கூட்டம் கூடாதீர்கள்
கூடிக் கும்மியடித்து என்ன ஆகப்போகிறது
குலமென்ன கோத்ரமென்ன
எந்த ஊர் என்ன பேர்
என்றெல்லாம் கண்டுபிடித்து
என்ன பெரிதாகக் கிழித்துவிடப் போகிறீர்கள்
இருக்கும்போதே கவனித்ததில்லை
இறுகிப்போனபின் உருகி என்ன பயன்
விருவிருவென ஆகவேண்டியதைப் பாருங்கள்
விறகுக் கட்டைகளைச் சேகரியுங்கள்
எரிப்பதற்கு இன்னும் ஏதாவது அடுக்குங்கள்
கொளுத்துங்கள் கொளுத்திவிட்டு
கொழுந்துவிட்டு எரியும் ஜுவாலையில்
ஏதாவது தெரிகிறதா எனப் பாருங்கள்
சாம்பலாகிச் சரிந்தபின்
சாமி பூதம் என அரற்றுங்கள்
சத்தம் போட்டுக்கொண்டு வந்து இறங்குவதும்
சப்த நாடியும் ஒடுங்கி போய்ச்சேருவதும்தான்
எல்லோருக்கும் விதிக்கப்பட்டுள்ளது
கூடிக் கூத்தடிக்கும் உமக்கும்
தூரநின்று பார்க்கும் எனக்கும்
சேர்த்துத்தான்
***