நியூசிலாந்தில் ஜனவரி, பிப்ரவரியில் நடக்கவிருக்கும் 2 டெஸ்ட்டுகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது இந்திய அணி. இதற்கான அணிகளை இந்திய கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிகாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் தோல்விகளுக்குப் முக்கிய காரணம் ’முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள்’ என நமது மீடியாவால் கொண்டாடப்படும் ஜகீர்கான், இஷாந்த் ஷர்மா என்கிற இருவரும் பந்து போட்ட அழகுதான். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான பிட்ச்களில் அவர்கள் மெனக்கெட்டு சொதப்பி நாட்டிற்காக சாதனை புரிந்தார்கள். அதுவும் டர்பன் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சர்வசாதாரணமாக 500க்கு எகிறியதற்கு இந்த இரண்டு ’அனுபவ வீரர்கள்’ தான் காரணம். புதியவரான முகமது ஷமியிடம் இருந்த தீவிரம், முனைப்பு இந்த இரண்டு பிரஹஸ்பதிகளிடமும் எள்ளளவும் இல்லை. டெஸ்ட் மேட்சில் தான் போடும் 30-க்கும் மேற்பட்ட ஓவர்களில் ஒரு தரமான யார்க்கர் கூடப் போடத் துப்பில்லாதவர்களை வேகப்பந்துவீச்சாளர் என அழைப்பது இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். இந்த இரண்டு வேக ஜாம்பவான்களும் புதிய டெஸ்ட் அணியில் மீண்டும் எப்படியோ இடம் பிடித்துவிட்டார்கள்! அதுவும் எதிரி டீமிற்கு ’ரன் வழங்கும் வள்ளல்’ எனப் பெயர் பெற்றிருக்கும் இஷாந்த் ஷர்மா ஒருநாள் போட்டிக்கான அணியிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது இந்திய ரசிகர்களுக்கு எரிச்சலைத் தரும். இஷாந்த் ஷர்மா செலக்ஷன் – கோரி ஆண்டர்ஸன், ஜெஸ்ஸி ரைடர் போன்ற அதிரடி வீரர்களைக் கொண்டிருக்கும் ‘நியூலுக்’ நியூசிலாந்துக்குக் குஷியைத்தரும் என்பதில் சந்தேகமில்லை.
தென்னாப்பிரிக்க பிட்சில் சரியாக சாதிக்காத பேட்ஸ்மன்களான ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவனும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலம் என்பது இனி, விராத் கோஹ்லி, செத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே என்கிற மையத்தைச் சார்ந்திருக்கும் எனக் காட்டியிருக்கிறது சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர். டேல் ஸ்டேன், மார்னே மார்க்கெல் & கோ.-வின் அதிவேகத்தைப் பொறுமையாகவும், திறமையாகவும் சமாளித்த முரளி விஜய் டெஸ்ட் ஓப்பனராகத் தொடர்கிறார். ரஞ்சியில் நன்றாக விளையாடிக் காண்பித்த, இடதுகை துவக்க வீரரான கௌதம் கம்பீர் டெஸ்ட் அணியில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அது இந்தியாவின் அடுத்த தொடரில் நிகழக்கூடும்.
இந்திய அணியின் வரவேற்கத்த புதுமுகங்கள் மத்தியப் பிரதேச மிதவேகப் பந்துவீச்சாளர் ஈஷ்வர் பாண்டேயும் (Ishwar Pandey), பௌலிங் ஆல்ரவுண்டரான ஸ்டூவர்ட் பின்னியும் (Stuart Binny). பாண்டே 24 வயதானவர். கடந்த ரஞ்சி சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் செலக்டர்களின் கவனத்தை ஈர்த்தவர். பின்னி கர்னாடகாவின் லோயர் மிட்டில் ஆர்டர் பேட்ஸ்மன் –மிதவேகப் பந்துவீச்சாளர். ராஜஸ்தான் ராயல்ஸின் அதிரடி பேட்ஸ்மன். இவர்களோடு, ஜார்கண்டின் வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன் இரண்டாண்டு காய-ஓய்வுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளுக்கென, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 150.கி.மீ வேகத்தை எட்டிய ஒரே இந்திய பந்துவீச்சாளர் ஆரோன். இவர்கள் மூவரின் தேர்வு, வரவிருக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய டீம் பற்றிய செலக்டர்களின் சிந்தனை ஓட்டத்தைக் காண்பிக்கிறது. வாழ்த்துகள்.
தென்னாப்பிரிக்கா போலவே நியூசிலாந்திலும் நம் அணி சந்திக்கவிருப்பது கிரீன் பிட்ச்சுகளைத்தான். வெல்லிங்டன், ஆக்லண்ட் மைதானங்களில் கடுமையான ‘டெஸ்ட்’ நமது பேட்ஸ்மன்களுக்காகக் காத்திருக்கிறது. ‘When the going gets tough, the tough gets going‘ என்பார்கள். நமது பேட்ஸ்மன்களில் tough-ஆனவர்கள் தப்பிப்பிழைப்பார்கள். மற்றவர்கள் அனாயாசமாக வெளியே வந்து விழுவார்கள். பார்ப்போம்.
***