சரக்கு இருந்தா….!

பழைய படம் ஒன்று-எம்.ஜி.ஆர் நடித்த ’குலேப காவலி’யா? அந்தப் படத்தில் ஒரு தெருக்கூத்து சீனில் ஒரு பாட்டு ; அதில் ரெண்டுவரி இப்படி வரும்: “சரக்கு இருந்தா அவுத்து விடு! இல்ல, சலாம் போட்டு ஓடிவிடு!..” ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தினாலும் இந்த உலகம் சரக்கு (அட! அந்த சரக்கை சொல்லலைப்பா!) இருப்பவர்களைத்தான் மதிக்கிறது. இப்போதெல்லாம் சரக்கு இல்லாத கேசுகளும் மக்களைக் குழப்பறதுக்குன்னே மேடைக்கு வந்துவிடுகிறதுகள். அதற்குத்தான் எச்சரிக்கை மேல்குறிப்பிட்ட வரிகளில். சரக்கு இல்லாமல், ஒரு திறமையும் இல்லாமல் அலட்டிக்கொள்பவனே, போதும் நீ காட்டிய அபத்தம்! உடனே இடத்தைக் காலிபண்ணு. போவதற்கு முன் இங்கு எவனிடம் திறமை தெரிகிறதோ அவனுக்கும், பார்த்துக்கொண்டிருக்கும் ஜனங்களுக்கும் ஒரு சலாம் போட்டு ஓடிவிடு என்கிறது இந்த உலகம். அது அப்படிச் சொல்வதும் சரிதான். இந்த சராசரிகளும், ’சராசரிக்குக் கீழ்’களும் படுத்துகிற பாடு தாங்க முடியவில்லை.

இருந்தாலும் மேதமையை, உயர்திறமையை உடனே அடையாளம் காண்பதில்லை, அங்கீகரிப்பதில்லை, மதிப்பதில்லை இந்த சமூகம். வெறும் தோற்றத்தை வைத்து, ஏழ்மை, எளிமையைப் பார்த்து ஒரு கவிஞனை, கலைஞனை, திறனாளனை, மேதையை அது உதாசீனப்படுத்தப் பார்க்கிறது. பல உழைப்புகள், கஷ்டங்களைத் தாண்டி, மேடை ஏற இருப்பவனை, அவனுடைய திறனை வெளிப்படுத்துவதற்கு முன்னமேயே கேலி செய்து, கிண்டல் செய்து, அலட்சியப்படுத்தி சீனில் இருந்து அகற்றிவிடப் பார்க்கிறது. விரட்டி விட்டுவிட முயற்சிக்கிறது. இந்தத் தடங்கல்களையெல்லாம் தாண்டி ஒருவன் தன் திறமையை, மேதமையை நாலு பேருக்கு முன் வெளிப்படுத்திவிட்டால், முன்பு கேலிசெய்த அதே சமூகம் இப்போது தடுமாறுகிறது. தயங்குகிறது. பின் மெல்ல கைதட்ட ஆரம்பிக்கிறது. அதற்கப்புறம் ஒரே ஹீரோ ஒர்ஷிப் தான். அதிலும் நமது சமூகத்தை மிஞ்சும் அமைப்பு எங்கும் இல்லை.

ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் இப்படி என்றில்லை. இந்த உலகமே இப்படித்தான். ஆனானப்பட்ட ஷேக்ஸ்பியரையே, அவரது மொழிவல்லமை, மேதமையை அறியாமல், ஓரங்கட்டி, குதிரை லாயத்தில் உட்கார்த்தியிருந்தது அவர் வாழ்ந்த சமூகம். பிழைப்பிற்கு எதை எதையோ செய்யவைத்தது. மொஸார்ட் போன்ற இசை மேதை எல்லாம் தங்கள் திறமை வெளிப்படும் உச்சகாலத்திலும், கவனிப்பாரன்றி, தெருவின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு, வாழ்வின் விளிம்பில் இருந்துகொண்டு, தன்னை மறந்து, தங்கள் தங்கள் கலையில் லயித்திருந்தனர். அவர்களது காலத்தில் அவர்களை, அவர்களிடம் குடிகொண்டிருந்த கலையை இனம் கண்டுகொண்டவர்களில்லை. கேலிசெய்யப்பட்டும், சமூகத்தால் பழிக்கப்பட்டும், அலட்சியப்படுத்தப்பட்டும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தனர். அவர்களது மறைவுக்குப் பின் உலகம் தூக்கத்திலிருந்து விழித்ததுபோல், அவர்களையும், அவர்களோடு ஜீவித்திருந்த கலையையும் இனம் கண்டு கொண்டது. அவர்களைப் பாடியது…ஆஹா…என்றது. ஓஹோ.. என்றது. இது உலகின் இயல்பு.

நமது தமிழ்நாட்டில் கணித மேதை ராமானுஜன், மகாகவி பாரதி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பிரமிள், ஆத்மாநாம், வண்ண நிலவன் போன்றோரெல்லாம், வறுமை, வதைக்கும் துன்பம் எனக் கடினமான வாழ்க்கையிலும் தங்கள் மேதமையை, கலைத்திறனை உலகிற்குக் காட்டியவர்கள். எழுத்தன்றி, இசையன்றி, வேறு பல துறைகளிலும் வல்லுனர்கள், மேதைகள் உண்டு. கவிஞன், எழுத்தாளன், கலைஞன், மேதை என்பவனின் பாதை எப்போதும் கரடுமுரடாகவே இருந்திருக்கிறது. குறிப்பாக அவனது ஆரம்ப காலங்களில். இந்தமாதிரி வகையெல்லாம், சமூகத்தின் அடிமட்டத்திலிருந்தோ, நடுத்தர வர்க்கத்திலிருந்தோதான் பெரும்பாலும் வருகிறார்கள். சிலர் வயத்துப்பாட்டுக்கே வழியில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். வாழ்க்கை அவர்களை அடித்துப்புரட்டி, புடம்போட்டு, புடம்போட்டு, மெல்ல மேடையை நோக்கி நகர்த்துகிறது. இவர்களில், வாழ்வின் அடிதாங்காமல் மனம் பிறழ்ந்தவரும், மேடையையே பார்க்காதவரும், குடத்திலிட்ட விளக்கென வாழ்ந்து, விலாசமின்றி மறைந்தவரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

***

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in கட்டுரை. Bookmark the permalink.

2 Responses to சரக்கு இருந்தா….!

 1. Murali Manikandan says:

  உண்மை தான்.

  இந்த மாதிரியான யதார்த்தத்தை எப்படி எதிர்கொள்வது என்ற ஒரு அருமையான புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்தது…
  “48 Laws of Power” என்ற அந்த புத்தகத்தை, அருமையான எளிய தமிழில், மொழியாக்கம் (மொழிப்பெயர்ப்பு அல்ல…) திரு ரா கி ரங்கராஜன் எழுதிருக்கிறார், (நக்கீரன் வெளியீடு).

  அதில், குறிப்பிடப்படும், மையக்கருத்து என்னவென்றால், நல்லவனாக மட்டும், இருந்தால் போதாது, வல்லவனாகவும் இருக்கவேண்டும்… இதில், குறிப்பிடப்படும் வல்லமை, கலைத்திறமை மட்டும், அல்ல…. அதை, மக்கள் மத்தியில், சமுடாயக்கண்ணை பறிக்கும் திறமைதான் பிரதானம் ….

  வாய்ப்பு கிடைத்தால், வாசித்து பாருங்கள்… மொழியாக்கம் என்பதால், இதில் குறிப்பிடப்படும் அனைத்து உதாரணங்களும் ஐரோப்பிய சீனத்து உதாரணங்கள்.

  முரளி மணிகண்டன்

  Like

 2. chandraa says:

  mr eekanthan how is it that people suffered a lot in their younger days gradually rising up occupy a good status possess income and help others in distress….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s