புத்தாண்டு மாலையில் புது டில்லி ராமகிருஷ்ணபுரம் ஸ்ரீநிவாசர் கோயிலுக்குச்சென்றிருந்தேன். குளிர் அதிகமானதாலும், இன்னும் ஆஃபீஸிலிருந்து வருகிறவர்களின் நேரம் ஆகவில்லை என்பதனாலும், கோவிலில் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. புத்தாண்டு தினமே ஹனுமத் ஜெயந்தியும் ஆதலால் வடை மாலை கழுத்தில் அணிவகுத்து அலங்கரிக்க, கம்பீர காட்சி தந்தார் ஆஞ்சனேயர்.சிறுகூட்டம் சன்னிதிக்கு முன் நிற்கிறது. அர்ச்சனைக்கு முன் புஷ்பம் நிரம்பிய தட்டை பக்தர்களுக்குக் காண்பித்து தொட்டுக் கொடுக்கச் சொல்கிறார் அர்ச்சகர். எல்லோரும் மெதுவாகத் தொட்டு வணங்கினோம். ஒரு மத்திம வயதுப் பெண்மணி, கைக்கும் காதுக்கும் இடையில் செல்ஃபோனை அழுத்திக்கொண்டு, ஒரு கையால் தட்டை தொடுவதுபோல் காண்பித்து ’ஹேப்பி நியூ இயர்!’ என்று சொல்லிக்கொண்டே ஃபோனில் மும்முரம் காட்டுகிறார். முகத்தில் ஃபோன் உரையாடலின் தீவிரம். நிற்பது ஆஞ்சநேயரின் முன்னால். சொல்வது ஹேப்பி நியூ இயர்! நான் ஒரு கணம் அயர்ந்தேன். வாழ்த்து ஆஞ்சனேயருக்கா! அப்படியானால் அனுமாருக்கு, நேரில் வந்து புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த ஒரே பெண்மணி என கின்னஸ் புக்கில் இடம் பெறத் தகுதி வாய்ந்தவர்தான் அவர்.
வழிபட என்று ஆண்டவனின் சன்னிதி முன் வருபவர் அனைவரும் பக்தர்கள் தான். இருந்தும் சிலருக்கு குறிப்பாக, பொது இடங்களில் வழிபடுதலில், சில behavioural corrections, some fine tuning தேவைப்படுகிறது போலும். நாளுங்கிழமையுமாக, டெல்லி போன்ற நகரில் மெனக்கெட்டு கோயிலுக்கு வருகிறவர்கள் கடவுளை வணங்கத்தான் வருகிறார்கள். மறுக்கவில்லை. இருந்தும், சன்னிதியில் நின்று சத்தம் போட்டு யாருடனோ நேரிலோ, ஃபோனிலோ பேசுவது, அரட்டை அடிப்பது என்பது அனேகமாக ஒவ்வொரு கோயிலிலும், அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. கேட்பாரில்லை. பக்தி சிரத்தையோடு சன்னிதியில் வழிபடும் மற்றவர்களின் பிரார்த்தனையை இது எவ்வளவு பாதிக்கும் என்பது பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. தானுண்டு. தன் பேச்சுண்டு என்றிருப்பவர்கள். கோயிலுக்குள் நுழைந்ததும் அந்த பாழாய்ப்போன செல் ஃபோனை சில நிமிடங்களுக்காகவது அணைத்து வைத்தால்தான் என்ன? குடியா முழுகிப்போகும்? இதையெல்லாம் இது போன்றவர்களுக்கு யார் புரியவைப்பது? யாராவது இதமாக சொல்ல முயன்றால்தான் இவர்கள் கேட்டுவிடுவார்களா? இதுபோன்ற நபர்கள் சிறுசுகளை எதற்கெடுத்தாலும் ஓவராகக் கண்டிப்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த வயதிலும் சில அடிப்படைகள் பெரிசுகளுக்கே புரியவில்லை எனில், இளசுகளை எதற்கெடுத்தாலும் குறை சொல்லி என்ன பயன்?
***
அந்த fine tuning கை செய்ய வேண்டியது நாம் தான்…
யார் என்ன சொல்லிவிடப் போகிறார்கள் என்ற நினைப்பு தான் இதற்கு காரணம்.
LikeLike