மெட்ரோவில் அன்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். பீக் ஹவர் ஆதலால் செம கூட்டம். கனாட்ப்ளேஸ் வழியாக கிழக்கு டெல்லி, நோய்டா நோக்கிச் செல்லும் வண்டி. கூட்டத்துக்குக் கேட்கவேண்டுமா என்ன? மெட்ரோவின் அருமையான ஏசியிலும், நின்றுகொண்டிருப்போர் புஸ்..புஸ் என அடுத்தவர் தோளிலோ, முகத்திலோ மூச்சுவிடும் அளவிற்கு ஒரு நெரிசல். புளிமூட்டைபோல் அத்தனைபேரையும் சுமந்துகொண்டு மெட்ரோ சீறிச் சென்றது. உள்ளே மொபைல் பேச்சு, தங்களுக்குள் நேர்முகப்பேச்சு சகிதம் பிஸியாக பயணிகள். வண்டி நின்றவுடன் பாய்ந்து இறங்க என கதவுக்கருகில் எப்போதும் நெருக்கும் கூட்டம். நெருங்குகிற ஸ்டேஷனைக் குறித்து அறிவிப்பு வந்தது ரயிலில்: ’அடுத்துவரும் ஸ்டேஷன் அக்ஷர்தாம். கதவுகள் வலதுபுறமாகத் திறக்கும்’- பெண்ணொருத்தியின் தெளிவான ஆங்கிலக் குரல். அறிவிப்பைக் கேட்டதும் ‘அதான் எனக்குத் தெரியுமே!’ என்பதுபோல் யாவரும் இருக்க, பக்கத்தில் நின்றிருந்த நான்கு வயது சிறுவனின் குரல் பதட்டமாக உயர்ந்தது: ‘வலதுபுறத்துக்கு பதிலாக இடது புறம் கதவு திறந்துவிட்டால்…என்ன ஆகும்?’ அருகில் நின்றுகொண்டிருந்த அம்மா, அப்பாவைப் பார்த்துத்தான் இந்தக் கேள்வி. அம்மாவின் முகத்தில் புன்சிரிப்பு. மெல்லத் தலையாட்டுகிறாள். பதில் வரப்போகிறது என சிறுவனோடு நானும் ஆவலாகிறேன். ஒரு பதிலும் இல்லை அப்போதுதான் கவனித்தேன். அம்மாக்காரி அலைபேசியில் தன் தோழன் அல்லது தோழியுடன் அரட்டையில் ஆழ்ந்திருக்கிறாள் போல. அந்தப்பக்கம் என்ன சுவாரஸ்யமோ முகத்தில் தன்னை மறந்த சந்தோஷம். பிள்ளையின் உரத்த கேள்வி காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.. சிறுவன் ஏமாற்றத்துடன் ஆனால் பதற்றம் அதிகமாகி கேள்வியை தன் தகப்பனை நோக்கி இப்போது வீசுகிறான்: ‘வலதுபுறம் திறப்பதற்குபதில் இடதுபுறம் கதவு திறந்தால் என்ன ஆகும், சொல்?’ வண்டி இதோ நிற்கப்போகிறது. ஏதாவது இசகுபிசகாக ஆகிவிடப்போகிறதே என்கிற கவலை அவனது பிஞ்சுக்குரலில் அவசரப்படுத்துகிறது. அந்த அப்பாவை நானும் பதற்றத்தோடு பார்க்கிறேன். சொல்லுங்கள் அப்பாவே! அவரோ மெட்ரோவின் கூரையில் ஏதோ தேடுவதுபோல் தெரிந்தது. முகத்தில் ஒரு சோகம். பதில் தெரியவில்லையே என்றா.? ம்ஹூ,ம்.. அவரது முகத்தை பார்த்தால் அவருக்குத் தன் பையனோ, மனைவியோ அருகிலிருக்கிறார்கள் என்கிற ப்ரக்ஞையே இருப்பதாகத் தெரியவில்லை. அம்மா ஒரு உலகில். அப்பா இன்னொரு உலகில். குழந்தையோ இந்த நிதர்சன உலகின் நெருக்கும் பிரச்சனையோடு தடுமாறுகிறான்.
வண்டி நின்றது. பையன் பதற்றத்தோடு இடது வலதாகப்பார்க்க, நல்ல வேளை! அறிவிக்கப்பட்டது போலவே வலதுபக்கக் கதவு சரியாகத் திறந்து கொண்டது. சிறுவனின் முகத்தில் ஆறுதல், புன்னகை. அவனுடைய எமர்ஜென்சியை மெட்ரோவே சுமுகமாகத் தீர்த்துவிட்டது. மீண்டும் அந்த அம்மா அப்பாவைக் கொஞ்சம் நிதானமாக நோக்குகிறேன். அம்மாவின் முகத்தில் இன்னும் மாறாத மந்தஹாசம். மொபைல் பேச்சு ஏற்படுத்திய திவ்யமான பரவசம். ஆஃபீலிருந்து வெளிவந்த பின்னும் கழுத்திலிருந்து இறக்காது, இன்னும் தொங்கவிட்டிருக்கும் பேட்ஜ் ஐபிஎம் என்றது பெருமையாக. கையில் ஹாண்ட்பேக்குடன், சோர்வாக ஏதோ நினைவில், ஓடும் ரயிலோடு சுருதி பிசகாமல் குலுங்கி நிற்கிறார் சிறுவனின் தகப்பன். என்ன கல்யாணம் செய்து கொண்டு என்ன பெரிதாக வாழ்கிறீர்கள்? என்ன சம்பாதித்து என்னத்தக் கண்டீர் நீங்கள் இருவரும். உலகம் மெச்சுவதற்காக கழுத்தில் தொங்கும் கவர்ச்சியான பேட்ஜ், டை, அட்டகாசப் பேச்சு இத்யாதிகள். பெற்ற பிள்ளை அதுவும் சிறுகுழந்தை- அவன் கூட வந்திருப்பதே நினைவிலில்லை. அவனுடைய திடீர்க் கவலை விளைவித்த குறுகுறுப்பான கேள்வி எப்படி சார் காதில் விழும்? ஒரு பொது இடத்தில், அதுவும் கூட்ட நெரிசலில்கூட, அருகிலிருக்கும் தன் குழந்தையை மறந்திருக்கும் அளவுக்கு மனநிலையிருந்தால், இந்த வாழ்க்கை இத்தகு தம்பதியரை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்? ஏதாவது புரிகிறதா இந்தப் பெற்றோருக்கு? ஏதோ தவறு சன்னமாக, ஆனால் நிச்சயமாக நடந்துகொண்டிருக்கிறது என்கிற பல்பு இவர்களது மண்டைக்குள் எப்போது எரியும்? அதற்குள் மிகுந்த நேரமாகிவிட்டிருக்குமே?
**