிறது
சுழட்டிச் சுழட்டித்தான் அடிக்கிறது
அதற்கென்ன இப்படி ஒரு கோபம்
இந்த அப்பாவி மரத்தின் மீது
பொட்டல் காட்டில் தனியாக இந்த மரம்
காற்றின் கடும் சீற்றத்தைத் தாங்க முடியாமல்
அரண்டு மிரண்டு ஆடுகிறது
அதன் தலையைப் பற்றி உலுக்கி உலுக்கி
ஏதாவது பலி கொடு என உருமுகிறது பேய்க்காற்று
தப்பிக்க வழியின்றி
தாய் மரத்திலிருந்து பிடியைத்
தளர்த்திக்கொள்கின்றன
தங்கள் கடமையை உணர்ந்துவிட்டிருந்த
உடம்பெல்லாம் மஞ்சளான இலைகள்
வெற்றிக்களிப்பில் ஊதி ஊதி வீசுகிறது காற்று
நழுவி விழும் இலைகளைத் தூக்கிக் கடாசுகிறது
உயரத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட இலைகள்
பூமியின் மீது மோதி விழுகின்றன
புழுதிக்காயம்பட்டுப் புரளும் மஞ்சள் இலைகளைத்
தரதரவெனத் தன் போக்கில்
இழுத்துச் செல்கிறது பேய்க்காற்று
**